badge

Followers

Sunday, 21 October 2018

எது கெடும்???



எது கெடும்

பாராத பயிரும் கெடும்
பாசத்தினால் பிள்ளை கெடும்
கேளாத கடனும் கெடும்
கேட்கும்போது உறவு கெடும்
தேடாத செல்வம் கெடும்
தெகிட்டினால் விருந்து கெடும்

ஓதாத கல்வி கெடும்
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
சேராத உறவும் கெடும்
சிற்றின்பன் பெயரும் கெடும்
நாடாத நட்பும் கெடும்
நயமில்லா சொல்லும் கெடும்

கண்டிக்காத பிள்ளை கெடும்
கடன்பட்டால் வாழ்வு கெடும்
பிரிவால் இன்பம் கெடும்
பணத்தால் அமைதி கெடும்
சினமிகுந்தால் அறமும் கெடும்
சிந்திக்காத செயலும் கெடும்

சோம்பினால் வளர்ச்சி கெடும்
சுயமில்லா வேலை கெடும்
மோகித்தால் முறைமை கெடும்
முறையற்ற உறவும் கெடும்
அச்சத்தால் வீரம் கெடும்
அறியாமையால் முடிவு கெடும்

உழுவாத நிலமும் கெடும்
உழைக்காத உடலும்  கெடும்
இறைக்காத கிணறும் கெடும்
இயற்கையழிக்கும் நாடும் கெடும்
இல்லாலில்லா வம்சம் கெடும்
இரக்கமில்லா மனிதம் கெடும்

தோகையினால் துறவு கெடும்
துணையில்லா வாழ்வு கெடும்
ஓய்வில்லா முதுமை கெடும்
ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
அளவில்லா ஆசை கெடும்
அச்சப்படும் கோழை கெடும்

இலக்கில்லா பயணம் கெடும்
இச்சையினால் உள்ளம் கெடும்
உண்மையில்லா காதல் கெடும்
உணர்வில்லாத இனமும் கெடும்
செல்வம்போனால் சிறப்பு கெடும்
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்

தூண்டாத திரியும் கெடும்
தூற்றிப்பேசும் உரையும் கெடும்
காய்க்காத மரமும் கெடும்
காடழிந்தால் மழையும் கெடும்
குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்
குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்

வசிக்காத வீடும் கெடும்
வறுமைவந்தால் எல்லாம் கெடும்
குளிக்காத மேனி கெடும்
குளிர்ந்துபோனால் உணவு கெடும்
பொய்யான அழகும் கெடும்
பொய்யுரைத்தால் புகழும் கெடும்

துடிப்பில்லா இளமை கெடும்
துவண்டிட்டால் வெற்றி கெடும்
தூங்காத இரவு கெடும்
தூங்கினால் பகலும் கெடும்
கவனமில்லா செயலும் கெடும்
கருத்தில்லா எழுத்தும் கெடும்

Monday, 8 October 2018

மதுரை மீனாட்சி அம்மன் ...தனி சிறப்புகள்


 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி.

சீரடி சாய்பாபா பற்றிய 40 தகவல்கள்....




சீரடி சாய்பாபா பற்றிய இந்த 40 முக்கிய தகவல்களும் உங்களுக்கு தெரியுமா..?

 சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டு உள்ளது.

1. சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டு உள்ளது.
2. சாய்பாபா சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூப மாக வடிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் எங்கு நின்றாலும் பாபா உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும்.
3. சீரடி ஆலயத்தை மிக, மிக சுத்தமாக வைத் திருக்கிறார்கள்.
4. ஆலயத்துக்குள் மினி மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு ரத்ததானம் செய்யலாம்.
5. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆலய வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ் ஒன்றை எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறார்கள்.
6. ஆலயத்துக்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த தனி கவுண்டர் வசதி உள்ளது.
7. கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டு உள்ளது.
8. பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்துக்குள் தனி இடம் உள்ளது.
9. மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென் றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம்.
10. சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்துக்கு பணம் கொடுக்கலாம்.

11. கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
12. கோவில் உள்ளே ஒரு இடத்தில் விநாயகர், சனீஸ்வரன் மற்றும் சிவனுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டு உள்ளன.
13. திருப்பதி மாதிரி சீரடியிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருப்பதியில் ஜருகண்டி, ஜருகண்டி என்பார்கள். சீரடியில் பக்தர்களை சலோ, சலோ… என்று சொல்லி விரைவுபடுத்துகிறார்கள்.
14. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வேறு வழியின்றி பக்தர்கள் கையை பிடித்தும் இழுத்து விட்டு விடுவார்கள். எனவே பாபாவை கண்டதும் மனம் உருக வேண்டி விடுங்கள்.
15. பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயியிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.
16. சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழந்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள்.
17. சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
18. சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 நேர ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியம் தான்.
19. சீரடிக்கு வரும் பக்தர்களில் 99 சதவீதம் பேர் சாய்நாத் மகாராஜ்க்கு ஜே என்று சொல்லத் தவறுவது இல்லை.
20. சீரடியில் சாதாரண நாட்களை விட வியாழக் கிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டும் பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பு மடங்கு இருக்கும்.

21. சீரடியில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. வேண்டுதல்கள் வைத்திருப்பவர்கள் இந்த இரு நாட்களில் செல்லலாம்.
22. சீரடியில் ஏராளமான ஆட்டோக்கள் உள்ளன.பெரும்பாலும் யாரும் பக்தர்களை ஏமாற்றுவதில்லை.
23. சீரடி தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
24. முன்பெல்லாம் சீரடிக்கு வட இந்திய மக்கள் தான் அதிகம் வந்து சென்றனர். தற்போது தென் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் சீரடிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
25. சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.
26. பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாலு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். அவரவர் அதிருஷ்டம் எந்த வரிசையில் அமைகிறது என்பது உள்பக்க வரிசையில் செல்வது நல்லது. கடைசி வரிசையில் அமைத்து முன்னால் போய் விட்டால் பாபாவை பார்ப்பது சிரமமாக இருக்கும்.
27. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை, பஜன், ஆரத்தி எல்லாம் ஆகிறது. அது வரை நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான். க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும்.
28. விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை.
29. ரூ.200 செலுத்தி பாஸ் பெற்ற பக்தர்களுக்கு சிறப்பு தரிசனமும் உண்டு. ஐ.எ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற முக்கிய அதிகாரிகளின் கடிதம் இருந்தால் ஏதோ ஒரு வழியாக அனுமதிக்கிறார்கள். அப்படி இருந்தாலும் கடைசியில் சன்னிதானத்துக்குள் போகும் போது எல்லாம் ஒன்றாகத்தான் போக வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு தனி வழி உண்டு. ஆனால் அதற்கு அவரவர் ஆதார் அட்டையை காட்டி கவுண்டரில் பெற்ற பாஸ் தேவை.
30. சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம்.

31. உண்மையில் பாபா கோவிலுக்குள் பக்தர்கள் கொண்டு வந்து தரும் எதையுமே ஏற்பதில்லை. நம்மிடமே திருப்பித் தந்து விடுகிறார்கள். ஆகவே பக்த ஜனங்களே வெறும் கையோடும் மனம் நிறைய பிரார்த்தனைகளை சாய்பாபா சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக்கொண்டால் போதும்.
32. வெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைக்கும் படி அறிக்கை பலகை கேட்டுக் கொள்கிறது. இதுவும் அவரவர் விருப்பம் தான். கட்டாயமில்லை. ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள்.
33. வாமன் தாத்யா என்ற சாயி பக்தர் தினமும் இரண்டு சூளையிலிடப்படாத பானைகளைக் கொடுப்பார். பாபா தம்முடைய கைகளாலேயே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.
34. சாய் என்ற சொல்லுக்கு, சாட்சாத் கடவுள். என்ற அர்த்தமாம்.
35. பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர்.
36. சாய்பாபா கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கி இருக்காங்க. முதல்ல கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் ஐந்து நுழைவாசல்கள் இருக்குது.
37. கேமரா, செல்போன்களுக்கு கோவிலில் அனுமதி கிடையாது. அங்கேயே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு, நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க.
38. மேடையில் சமாதியின் பின்புறம், இத்தாலி யன் மார்பிலான பாபாவின் சிலை அழகான தங்கக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம். இந்த சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது. தூண்கள் அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே தங்கம் தகதகன்னு மின்னுது.
39. பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவின் சமாதிக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாகக தருகிறார்கள். பாபா சிலைக்கு கோவில் சார்பில் அணிவிக்கின்ற ஒரு மாலையை தவிர வேறு அணிவிப்பது கிடையாது.
40. கோவிலுக்குள்ள சாயிபஜன் நடந்து கொண்டே இருக்கும். அது கோவில் முழுக்க ஒலிக்கிற மாதிரி ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.



🕉 ஓம் ஸ்ரீசாய்ராம் 🕉