badge

Followers

Showing posts with label paarvaigal. Show all posts
Showing posts with label paarvaigal. Show all posts

Friday, 19 June 2015

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு."







ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன்
நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள்
நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய்
அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று
அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில்
அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம்
உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து
அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை
கண்டு
" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று
கேட்டார்.
அதற்கு இவர் " எனது தொழில்
நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து
போய்விட்டேன் " என்றார்.
" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால்
அவர்.
" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.
" அப்படியா, நான் யார் தெரியுமா ?
" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல
செல்வேந்தரின் பெயரை
சொன்னார்.
அசந்து போனார் இவர்...
" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி
விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம்
எல்லாம் சரியாகி விடும் " என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக்
புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம்
நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ
கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக
கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும்
சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த
பணத்தை எனக்கு திருப்பிக்
கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம்
இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் "
என்று சொல்லி விட்டு செக்கை
இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார்
அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக
அலுவலகத்திற்கு சென்றார். தன்
அறைக்குள் சென்று அந்த செக்கை
தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார்.
பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து
ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர
ஏற்பாடு செய்ய சொன்னார்.
ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில்
அமர்ந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் பேச
ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது
நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய்
உள்ளது ஆனால் அந்த பணத்தை
தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி
ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ?
என்று ஆராய்ந்து அதை களைந்து நமது
நிறுவனத்தை வெற்றிகரமாக
செயல்படுத்த நீங்கள் அனைவரும்
ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக்
கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன.
தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன.
மிக சரியாக அனைத்து ஊழியர்களையும்
ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச
செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய
தொழிலை பற்றியே இருந்தது.
மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள்
அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி
ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய
நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த
செல்வேந்த கொடுத்த 500
கோடிக்கான செக்கை எடுத்துக்
கொண்டு அந்த பூங்காவிற்கு
விரைந்தார்.
சென்ற வருடம் அமர்ந்த அதே
சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
காலை நெரம் ஆதலால் பனி
மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம்
கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும்
அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக்
கொண்டு ஒரு பெண்மணியும்
வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.
சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த
பெண்மணி மட்டும் வருகிறார் அந்த
செல்வேந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த
பெண்மணியிடம் " எங்கே அம்மா
உங்கள் கூட வந்தவர் ? " என்றார்
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "
உங்களுக்கு அவர் ஏதாவது
தொந்தரவு கொடுத்து
விட்டாரா? " என்றார்
இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?"
என்றார்.
அந்த பெண்மணி " இல்லை அய்யா
அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி
இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று
சொல்லி இங்கு இருப்பவர்களிடம்
தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு
கொடுத்து விடுவார் " என்றார்.
ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு
பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று
நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை
காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.
அன்பு நண்பர்களை ..
- இதிலிருந்து நாம் தெரிந்து
கொள்ள வேண்டியது
என்வென்றால் எந்த ஒரு விசயமும்
நம்மால் முடியும் என்று முதலில் நம்
நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது
வாழ்வில் முன்னேற முடியும்.
" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு."




Friday, 25 July 2014

நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...





ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான்.

அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"


"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."


"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"


"உன்னுடைய உடைமைகள்........."


"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"


"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........
அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."


"என்னுடைய நினைவுகளா?............."


"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........


அவை காலத்தின் கோலம்........"


"என்னுடைய திறமைகளா?..........."


"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."


"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"


"மன்னிக்கவும்...குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."


"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"


"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது...
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."


"என் உடல்?..........."


"அதுவும் உன்னுடையது கிடையாது..........
உடலும் குப்பையும் ஒன்று........."


"என் ஆன்மா?"


"இல்லை........அது என்னுடையது.........."


மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப்பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........காலி பெட்டியைக் கண்டு...கண்ணில் நீர் வழிய கடவுளிடம் 


"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?" எனக் கேட்க,


கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன்,நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது
என்று நீ நினைக்காதே........"


- ஒவ்வொரு நொடியும் வாழ்
- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது..................



(இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் )

Tuesday, 17 June 2014

சேவை சுவாரசியங்கள் !!!




நான் இங்கே சொல்லப்போவது சேவை பற்றிய சில சுவாரசியமான கதைகளை...

ஒரு நிமிஷம் ப்ளீஸ் .....

சமூக சேவை,தேச சேவை,மக்கள் சேவை,மகேசன் சேவை,கருட சேவை,அரையர் சேவை ,மொழி சேவை என்ற ரேஞ்சுல  ஏதோ சொல்லப்போறேன் என்று நினைக்காதீங்க....

நான் இப்போது பாடப்போவது நாம் சாப்பிட விரும்பும் சுவையான சேவை புகழை!!!


சமீபத்தில் நானும் என் தோழியும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம்...

முஹுர்த்ததுக்கு முதல் நாள் மாலை நிச்சயதார்த்தம்...

டிபன் பந்தியில்  நல்ல கூட்டம் .. 



மைசூர் போண்டா ...

பூரி கிழங்கு ....

பாதுஷா...

 தேங்காய் சேவை ....

லெமன்  சேவை ....

சட்னி ....

சாம்பார் ...

என்று மெனு அமர்க்களப்பட்டது...




அங்கே,

மற்ற ஐட்டங்களை  விட சேவைக்குத்தான்  ரசிகர் பட்டாளம் அதிகம்...

பெரிய தொழிலதிபர்கள்,ஐ.டி. கும்பல்,வைர தோடு,மூக்குத்தி அணிந்த பெண்மணிகள் ,சல்வார் மங்கைகளில்  ஆரம்பித்து அவர்களது சாதாரண டிரைவர்கள்,ஊழியர்கள்  வரை அனைவரும் விரும்பி இரண்டாம் / மூன்றாம் முறை கூட கேட்டு வாங்கிச் சாப்பிட்டது சேவையை தான்!(நாங்களும் கூட....)

வீடு திரும்பும் வழியில் ,சேவையைப்  பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம்...

பேச்சு சேவையைப் பற்றி .தான்...

முன்பு வீட்டில் அடிக்கடி சேவை செய்யப்படும்.
ஆனால் இப்போது சேவை மிகவும் அரிதான பலகார வகை ஆகிவிட்டது ...

ஏனோ ,சென்னை ஹோட்டல்களில் மற்ற டிபன் வகைகளைப்போல சேவை கிடைப்பதில்லை....

ரொம்ப நச்சு வேலை வாங்கும் பதார்த்தம் என்று யாரும் அதை தினசரி செய்வதில்லையோ ?

சில மெஸ்களில் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்...தெரியவில்லை!

சில கடைகளில் அலுமினியம் பாயில் டப்பாக்களில் சேவை விற்கப்படுகிறது...ஆனால் அது சைடு டிஷ்  இல்லாமல் விற்கப்படுவதால் அவ்வளவு சுவாரசியப்படுவதில்லை...

கோவையில் எல்லா ஹோடேல்களிலும் சேவை கிடைக்கும்...

அதிலும் அன்னபூர்ணா ஹோட்டல் சேவை- 
சட்னி ,சாம்பாருடன் அருமையோ அருமையாக இருக்கும்....

இடியாப்பம் சேவை போல இருந்தாலும் சேவை சேவை தான்...அதற்க்கு இணை அதுவே தான்!

கொங்குநாட்டில் சேவைக்கு" சந்தகை "என்று பெயர்...


வெல்லம் சேர்த்த  தேங்காய்ப்பாலுடன்
 சந்தகயை சாப்பிடுவது அந்தப்பக்கத்து வழக்கம்...

ஆனால் ஹோட்டல்களில்  சட்னி ,சாம்பாரே வழங்கப்படும்...

கர்நாடகாவிலும் சேவை" ஷாவிகே "என்ற பெயரில் பிரபலம்.

சாதா சேவையில்,சிறிது ஆவக்காய் ஊறுகாய்,அல்லது,
நல்லெண்ணெய்,மிளகாய்ப்பொடி கலந்து சாபிட்டுப்பாருங்கள் அதன் ருசியே தனி!

எள்ளு,வெள்ளம் கலந்து இடித்த சிகிளி பொடி  சேவை ஒரு தனி ருசி !

மதுரை,நாகர்கோவில்,திருநெல்வேலி பக்கங்களில் 
மோர்குழம்பு,வெங்காய வற்றல் குழம்பு போன்றவை காம்பிநேஷன் ....

பாலக்காட்டுப் பக்கம் சேவைக்கு உருளைக்கிழங்கு மசால்  சைடு டிஷ் !

சில வீடுகளில் ரசத்தில் ஊற வைத்த சேவை ஸ்பெஷல்!

சில இடங்களில் குருமா சைடு டிஷ்ஷாக தரப்படும்...

அது ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை...

சாப்பாட்டுப் பிரியர்கள் சேவைக்கு பல காம்பிநேஷன்கள்  கண்டுபிடித்து ரசித்து சாப்பிடுவதில் டாக்டரேட் பெற்றவர்கள் !






என் தோழி ,

தன்  பாட்டி  வீட்டில் சேவை செய்யப்படும் கதையை சொன்னாள் ...


"இன்று சேவை செய்வோமா?" 
என்று பாட்டியோ ,வேறு யாரோ ஆரம்பிப்பார்கள்...

உடனே அந்த செய்தி காற்று வாக்கில் அக்கம்பக்கம் எல்லாம் பரவும்...

எதிர் வீட்டு  மாமி,பக்கத்துக்கு வீட்டு அக்கா ,அடுத்த வீட்டுப்பாட்டி என்று ஒரு சின்ன டீம் வீட்டில் சேரும் ...

வாசலில் திண்ணையில் ஆண்கள் குழு சேருவார்கள்...

"சேவை பண்ணப்போறா...அதனால வெளில போற வேலையை  நாளைக்கு ஒத்தி  வச்சுட்டேன்!"


ஒரு சில படிகள் புழுங்கல் அரிசி ஊற வைக்கப்படும்...(தாராளமான காலம்!)

ஒரு பெரிய முறத்தில் தேங்காய்கள் துருவப்படும்...

எலுமிச்சைகள் பிழியப்படும்.

வெங்காய சாம்பார் கொதிக்கும்.

ஒன்றிருவர் கைமாற்றி ,மாற்றி அரிசியை 
நைஸாக அரைக்க மாவு ரெடியாகும் ...
(grinder இல்லாத காலம்!)


அப்படியே களைப்புத்தெரியாதிருக்க அரட்டையும் களை கட்டும்...

மாவை கிளறி கொழுக்கட்டை பிடித்து வேகவைத்தவுடன் இளவட்டங்கள் உதவிக்கு அழைக்கப்படுவார்கள்...




"நம்ம ராமு மாதிரி உபகாரி உண்டோ ?நம்ம கிட்டு நிமிஷமாய் பிழிஞ்சு தள்ளிடுவானே " என்று ராமுவுக்கும் ,கிட்டுவுக்கும் ஐஸ் வைக்கப்படும்...



சமையலறையை ஒட்டிய தாழ்வாரத்தில் அம்மா,ஆட்டுகல்,உரல்(இன்று இவைகள் 
ம்யுசியத்தில் உள்ளன )ஆகியவற்றுடன் ஒரு ராட்ஷச சேவை நாழியும் இருக்கும்.கிட்டத்தட்ட 
இடுப்பளவு வரும் அந்த நாழியில் வெந்த உருண்டைகள் போடப்படும்...



கிட்டுவும் ,ராமுவும் தங்கள் புஜ பல பராக்கிரமங்களை காட்ட மாங்கு மாங்கு என்று சேவையை கீழேயுள்ள வாழை இலை அல்லது ,தாம்பாளங்களில் பிழியப்படும்....




இன்னொரு குரூப் அதில் தாளித்துக் கொட்டி தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை,எள்ளு சேவை,பருப்பு சேவை ,புளி  சேவை என்று தயார் செய்யவார்கள்....




வாசலில் திண்ணையில் காத்திருக்கும் கும்பல் "ரைட் ராயலாக" சேவை ,சட்னி சாம்பார் எல்லாம் தயார் என்றவுடன் அதை ஒரு தாக்குத் தாக்க  வருவார்கள் !!!!




ஆகமொத்தம் ,அந்த தெருவுக்கே சேவை விருந்து தான்...

10 நாட்களுக்குப் பிறகு இன்னொரு வீட்டில் சேவை செய்யப்படும் பொது அங்கேயும் இதே சங்கம் கூடும் !!!!




இன்று இது போன்ற அந்தக்காலத்து அன்னியோன்யம் பழங்கதை ஆகிவிட்டது...

ஆனாலும் கூட சேவை பிழியப்படும் நாட்களில் குடும்பத்தார் உதவி இருந்தால் வசதி தான்!

அட்லீஸ்ட், வீட்டு  வேலையாள் பிழிய உதவும் பொது சிரமமின்றி செய்ய முடியும்!

என்னென்னவோ புதிய முறை சேவை மேக்கர் மார்க்கெட்டில் வந்தாலும் அது நம் பாரம்பரிய சேவை நாழி போல இல்லை என்பது நிஜம்!

கூடிய சீக்கிரம் யாராவது ஒரு மஹானுபாவர்  ஒரு நல்ல ஆட்டோமாடிக் சேவை மேக்கர் கண்டுபிடித்தால் நல்லது!


இப்பேர்ப்பட்ட சேவை பிரியையான நான் ஒரு எனக்கு நேர்ந்த ஒரு சேவை தமாஷ்ஷை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

ஒரு முறை கோவை சென்று திரும்பும் போது ,அங்கே அம்மா வீட்டில் உள்ள சேவை நாழியை (என்ன இருந்தாலும் பிறந்த வீடுப்ப்ண்டம் ஸ்பெஷல் தானே) பத்திரமாக என் ஏர் பாகில்  புடவைகளுக்கு நடுவே பாக்  செய்து சென்னை விமானத்தை பிடிக்கக் கிளம்பிவந்தேன்.

செக்யூரிட்டி செக்கிங்கில் என் பை மட்டும்  அனாதை போல நிற்கிறது...அதில் உள்ள சேவை நாழியை எக்ஸ் ரே யில் பார்த்த செக்யூரிட்டிகள்  படு டென்ஷன் ஆகி பையின் சொந்தக்காரியான என்னை ஒரு டெர்ரரிஸ்ட் ரேஞ்சில் பார்க்க... நான் ஆங்கிலமும் ,தமிழும் புரியாத அந்த சர்தார்ஜியிடம்  இது சேவ்  மேக்கிங் மிசின்  என்று விளக்க அவர்  விரோதம் +குழப்பத்துடன் என்னைப்பார்க்க யாரோ ஒரு விமான நிலைய சிப்பந்தி," இது   மசின் கன் எல்லாம் இல்லை ,வெறும் பலகாரம் செய்யும் சமாசாரம்"என்று அவருக்குப்புரியும் விதத்தில் விளக்க என் லக்கேஜ்  மெல்ல நகர்ந்தது விமானம் நோக்கி சென்றது!...அந்த சர்தாரும் என்னை பார்த்து சிநேகமாக சிரித்தார்!

என்ன தான் பெண்கள் பத்திரிகைகளில் வரும் இலவச இணைப்பில் 30 வகை சேவைகள் ரெசிபிகள் எழுதினாலும் என்றும் "டாப்"பில் இருப்பது காலம் காலமாக செய்யப்படும் சில சேவை வகைகள் தான்...

ஒரு "பப்பே " டின்னரில்   பனீர் மட்டர்  சேவை செய்து வைத்திருந்தார்கள்.
பார்க்க அழகாக இருந்தது...ஆனால் சாப்பிடதான் முடியவில்லை!

பாக்கெட்டில்  வரும் இன்ஸ்டன்ட் சேவையை வெந்நீரில் ஊற வைத்து ,தாளித்து சாப்பிடும் போது  ஏதோ பிளாஸ்டிக் ருசி தான் வருகிறது...

ஒரிஜினல் சேவைக்கு பக்கத்தில் கூட அதனால் வர முடிவதில்லை!

அதனால் தானோ இன்றும் கூட கஷ்டப்பட்டு அரைத்து ,கிளறி,பிழிந்து ஆயாசத்துடன் சேவை செய்து சாப்பிடும் போது அதன் ஸ்பெஷல் ருசி நம்மை எங்கோ கொண்டு செல்கிறது!


                             %%%%%%%%%%%%%%%%%%
                                    ~~~~~~~~~~~~~~~~~~~~~
                              $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Friday, 7 March 2014

சவுக்கு மரங்கள் அழுவதில்லை...

நம்மை இன்று வரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் நகைச்சுவை மகா நடிகர் அமரர் நாகேஷின் பேட்டியை படித்தேன்...

எத்தனை ஆழமான உண்மை...

யோசித்து பார்த்தால்  நாம் எத்தனை முறைகள் சவுக்கு மரமாகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறோம்...

வீட்டில்...

வேலை பார்க்கும் இடத்தில...

என்று பலமுறை இதை அனுபவித்திருப்போம்...

அப்போது நினைத்துக்கொள்வோம்...நாகேஷின்  இந்த ஆழமான சவுக்கு மரக் கதையை...

நாமும் தயாராவோம் அடுத்த பணிக்கு...





ஒரு வானொலி பேட்டியில் நாகேஷ்:

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!