badge

Followers

Tuesday, 28 July 2015

வேலூர்-தெரிந்த ,தெரியாத தகவல்கள்





வேலூர்...தெரிந்த ,தெரியாத தகவல்கள் 
தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம். சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம். தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம். மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம். தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம். ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம். தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம். ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம். இது மட்டும்தானா?
வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். கண்களை மலைக்க வைக்கும் சுற்றளவு. ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள். பல நூற்றாண்டு காலமாக அசையாமல் நிற்கும் உறுதி. பல போர்களைக் கண்டு சளைத்து போன மனம். இப்படியெல்லாம் இருப்பது வேலூர் மாநகரம் ஒன்றுதான்.
வேலூர்க் கோட்டை :
திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட வேலூர் கோட்டைதான் அது. தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது. விஜயநகரப் பேரரசின் வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக இது வேலூரில் கட்டப்பட்டது. அது மட்டுமல்ல. ராட்சசி - தங்கடிப் போரில் அதாவது தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் வீழ்ந்த பின் அப்பேரரசின் அரசர்கள் முறையே தங்கள் தலைநகர்களை பெனுகொண்டா, சந்திரகிரி மற்றும் வேலூரில் அமைத்துக் கொண்டனர். இக்கோட்டை சுமார் நூறாண்டு காலம், பேரரசின் இறுதி அரசரான மூன்றாம் அரங்கனின் காலம் வரை தலைநகரக் கோட்டையாக இருந்தது. சுற்றிலும் பாதுகாப்பு அரணாக சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு விளங்கியதாம் இக்கோட்டை. ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது. ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.
பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை. கோட்டைகள் இருக்கும் ஊரின் பெயரோ பகுதியின் பெயரோ வழக்கில் இருப்பது கண்கூடு. எடுத்துக் காட்டாக மலையில் இருப்பது மலைக்கோட்டை. புதிதாகக் கட்டப்படுவது புதுக்கோட்டை என்றெல்லாம் கூறலாம். ஆனால் இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அது வெயிலுக்குப் பேர் போன வேலூரில் வெயிற்காலத்தில் மட்டுமே தெரியும் வண்ணம் கோட்டை மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை வேனிற்காலத்தில் காண முடியும்.
இக்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது. இந்து அரசர்களின் ஆட்சி முடிந்து இசுலாமிய நவாபுகளின் ஆட்சி தொடங்கிய பின்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது. பின் வெள்ளையர்களின் ஆட்சியில் 1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது. இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.
மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன. ஆனால் பண்டைய மன்னர் ஆட்சியின் சுவடுகள் ஏதும் தெரியா வண்ணம் உள்ளிருந்த அனைத்துப் பகுதிகளும் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டிருந்தன. கோவிலுக்குரிய தெப்பக்குளம் காவலர் பயிற்சிப் பள்ளியின் மைதானமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இங்கு பல்துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது மாநில அரசின் தொல்பொருள் அருங்காட்சியகம், மத்தியத் தொல்பொருள் துறையின் அருங்காட்சியகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஒருபிரிவு ஆகியன நடைபெற்று வருகின்றன.
அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது. மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச கோட்டை காட்சி தருகின்றது. ஜலகண்டேசுவரர் கோவில் திருவிழாக்கள், சித்திரை மாத புஷ்பப் பல்லக்கு, சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மக்கள் கூட்டம் எப்போதும் கோட்டையைக் கலகலப்பாக்குகின்றது. நகரைச் சுற்றியுள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ் முதலான மூன்று கோட்டைகளைப் பார்த்தபடி தன் பழம் பெருமைகளை நினைத்தபடி அண்ணாந்து நிற்கின்றது இந்த மீசுரக் கண்டக் கொத்தளம்.

4 comments:

  1. வேலூர் நகரை சற்றி பார்த்த திருப்தி உள்ளது தொடரட்டும் தங்கள் பனி
    licsundaramurthy@gmail.com
    salemscooby.blogspot.in

    ReplyDelete
  2. அடுத்த முறை வரும் போது கோட்டைக்கு செல்ல வேண்டும்...

    ReplyDelete
  3. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  4. ’மீசுரகண்டக் கொத்தளம்’ என்ற பெயர் புதிய தகவலாக உள்ளது. வரலாற்றுப் புகழ் பெற்ற வேலூர் கோட்டையைப் பற்றிய அனைத்து விஷயங்களை அழகாகக் கோர்வையாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    வேலூரில் தங்கள் பெயர்கொண்ட இன்னொரு பதிவர் உள்ளார்கள். அவர்கள் பெயர்: உஷா அன்பரசு ஆகும் http://tamilmayil.blogspot.com/ :)

    ReplyDelete