badge

Followers

Sunday, 21 February 2016

ஒரு தந்தையின் கண்ணீர்....நடிகர் விவேக்கின் சோகம்


நீங்கள் எங்களை சிரிக்க வைத்தீர்கள்....
ஏனோ ஆண்டவன் உங்களை அழ வைத்து விட்டான்...
அவன் என்ன கணக்குப் போடுகிறான் என்று யாருக்குத் தெரியும்...

இணையத்தில் படித்த நடிகர் விவேக்கின் கட்டுரை...

இதைப்  படிப்பவர்கள் கண்கள் ஈரமாகாமல் இருக்காது...


மனம்’ இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி..! இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.
பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம்.
எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும்.
வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா! தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!’ எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான். அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.’, ‘உம்’, ‘சரி’, ‘மாட்டேன்’ என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும். ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான். அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது.
அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை. காரணம் அவன் விடுவதில்லை. அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ?!
தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது. இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்’ என்பார்(முந்திக்கொண்டானே!). ஹாலஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்தார்கள்.
அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச்செல்வேன். டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான்.
இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது. அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள்.
இதுவரை ‘புத்திர சோகம்’ என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை.
அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!
குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.
உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்.
அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்!
பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதானங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!
பின் குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான். அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..!
ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை.
வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு. நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம். அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு. அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம். அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும். என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும்.
“The Good, The Bad and The Ugly” என்றொரு இத்தாலிய சினிமா. நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன் “The Good, The Bad and The Ugly” படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன். இசையமைப்பாளர் “என்னியோ மொரிக்கோன்” இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும். இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்!
நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது. எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே. அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது, இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன்.
நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. “அப்பா! தண்ணி குடிச்சீங்களா?”. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் “Please drink water Daddy by prasanna” என்று என்னை அலெர்ட் செய்கிறது. மனம் திறந்து : கடைசி முத்தம்!
- நடிகர் விவேக்

Friday, 19 February 2016

30 ஹெல்த் டிப்ஸ்








1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Wednesday, 17 February 2016

முருங்கைகீரை தரும் நன்மைகள் ...



முருங்கைக்காய போன்றே முருங்கைகீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

1. முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.

2 முருங்கையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெரும்.

3 இரத்தம் சுத்தமாகும். முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கால்சியம் உள்ளது.

4 உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல் தேறும்.





5 முருங்கை இலையில் விட்டமின் ABC கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

6 ஒரு கிண்ணம் முருங்கை சாறில் 9 முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8 டம்ளர் பாலில் அடங்கி இருக்கும் விட்டமின் A உள்ளது.

7 வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும்.

8 இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும்.

9 சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.





10 உடல் சூட்டை குறைக்கும், கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும்.

11 இளநரையை நீக்கும், உடல் சருமத்தை பளபளக்க செய்யும்.

12 தாய்ப்பாலை அதிகமாக ஊறவைப்பதால், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


Thursday, 11 February 2016

இளநீர் இருக்க கோக் எதற்கு?




சுத்தமான, சுவையான, சத்தான பானம் இது.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.

இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது.

 இருப்பினும் இப்புரதச் சத்தின் தரம்  பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.


ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.


ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.


 இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.


இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.


இப்போது சொல்லுங்கள் ...இவ்வளவு நன்மைகள் உள்ள இயற்க்கை தரும் கொடையான இளநீர்  இருக்க நச்சுப்பொருட்கள் மிகுந்த பெப்சி ,கோக் போன்ற செயற்கை பானங்கள் (திரவங்கள் !) எதற்கு?

Tuesday, 9 February 2016

வெண்டைக்காய்-விசேஷ குணங்கள்




வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.



வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.


உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.


Sunday, 7 February 2016

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்




எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை, விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்