badge

Followers

Wednesday, 20 December 2017

சனிப் பெயர்ச்சி கலாட்டா !!!
சனிப் பெயர்ச்சி பலன் எழுதப்போறேன்னு நினைச்சுக்காதீங்க.

அதெல்லாம் நீங்க போதும்னு அலர்ற அளவு நிறைய பேர் சொல்வாங்க.. சொல்லிட்டாங்க...

இது வேற...

கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க...

இதெல்லாம் வெறும் பிளானட்..சுத்தறது அதோட வேலை... இயற்கை..சயின்ஸ்... இதுக்கேன் இவ்ளோ ஆர்ப்பாட்டம்னு நினைக்கறவங்க..

ரொம்ப தன்னம்பிக்கை உள்ளவங்க...

இந்த போஸ்ட் ஸ்கிப் பண்ணிடலாம்!

இதிலெல்லாம் நம்பிக்கை உள்ளவங்க...
பலன்லாம் படிச்சு பயந்து போயிருக்கவங்க மட்டும் படிங்க..

குரு, சனி, ராகு, கேதுப் பெயர்ச்சியெல்லாம் காலம் காலமா நடந்துகிட்டுதான் இருக்கு.

ஆனா அப்போல்லாம் இவ்ளோ யாருக்கும் தெரியாது.

நல்லதோ.. கெட்டதோ.. சாமி மேல பாரத்தைப் போட்டு போயிடுவாங்க.

"நல்லதே நினைங்க.. நல்லது நடக்கும்..
காரணமில்லாம எதுவும் நடக்கலை..
நடப்பது நாராயணன் செயல்..
அவனன்றி ஓர் அணுவும் அசையாது..
கர்மா....
எல்லாம் நன்மைக்கே..
இதுவும் கடந்து போகும்..
மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை..."

இப்படி சமாதானம் சொல்லி ஈஸியா கடந்து போயிடுவாங்க...

பல சமயங்கள்ல ignorance is a bliss...அதுல இதுவும் ஒண்ணு...

எதைப்பத்தியும் ரொம்ப தெரிஞ்சுக்காம இருக்கறது கூட நல்லதுதான்..

இப்போ நிலைமை மாறிப்போச்சு...

இந்த கிரகப் பெயர்ச்சிகள் பல கோடி ருபாய் சம்பாதிக்கும்

கருவி ஆகிவிட்டது ....

இவை இந்த அளவு பெரிதாக்கப்பட்டது மீடியாவால் தான்...

பத்திரிகைகள் குரு /சனி/ராகு /கேது  பெயர்ச்சி பலன் புத்தகங்கள் வெளியிட்டால் அவை சுட சுட விற்பனை ஆகின்றன ...

டீ. வி .யில் விளம்பரதாரர்கள் உபயத்தால் சேனல்களுக்கு காசு மழை கொட்டுகிறது...

கோவில்களில் ஸ்பெஷல் தரிசனம்,அர்ச்சனை,பரிகாரம் என்று பல வித வியாபாரங்கள் ஆன்மீக போர்வையில் நடை பெறுகின்றன...

டூரிஸ்ட் வண்டிகள் இரண்டு,மூன்று மடங்கு இந்த பரிகார ஷேத்திரங்களுக்கு வண்டி கொள்ளாமல் பக்தர்களை சுமந்து கொண்டு சென்று வந்து சம்பாதிக்கிறார்கள்...

எந்த சேனல்  மாற்றினாலும் பழங்கள் ஒரு வித டேர்றோர் வாய்ஸில் ...

நமக்கும் மெதுவாக பெயர்ச்சி ஜுரம் உச்சத்துக்கு செல்கிறது...

சனியும், குருவும் வேலையை காட்டுகிறார்களோ இல்லையோ,பெயர்ச்சி வியாபாரிகள் தங்கள் கை வரிசையை காட்டி வேலையில் ஜெயித்து விடுகிறார்கள்...

எல்லாருக்கும் எல்லாம் சொல்றாங்க...

நாம கேக்கறமோ இல்லியோ..தேடிப் போறோமோ இல்லியோ...நம்மைத் தேடி விஷயங்கள் வருது.

அதில..கொஞ்சத்துக்கு கொஞ்சம் மட்டும்தான் உண்மை...

எல்லாத்தையும் போலவே...இதுலயும் பாதி மிகைப்படுத்தல்...வியாபாரம்....பணம் பண்றது எல்லாம் கலந்திருக்கு...

ஆன்மீகமும் இப்போ வியாபாரமாயிடுச்சு.

ஜனங்களோட பயத்தை பணம் பண்றாங்க.

பக்தியோட இல்லை...இப்பல்லாம் பாதி பேர் பயத்தோடதான் கோவிலுக்குப் போறாங்க...

அந்த அர்ச்சனை..இந்த அர்ச்சனை..பரிகார பூஜை...அந்தக் கோவில்.. இந்தக் கோவில்னு..

கண்ல பட்டது..காதுல கேட்டது... படிச்சது...பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னதுன்னு...

பைத்தியம் பிடிக்காத குறையா மக்கள் அலையறாங்க...

பரிதாபமா இருக்கு பார்க்க...

கோவிலுக்குப் போங்க...கட்டாயம் போங்க..அவசியம் போகணும்...

அர்ச்சனை பண்ணுங்க..பூஜை பண்ணுங்க...ஒரு தப்பும் இல்லை...

ஆனா..இதெல்லாம் பயத்தில பண்ணக்கூடாது. பக்தியோட பண்ணனும்... நம்பிக்கையோட போகணும்.

கோள்கள் சுழற்சியில வாழ்க்கைல ஏற்றத்தாழ்வுகள் வரலாம்...சோதனைகள் வரலாம்.

ஆனா...இப்படி ஆளாளுக்கு கிளப்பி விடறதை படிச்சுட்டு பயந்துடாதீங்கன்னு சொல்லவர்றேன்.

சினிமா விமர்சனம் மாதிரி...
 "Bad, Very bad, Very very bad, Good, Fair னு போடறது...

அதுவும் ரெட்ல ஹைலைட் பண்ணி போடறது...

பரீட்சைல மார்க் போடற மாதிரி, பாஸ்/ ஃபெயில்/ டிஸ்ட்டின்க்ஷன்னு மார்க் போடறது...

நீ தொலைஞ்ச.. செத்த ..எல்லாம் போச்சுனு சொல்றது...

தெய்வமே....!!!

அந்த சனி பகவானே இறங்கி வந்து,

"நான் இப்படியெல்லாம் செய்வேன்னு உங்கள்ட்ட சொன்னனாடா..??!!" னு

ஆளுக்கு ரெண்டு அறை விட்டு போயிடுவார்...

அப்படி பீதிய கிளப்புறாங்க...

படிக்கிறவங்க என்னாவாங்கன்ற மனசாட்சி கூட இல்லாத வியாாரிகள்...

நல்ல ஜோசியர்கள் நாசூக்கா சொல்வாங்க...

நீங்க ஜாதகம் பார்க்க போனாலே அது தெரியும்...படால்.. தடால்னு சொல்ல மாட்டாங்க...

இதுல அரை குறை அறிவோட பேசறவங்க வேற...

மொத்தத்தில ஜனங்கள் panic ஆகி..
"ஐயோ இனி நான் அவ்ளோதான்"னு உடைஞ்சு சுக்கு நூறாகிடுவாங்க..

இந்த அரைவேக்காட்டு பலன்லாம் படிச்சா..

வாழ்க்கையில உள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடும்...

அதனாலதான் நம்ப முன்னோர்கள் எல்லாத்தையும் இலை மறை காய் மறையாவே வைச்சிருந்தாங்க...

"எல்லாம் சரியாகிடும் போ"னு தைரியம் சொல்வாங்க...

இதெல்லாம் நம்பறவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும் கண்டிப்பா இருக்கணும்...

அப்போ ஸ்ட்ராங்கா இது மனசுல வைச்சுக்கணும்...

இறை சக்தியை விட பெரிய சக்தி எதுவும் இல்லை...

கோள்கள் அனைத்தும் படைத்தவன் கட்டுப்பாட்டில் இருக்கு...

இதெல்லாம் ஒரு எச்சரிக்கை மாதிரி வைச்சுக்கணும்...

எலக்ட்ரிக் சமாசாரங்கள்ல ஒட்டிருக்க மண்டையோட்டு டேஞ்சர் சைன் மாதிரி..

வண்டியோட்றப்போ ஹெல்மெட் போடுன்ற மாதிரி...

ஒரு எச்சரிக்கை...பீ கேர்ஃபுல்னு... caution..

மத்தபடி..

"ஜாமீன் கையெழுத்து போடாத..
அளவா பேசு...
சாமான், காசு, பணம், நகை, நட்டு பத்திரமா பாத்துக்க...
வாகனத்துல போறப்போ எச்சரிக்கையா இரு..
புது பிஸினஸ்ல பாத்து இறங்கு..
பாஸ்கிட்ட வம்பிழுத்துக்காத..
சொந்தக்காரங்கள பகைச்சுக்காத..
யாரையும் நூறு பர்சன்ட் நம்பாத.."

இதெல்லாம் சனி வந்து சொல்லணும்னு அவசியம் இல்லை...

எல்லாக் காலத்துலயும் எல்லாரும் ஃபாலோ பண்ண வேண்டியதுதான்...

அதனால...பயந்துக்க வேணாம்...

உலகத்துல இருக்கற அத்தனை பேரும் இந்த பன்னிரண்டு ராசில அடங்கிருவாங்க...

அத்தனை பேருக்கும் ஒரே மாதிரி நடந்தா உலகம் தாங்குமா...

அப்படியா நடக்குது...

அவங்கவங்க ஜாதகம்.. கர்ம பலன்.. பிற கிரகங்கள் இருப்பு...கூட வாழறவங்களோட பலன்...இப்ப செய்ற காரியங்களோட பலன்...
எல்லாத்துக்கும் மேல கடவுள்...எல்லாம் இருக்கு....

பயப்படாம சாமி மேல பாரத்தைப் போட்டு நம்ம வேலை பார்த்துட்டு இருந்தாலே போதும்....

நம்ம மனசு நல்லாயிருந்தா...அவன் கூடவேதான் இருப்பான்...

கிரகங்கள் ஆட்டி வைக்கிறபடிதான் நம்ம வாழ்க்கைன்னா.. சாமிக்கு என்ன மரியாதை...

அதனால....நம்ம பெரியவங்க சொன்ன மாதிரி..

இது ஒரு caution/ முன்னெச்சரிக்கைனு வைச்சுக்கிட்டு.. கடவுளை நம்பி நாம பாட்டு நம்ம வேலை செய்லாம்...

எப்பவும் மனசு விடாம தைரியமா இருக்கணும்...

எல்லாம் அவன் பார்த்துப்பான்...
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

courtesy-net 

Tuesday, 19 December 2017

திருமலை திருப்பதி கோவிலில் கடை பிடிக்கப்படும் வழிமுறைகள்...
திருமலை திருப்பதி கோவிலில் கடை பிடிக்கப்படும் வழிமுறைகள்...
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.

காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.

பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.

பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.

அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார்.

பின்னர் வீணையை இசைக்க,  வெங்கடாசலபதி அருகில் "போக ஸ்ரீனிவாச மூர்த்தி" பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.

அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.

அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.

சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.
சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.
"விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.

இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-.

மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும்.

ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.
(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).

ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.

பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார்.

சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்.

பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.

முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.

மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.

பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.

 சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.

குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள்.
இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.

இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

🙏சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.

அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.

பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார்.
ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.

ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.

இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.

பூ கட்டுவதற்கு என "யமுனாதுறை" என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.

காலை 3.45 மணிக்கு "தோமாலை சேவை" ஆரம்பமாகும்.

 சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார்.

பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.

பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். 

அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.

இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220.
இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது.

 பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா என மாறிவிட்டது.

🙏கொலுவு தர்பார்:
 ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.

இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும்.

இதற்காக உள்ள "கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி" விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.

 இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர்.

ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர்.

பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார்.

அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர்.

 மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு.

மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

🙏🔔முதல் மணி:
அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும்.

அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும்.

மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

🙏🔔🔔இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும்.

அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.

ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

🙏சகஸ்ரநாம அர்ச்சனை:
கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும்.

விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது.

இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும்.

நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள்.

இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள்.

சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர்.

இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

🙏சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.

இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

🙏ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும்.
அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு என்று பெயர்.

மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

கல்யாண உற்சவம்:
திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது.

அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும்.

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

 திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள்.

சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.

ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார்.

விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும்.

கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும்.

 திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

ஊஞ்சல் சேவை:
மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை "டோலாத்ஸவம் என்பர்.

அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும்.

ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.

மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்...


Courtesy-NET

Monday, 18 December 2017

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்...

 ஓம் சாய் ராம்

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்


எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு  அழகான துணியினால் மடித்து, பாபா  புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன்,  ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில்  வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.  சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில்  , ஒரு  ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்.  .
4. ஏதாவது ஒரு கோயிலில்,   தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால்,  குழு வாசிப்பு முறையில்  எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .


5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும்.  அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர  புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை  அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.
6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய  நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள்,  இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்
8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல,  மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும்.  மேலும் , அவருக்கு  பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.

9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ , அதே போன்று சாயி சத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின்  தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்.  .

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாயி பக்தர்களால்  கீதை மற்றும் பைபிள் போன்று கருதப்படுகிறது

Saturday, 2 December 2017

திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

திருக்கார்த்திகை  தீபத் 

திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!உங்கள் இல்லங்களில்,,நெஞ்சங்களிலும்,

இந்தப் பிரபஞ்சம் எங்கிலும் 

தீபா ஒளி பரவட்டும்...

அஞ்ஞானம்,கோபம்,பகை,வறுமை,
நோய் ,வறுமை போர்ன்ற இருள் 
இந்த தீப ஒளியில் மறையட்டும்....

மகிழ்ச்சி  ,சுபிக்ஷம் ,ஆரோக்கியம் ,அன்பு 
எங்கெங்கும் நிறையட்டும்....