badge

Followers

Thursday, 31 May 2018

எலியிடமிருந்து கற்றுக்கொள்ளவோம் ...


எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால்,,அமைதியாக சிந்தித்து செயல்படாததால்  தனது வாழ்க்கையை துறக்கிறான்.

Friday, 25 May 2018

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு:

இக்கோயிலில் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.

இதன் சிறப்பு அத்தி வரதர் மற்றும் தங்க பல்லியும்.

வரலாறு:

இங்கு உள்ள அத்தி வரதர் என்னும் பெருமாளை, நாம் 40 வருடத்திற்கு ஒரு முறை தான் தரிசிக்க முடியும்.

ஏனெனில் அவர் இருப்பதோ, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில்.

கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.

இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.

பெருமாளின் தாருமயமான திருமேனி (மரத்தினால் செய்யப்பட்டது), மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார்.

எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.

பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.

அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.

ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.

வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

வசந்த மண்டபத்தில் 10 நாட்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள்.

நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார்.

பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு, 10 நாட்கள் கண் குளிர தரிசிக்கலாம்.

பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

1939 மற்றும் 1979 ம் ஆண்டுகளில் நடந்த இந்த வைபவம் அடுத்து 2019 ம் ஆண்டு நடக்கும்...

Friday, 11 May 2018

பாபா ஹர்பஜன் சிங் -இந்திய சீன எல்லையில் ஒரு காவல் தெய்வம்
இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்கவைத்துக்கொண்டிருப்பதும் எது தெரியுமா? இந்தியாவின் பிரமோஸ் ஏவுகனைகளோ, சுகாய் போர் விமானங்களோ அல்ல. சாதாரண இந்திய சிப்பாய் ஒருவரின் ஆவி. அந்த ஆவிக்குச் சொந்தக்காரர் 'பாபா ஹர்பஜன் சிங்'. இங்குள்ள இராணுவ வாகனங்களில் எல்லாம் இவருடைய படத்தினைக் காணலாம். ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். . 1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார்.காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
.இரவில் வெள்ளை உடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் செய்து வைக்கப்படுகின்றது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்.


ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம்.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள். ஆவியான இவருக்கு கெளரவ கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள். ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார் ....courtesy -net 

Wednesday, 2 May 2018

மன அழுத்தம் வராமல் சமாளிக்க சில டிப்ஸ்மன அழுத்தம் வராமல் சமாளிக்க சில டிப்ஸ் ...

மன அழுத்தம் ஏற்பட்டபின் தீர்வு தேடுவதை விட வருமுன் காப்பதுதான் ஆகச்சிறந்த வழி. அதற்கான 100 வழிமுறைகளைப் பார்க்கலாம்.

1.அதிகாலை எழும்போதே புன்னகையுடன் எழலாம். முடிந்தவரை புன்னகையுடன் அன்றைய பொழுதைக் கழிக்கலாம். புன்னகையே மன அழுத்தத்துக்கு முதல் மருந்து.

2. எழுந்த உடன் படுக்கையில் அமைதியாக கண்திறந்து 10 நிமிடம் அமரலாம். மூச்சை நன்றாக இழுத்து சுவாசிக்கலாம்.

3. எழுந்து அமர்ந்தபடியே, நாம் மகிழ்ச்சியுடன் வாழ வாய்ப்பளித்து நம் விருப்பங்களை அடைய உதவிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லலாம். நமக்கு உதவும் நண்பர்களுக்கும் மனதளவில் நன்றி சொல்லலாம். நன்றி சொல்வது மன அழுத்தம் வராமல் வைத்திருக்கும்.

4. எழுந்ததுமே செல்போன் ஒளித்திரையைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். குறிப்பாகத் தலைமாட்டில் செல்போன் வைப்பதைத் தவிருங்கள்.

5. காலை எழுந்து ரெஃப்ரெஷ் ஆனதும் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்து ‘ஹாய்’ சொல்லலாம். அழகான, மகிழ்ச்சியான ஆள் நீங்கள்தான் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

6. வீட்டில் உள்ள எல்லோருக்கும் இயந்திரத் தனமாக இல்லாமல் மனப்பூர்வமாக இதயத்தில் இருந்து ‘குட் மார்னிங்’ சொல்லலாம்.

7. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருந்தால், நல்ல செய்திகளை முதலில் தேடிப்படிக்கலாம். நம்மை முதலில் டென்ஷன் ஆக்குவது பொதுவான செய்திகள்தான் என்கிறது ஓர் ஆய்வு! பஸ் கட்டண உயர்வு என்றதும் மனம் கோபப்படுகிறது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற ஆதங்கம் இயலாமையாக மாறி அழுத்தம் ஏற்படுகிறது.

8.காலை சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடம் நிற்கலாம் அல்லது நடக்கலாம். புதிய சிந்தனைகள் தோன்றும்.

9. காபி அல்லது டீ குடிக்கும்போது ரசித்துக் குடிக்கலாம். எந்த வேலையாக இருந்தாலும் ரசித்துச் செய்தால் அது சுமையாகத் தெரியாது.

10. நிற்கும்போதும் நடக்கும்போதும் அன்று செய்ய வேண்டிய வேலைகளை மனதில் வரிசையாகப் பட்டியலிடலாம். மறதியால் ஏற்படும் டென்ஷனைத் தவிர்க்க இது உதவும்.

11. யோசித்த செயல்களை, வேலைகளை உடனடியாக ஒரு நோட்டில் அல்லது டைரியில் எழுதலாம். செய்ய வேண்டிய வேலைகளை எழுதுபவர்கள், மன அழுத்தத்தில் இருந்து தன்னைக் காத்துக்கொள்கின்றனர்.

12. தூங்கி எழுந்து, காலைக்கடன்கள் முடித்து 30 நிமிடத்துக்குப் பின்னர் செல்போனைத் தொடுங்கள். அதுவும், முதல் நாள் இரவில் இருந்து நமக்கு வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகளைப் பார்த்தால் போதும்.

13.வாட்ஸ்அப் குரூப்களுக்குள் அதிகாலை போய் ‘குட்மார்னிங்’ போட்டே ஆகவேண்டும் என்று இல்லை.

14.யோகா அல்லது மூச்சுப்பயிற்சி செய்யும் வழக்கம் இருந்தால், காலையில் 20 நிமிடம் ஒதுக்கலாம். வழக்கம் இல்லாதவர்கள் உடனே யோகா கற்றுக் கொண்டு செய்யத் தொடங்குங்கள்.

15.காலை மிதமான சுடுநீரில் நிதானமாகக் குளிக்கலாம். அப்போது பரபரப்பு வேண்டாம்.

16.குளிக்கும்போது பிடித்த பாடலை, சத்தமாகப் பாடலாம் அல்லது ‘ஹம்’ செய்யலாம்.

17.அதிகாலையில், வார்த்தைகளில்லாத இசை கேட்கலாம். ஏதாவது ஓர் இசைக்கருவியின் ஒலி, நம்மை உற்சாகப்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளை தடுக்கும்.

18.பக்திப்பாடல்கள் அல்லது இதம் தரும் உரைகள் கேட்கும் வழக்கமிருந்தால், அதுவும் பலன் தரும். நல்ல சிந்தனைகள் ஏற்பட வழிவகுக்கும்.

19.சில பாடல்களைக் கேட்டால் சட்டென மனம் உற்சாகம் கொள்ளும். அப்படி நல்ல நினைவுகளை உருவாக்கும் 10 பாடல்களைத் தேர்வுசெய்து அவற்றை தினமும் கேட்கலாம்.

20.காலை 11 மணிவரை ஃபேஸ்புக்குக்குள் போகாமல் இருக்கலாம். இதனால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

21.பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் நம் உணர்வுகளைப் பதிவிடுவதில் தவறில்லை. அவை எதிர்வினை ஏற்படுத்தாதவையாக இருத்தல் நலம். மேலும் லைக்கோ, கைதட்டலோ வரவில்லை என்று அதனையே திரும்பத் திரும்பப் பார்ப்பது ஸ்ட்ரெஸ் உருவாக்கும்.

22. சமூக வலைத்தளங்களில் நாம் பதிவிடும் கருத்துகள் வேறு யாரையாவது எதிர்வினை செய்யத் தூண்டுமாறு இருந்தால், அந்த நட்பை இழக்காமல் எப்படி பதில் சொல்வது என்பதற்குத் தயாராக வேண்டும்.

23. நம்மைச் சுற்றியோ, நம் நட்பு வட்டத்திலோ எப்போதும் எதிர்மறையாகப் பேசிக் கொண்டு எதிர்வினையாற்றும் நபர்கள் இருந்தால், அவர்களிடமிருந்து உடனடியாக ஒதுங்கிவிடலாம்.

24. சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது, சமூக வலைத்தளத்தில் உலவுவதைத் தவிர்த்து ரசித்துச் சாப்பிடலாம். உங்கள் உணவில் போதுமான சத்துகள் இருக்கட்டும். உடலுக்குப் போதுமான எனர்ஜி கிடைப்பதும் தேவையற்ற டென்ஷனைத் தவிர்க்கும்.

25. உங்கள் உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

26. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது செரிமானப் பிரச்னையை உருவாக்கும். அதனால், தேவையற்ற டென்ஷன். சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள்.

27. வீட்டிலிருந்து கிளம்பும்போது அலுவலகத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய பொருள்களை எடுத்திருக்கிறீர்களா என்பதைச் செக் செய்துவிட்டு கிளம்புங்கள். எதையேனும் மறந்துவிட்டால் தேவையற்ற டென்ஷன் ஏற்படும். உங்களது வாகனத்தில் போதுமான எரிபொருள் உள்ளதா என்பதையும் கவனிப்பது அவசியம்.

28. சாலையில் வேகமெடுக்கிறீர்கள். வாகன நெரிசலைக் கண்டவுடன் டென்ஷன் ஆகவேண்டாம். நீங்கள் எரிச்சல் அடைவதால் எதுவும் மாறிவிடாது. வாகன நெரிசலை வேடிக்கைப் பாருங்கள்.

29. ஓர் இடத்துக்குச் செல்ல பயண நேரத்துக்கு 10 நிமிடம் முன்னரே கிளம்புங்கள். இடையில் ஏற்படும் தாமதங்களால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

30.பணியிடத்தில் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவது முக்கியம். இதனால் உடன் இருப்பவர்களால் ஏற்படும் சவால்களைத் தவிர்க்கலாம்.

31.யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். பிறர் பற்றி இன்னொருவர் குறை கூறினாலும் அதற்கு காதுகொடுக்காமல் பேச்சை மடை மாற்றலாம்.

32. அலுவலக அரசியல்களுக்குள் சிக்காமல் இருக்க ஒரே வழி சொன்ன வேலைகளைத் திறம்படச் செய்வது. அதற்கு வரும் விமர்சனங்களை நேர்மறையாக ஏற்றுக்கொண்டு நம்மைக் கூர்தீட்டிக் கொள்ளலாம்.

33. நன்றாக வேலை செய்ததற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அங்கலாய்ப்பதைத் தவிருங்கள். எல்லோரும் நம் வேலையைப் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவசியமற்றது.

34. உழைப்பையும் உற்சாகத்தையும் சரிவிகிதமாகக் கலந்து வேலை பார்த்தால் எல்லா இடங்களில் இருந்தும் பாராட்டுக் குவியும்.

35. செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள். வேலைகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படும் மன அழுத்தம் பெரியது.

36. உடனடியாக முடிக்க வேண்டிய வேலை எதுவோ அதில் கவனம் செலுத்தலாம்.

37. வேலை செய்யும் இடத்தில், அனைவரிடத்திலும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கண்டுபிடித்து உளமாரப் பாராட்டலாம். அது அவர்களிடத்தில் புன்னகையை வரவழைக்கும்.

38. பிடித்த வேலையைச் செய்வதைவிட தேவை யான வேலையைச் செய்யலாம். நமக்குப் பிடித்த வேலையைப் பிறகு செய்துகொள்ளலாம்.

39. நண்பர்கள் வெளியில் செல்ல அழைக்கும்போது வேலை இருந்தால்,
உடனடியாக நோ சொல்லுங்கள். அவர்களைத் திருப்திப்படுத்த நினைப்பது நிச்சயம் மன அழுத்தத்தை உருவாக்கும்.

40. பிறருக்கு இயன்றால் உதவி செய்யலாம். அப்படிச் செய்துவிட்டு சிக்கல் வந்தால் பின் அதனையும் சமாளிக்க முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

41 . ஒருவருக்கு உதவிவிட்டு அவர் நன்றி சொல்லவில்லை, நாம் செய்த உதவியின் வலிமை தெரியவில்லை. நம்மை அவர்கள் மதிக்கவில்லை என்று எண்ணுவது தவறு. உதவியை நிம்மதியாகச் செய்துவிட்டு நகர்தல் நலம்.

42 . நகைச்சுவையாகப் பேசப்பழகுங்கள். காணும் காட்சிகளில், செயல்களில் நகைச்சுவையைக் கண்டறிந்து பேசலாம். அது உங்களை ரிலாக்ஸ் ஆக்கும்.
43 . நல்ல நூல்களைப் படிக்கலாம், படைப்புகளும், கவிதைகளும் மன அழுத்தத்தை நீக்கும்.

44 . உடல் நலத்தில் அக்கறையுடன் இருங்கள். நாக்குக்குப் பிடித்த உணவுகளைக் கட்டுப்பாடின்றி சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் மன அழுத்தம் உருவாகாமல் தடுக்கும்.

45 . மாலை வீட்டுக்கு வந்த உடன் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் சில நிமிடங்கள் உரையாடலாம். அன்றைய நிகழ்வுகளில் சுவாரஸ்யமானவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம்.

46 . மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. அன்பு என்பதே குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுதான். ஆகவே, இல்லத்தில் உள்ளவர்களைக் குறை காணாமல், அன்பாகச் சரிசெய்ய முயலலாம்.

47 . பொருளாதாரத்தில் கொஞ்சம் விழிப்பு உணர்வு தேவை. நம் வருமானத்துக்குள்ளாக செலவுகளை வைத்துக்கொள்வது மாதாந்திர மன அழுத்தத்தைக் குறைக்கும்.

48 . அதிக எதிர்பார்ப்பில்லாத நிதிமேலாண்மை முக்கியம். வேலையில் எவ்வளவு சம்பளம் வரும்; தொழிலில் இவ்வளவு சராசரி வருமானம் வரும் என்று தெரியும். அதற்கு மேல் இவ்வளவு இன்சென்டிவ் வரும் என்று கற்பனையாக நினைப்பதால், அதில் ஒரு ரூபாய் குறைந்தால்கூட அழுத்தத்தைக் கொடுக்கும்.

49 . ஒரு பொருளை வாங்குவதற்கு முன் ஒருமுறைக்கு பத்துமுறை இது நமக்குத் தேவையா என்று யோசித்துப் பார்த்து வாங்கலாம். தேவையில்லாத பொருள்களை அதிகமாக வாங்கினால் பின் தேவையான பொருள்களை விற்க வேண்டிவரும்.

50 . வாங்கும் பொருளின் தரத்தை கவனித்தே வாங்க வேண்டும். விலை குறைவாகக் கிடைக்கிறதென்று தரமில்லாத பொருள்களை வாங்குபவர்கள் கட்டாயம் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்.

51 . அண்டை அயலார், உறவினர்கள், நண்பர்களின் வாழ்க்கைத்தரத்துடன் நமது வாழ்க்கைத்தரத்தை ஒப்பிடுவது மிகப்பெரிய மன அழுத்தக் காரணி. அவர்கள் பின்னணி, நிதிநிலைமை இவற்றை நம்முடன் ஒப்பிட்டால் நமக்கு வரும் மன அழுத்தம் எதையுமே ரசிக்க விடாது.

52 . `நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்’ என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். ‘எப்படி இருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘சூப்பர், செமையா இருக்கேன்’ என்று உற்சாகமான பதிலைச் சொல்லுங்கள். உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

53 . ‘என்னவோ இருக்கேன்’, ‘ஓடிக்கிட்டு இருக்கு’ என்பது போன்ற பதில்களைச் சொல்ல வேண்டாம். அப்படி பதில் சொல்பவர்களிடம் நாம் ஒட்டவும் வேண்டாம். உற்சாகமாகப் பேசுபவர்களிடம் நட்பைத் தொடர்வோம்.

54 . குடும்பத்துக்குள் எதிர்பார்ப்பு களைக் குறைத்துக் கொள்ளலாம். நாம் நினைத்தபடி நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைப்பது, நாம் எதிர்பார்ப்புகளை குடும்பத்தில் உள்ள அனைவரும் பூர்த்தி செய்ய வேண்டும் என நினைப்பது, இரண்டும் நமக்கும் அவர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

55 . வீட்டில் குழந்தைகளுடன் விளையாடலாம். கொஞ்சம் பெரிய குழந்தைகளாக இருப்பின் படிப்பைத் தவிர மற்ற விஷயங்கள் பேசலாம்.

56 . இரவு தூங்கப் போவதற்கு முன் நல்ல இசை, நல்ல நூல், நல்ல தகவல்கள் மனதுக்குள் செல்வது நிம்மதியாகத் தூங்க வைக்கும்.
57. இரவு விரைவாகத் தூங்கச் செல்வது முக்கியம். அதிகபட்சம் இரவு 11 மணிக்கு மேல் விழித்திருக்க வேண்டாம்.

58 . இன்னொருவரின் செயலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடலாம். நிதானமாகச் சிந்தித்து பதிலளிப்பதன் மூலம் மன அழுத்தம் ஒதுங்கி நிற்கும்.

59 . எந்தச் செயலுக்கும் ‘ரியாக்ட்’ செய்வதை விட, ‘ரெஸ்பாண்ட்’ செய்யும்போது நமக்கு மரியாதை அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து செயல்படுத்தும்போது நம்மால் பிறருக்கும் மன அழுத்தம் வராது.

60 . எப்போதும் மன அழுத்தம் வராமல் இருக்க நிதானமாக, நிறுத்தி ஆழமாக சுவாசித்தாலே போதும். எண்ணங்களில் நிதானம் இயல்பாக வந்துவிடும்.

61. அதிகாலை சீக்கிரம் எழுந்து விடுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதிகாலையில் விழிப்பவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை. இது அனைத்து வேலையிலும் பிரதிபலிக்கும். தாமதமாக எழுந்துவிட்டோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஏதோ ஒரு காரணத்துகாக மன அழுத்தம் வந்துவிட்டதென்றால் மனம் அந்த ஒரு விஷயத்தையே நினைத்துக்கொண்டிருக்கும். வேறு எந்த வேலையிலும் ஒட்டாது. அது அடுத்தடுத்த தவறுகளைச் செய்ய வைக்கும். விரக்தி அதிகமாகி தற்கொலை எண்ணம் வரை கொண்டுசெல்லும். இந்தச் சூழலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

62 .இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வந்துவிடுங்கள். இயற்கையை வேடிக்கை பார்க்கலாம். குழந்தைகள் கூடும் இடம், பூங்கா, கடற்கரை, மலை, ரயில்வே ஸ்டேஷன் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அமருங்கள்.

63 .வெதுவெதுப்பான நீரில் நீண்ட நேரம் குளிக்கலாம். எப்போதும் உபயோகிக்கும் சோப்புக்குப் பதில் புதிய வாசனையுள்ள சோப்பைப் பயன்படுத்தலாம். வாசனைக்கு எண்ணங்களை மாற்றும் சக்தி உண்டு.

64 .மன அழுத்தம் இருக்கும் போது அறைக்குள் அடைந்திட வேண்டாம். ஹால், வராண்டா என நன்றாக காற்று வரும் இடங்களில் அமருங்கள். அகர்பத்தி அல்லது ரூம் ஸ்பிரே பயன்படுத்தி இருக்கும் இடத்தை நறுமணம் கமழ வைத்திருங்கள்.

65 .இருப்பதிலேயே புத்தம் புதிய, பிடித்த ஆடையை அணியுங்கள். அந்த ஆடையோடு வெளியில் ரிலாக்ஸ்டாக நடக்கலாம்.

66 .தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்கள் கண்ணில் படும்படி இருந்தால் மனம் லேசாகும்.

67 .நல்ல நண்பர்களுக்கு போன் செய்து பேசலாம். அவர்கள் பிசியாக இருந்தால் வருந்தாமல் யார் ஓய்வாக இருக்கிறார்களோ அவர்களிடம் ஜாலியாகப் பேசுங்கள்.

68 .கிராஃப்ட் வொர்க், பெயின்டிங், சமையல் எனப் பிடித்த பொழுதுபோக்கில் இறங்குங்கள். மனம் லேசாகும்.

69 .எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். உப்பும் சர்க்கரையும் சமமாகக் கலந்திருக்க வேண்டும். வைட்டமின் சி, மன அழுத்தத்தைச் சரி செய்ய உதவும்.
70 .பெட் அனிமலுடன் நேரம் செலவிடலாம்.

71 .உண்மையான அன்பு கொண்டவர்களின் அருகாமையில் இருக்கலாம். அவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம்.

72 . டயரி எழுதலாம். உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்கள், சந்தித்த நல்ல மனிதர்கள் பற்றி எழுதலாம்.

73 . டெடி பேர், தலையணை போன்ற மென்மையான பொருள்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்திருக்கலாம். அதனுடன் பேசலாம். மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்க்கலாம்.

74 . கண்ணாடியில் நம்மைப் பார்த்து ரசிக்கலாம். பெண்கள் மனதுக்குப் பிடித்த வகையில் மேக்கப் செய்து அழகுபடுத்திக் கொள்ளலாம். ஆண்கள் கிளீன் ஷேவ் செய்துகொண்டு ஒரு குளியல் போடலாம்.

75 . பிடித்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். இனிப்பில்லாத சூயிங்கம் மெல்லலாம்.

76 . ஆன்மிக நம்பிக்கை இருந்தால் வழிபாட்டுத்தலங் களுக்குச் செல்லலாம். அங்கு அமைதியாக அமர்ந்திருங்கள். யாராவது யாருக்காவது சொல்லும் நல் வார்த்தைகள் நம்பிக்கையை உருவாக்கும்.

77 . மன அழுத்தத்துக்குக் காரணமானவர்களிடம் இரண்டு நாள்கள் கழித்து சாதாரணமாகப் பேசலாம். அழுத்தத்தில் இருக்கும்போது தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கக் கூடாது.

78 . முதுகை வளைக்காமல், நிமிர்ந்து அமர வேண்டும். கண்களை மூடாமல் சுற்றுப்புறத்தைக் கவனிக்கலாம்.

79 .நல்ல நகைச்சுவைக் காட்சிகள், நிகழ்ச்சிகள், பேச்சுக்களை யூடியூபில் கேட்கலாம். ஜோக்ஸ் படிக்கலாம்.

80 .ஏதாவது இசைக்கருவி வாசிக்கத் தெரிந்தால் அதனை ஈடுபாட்டுடன் வாசிக்கலாம். புதிய டியூன்கள் உருவாக்கலாம். நன்கு தெரிந்த பாடலை மீண்டும் மெருகேற்றி வாசிக்கலாம்.

81 .வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யலாம்.

82 .பிரச்னையை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதலாம். அதற்கு என்ன தீர்வு என்பதையும் படிப்படியாக எழுதலாம்.

83 .அழுத்தத்துக்கு யார் காரணமோ அவர்களுக்கு எழுதுவதுபோல ஒரு நீண்ட கடிதம் எழுதலாம். அதில் நம் உணர்வுகளைக் கொட்டலாம். திட்ட வேண்டுமென்றால் திட்டலாம். எழுதும்போது அவர்களிடம் சொல்லிவிட்ட உணர்வு ஏற்படும். மனம் லேசாகும்.

84 .அடுத்து நாம் செய்ய வேண்டியவை, நமது பொருளாதாரம், குடும்பம், சமூக இலக்குகளை ஒரு பெரிய கார்ட்போர்டில் எழுதலாம். அதைக் கண்படும் இடத்தில் மாட்டி வையுங்கள். பெரிய இலக்குகள் உங்கள் மன அழுத்தங்களைப் போக்கிடும்.

85 .ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் வரையலாம். தெரியாதபட்சத்தில் கன்னாபின்னாவென்று நிறங்களை விரவி, ஓர் உருவமோ மாடர்ன் ஆர்ட்டோ வரைய முயற்சிக்கலாம்.

86 .புதினா சேர்த்துக் கிரீன் டீ தயாரித்துக் குடிக்கலாம். கிரீன் டீ மன அழுத்தத்தைக் குறைக்கும்.

87 .ஐஸ்கிரீம் சாப்பிடலாம். ரசித்து ருசித்துச் சாப்பிட வேண்டும்.

88 .ஏதேனும் முதியோர் இல்லத்துக்கோ, ஆதரவற்றோர் இல்லத்துக்கோ தன்னார்வலராகச் செல்லலாம். முகம் தெரியாதவர்களுக்கு களத்தில் இறங்கி உதவலாம். சாலையோரங்களில் வசிப்போருக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கலாம்.

89 .பேருந்தில் நீண்ட தூரப் பயணம் போகலாம். அதுவும் பகல் பயணமாக இருக்க வேண்டும். வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லலாம்.

90 .யோகா செய்யலாம். ஆசனங்களை முறைப்படி கற்றுக்கொண்டு தினமும் செய்ய வேண்டும்.

91. மூச்சுப் பயிற்சியில் அமர்ந்து சுவாசத்தை கவனிக்கலாம். வயிறு பெரிதாகும் வரை மூச்சை இழுத்துப் படிப்படியாக வெளியில் விடலாம்.

92. இடது நாசியை ஒரு பக்கம் மூடிக்கொண்டு வலது நாசியால் சுவாசிக்க வேண்டும். இதை 12 முறை செய்ய வேண்டும். வலது நாசியை மூடிக் கொண்டு இடது நாசியால் 12 முறை சுவாசிக்க வேண்டும். முழுமையாக ஆக்சிஜன் உடலில் பரவும் போது மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

93. இலகுவான உடைகளை அணிந்துகொண்டு கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு ஒவ்வோர் உறுப்பாகக் கவனித்து ஓய்வெடுக்க வைக்கலாம். இது லேசான உறக்க நிலையை உருவாக்கும்.

94. மிதமான ஏசியில் வெள்ளை விரிப்பில் அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போடலாம்.

95. வீட்டை ஒழுங்குபடுத்தலாம் அல்லது அழகுப்படுத்தலாம். அலுவலக மேசையை ஒழுங்குப்படுத்தலாம்.

96. சமூகப்பிரச்னையால் வந்த மனஅழுத்தம் எனில் அதற்கு நம்மால் ஏதும் செய்ய முடியாது என்னும்பட்சத்தில், அதைக் கடந்து போவது உத்தமம்.

97. மன அழுத்தத்தில் இருந்து விடுபட்ட பின்னர், `நான் மன அழுத்தத்தில் இருந்தேன்’ என்ற நினைப்பு வரக்கூடாது. நாம் ஒரு மகிழ்ச்சிகரமான ஜீவன் என்று நினைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் தரும் விஷயங்களில் இருந்து தள்ளியிருக்க வேண்டும்.

98. இந்த எல்லா வழிமுறைகளாலும் தீர்க்க முடியாத அளவுக்கு மன அழுத்தம் அதிகமிருந்தால் தகுந்த பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர் அல்லது மருத்துவரை அணுகலாம்.

99. எதுவாக இருந்ததாலும், ‘விடுங்கள் பார்க்கலாம்’ என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டால் எதுவும் உங்களைப் பாதிக்காது.

100. மூன்று மந்திர வார்த்தைகளைக் கடைபிடியுங்கள். ‘வாட் நெக்ஸ்ட்’, ‘வாட் பெஸ்ட்’, ‘வாட் எல்ஸ்’. எந்த நெருக்கடியான சூழலிலும் இந்த வார்த்தைகளைப் பொருத்திப் பாருங்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

Tuesday, 1 May 2018

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?

அழகர் ஆற்றில் இறங்குகிறார்...

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?
10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை..!

நமக்கு எல்லோருக்கும் ஐப்பசியில்
தான் தீபாவளி வரும். ஆனால், மதுரை வாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப் படும்.

மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டி ருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

மதுரைக்கு வடக்கே சுமார் இருபது
கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.

தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு
பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.

எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப்
பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.

அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.

மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக் கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால்,

இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று -

அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.

அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார்
என்று பார்ப்போமா?

சுதபஸ் என்ற முனிவர், கங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார்.

பெருமாளையே நினைத்துக்
கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ'
(தவளையாக போகக் கடவாய்!)
என சாபமிட்டார்.

உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை)
நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்'
என சொல்லியிருக்கிறார் துர்வாசர்.

அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார்.

அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர்,

அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில்
குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.
அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர்,  வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.

நான்காம் நாள் இரவு தல்லாகுளம்
பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்து க்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது.

அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...

இந்த வருஷம் பச்சைப்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்...
அனைவருக்கும் மகிழ்ச்சி !

என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது -

கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால்
நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி
வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது.

அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது.

அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள்.

அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.

ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம்

(இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.

தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.

பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில்

(திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது)

 தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.

எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.

காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு.

 இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர்.

அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 *சித்திரை திருவிழா: பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகர், மதுரையில் வைகை ஆற்றில் இறங்கினார்.*

*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு, வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.*

*கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்றார் வீர ராகவ பெருமாள்.*