நான் இங்கே சொல்லப்போவது சேவை பற்றிய சில சுவாரசியமான கதைகளை...
ஒரு நிமிஷம் ப்ளீஸ் .....
சமூக சேவை,தேச சேவை,மக்கள் சேவை,மகேசன் சேவை,கருட சேவை,அரையர் சேவை ,மொழி சேவை என்ற ரேஞ்சுல ஏதோ சொல்லப்போறேன் என்று நினைக்காதீங்க....
நான் இப்போது பாடப்போவது நாம் சாப்பிட விரும்பும் சுவையான சேவை புகழை!!!
சமீபத்தில் நானும் என் தோழியும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம்...
முஹுர்த்ததுக்கு முதல் நாள் மாலை நிச்சயதார்த்தம்...
டிபன் பந்தியில் நல்ல கூட்டம் ..
மைசூர் போண்டா ...
பூரி கிழங்கு ....
பாதுஷா...
தேங்காய் சேவை ....
லெமன் சேவை ....
சட்னி ....
சாம்பார் ...
என்று மெனு அமர்க்களப்பட்டது...
அங்கே,
மற்ற ஐட்டங்களை விட சேவைக்குத்தான் ரசிகர் பட்டாளம் அதிகம்...
பெரிய தொழிலதிபர்கள்,ஐ.டி. கும்பல்,வைர தோடு,மூக்குத்தி அணிந்த பெண்மணிகள் ,சல்வார் மங்கைகளில் ஆரம்பித்து அவர்களது சாதாரண டிரைவர்கள்,ஊழியர்கள் வரை அனைவரும் விரும்பி இரண்டாம் / மூன்றாம் முறை கூட கேட்டு வாங்கிச் சாப்பிட்டது சேவையை தான்!(நாங்களும் கூட....)
வீடு திரும்பும் வழியில் ,சேவையைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம்...
பேச்சு சேவையைப் பற்றி .தான்...
முன்பு வீட்டில் அடிக்கடி சேவை செய்யப்படும்.
ஆனால் இப்போது சேவை மிகவும் அரிதான பலகார வகை ஆகிவிட்டது ...
ஏனோ ,சென்னை ஹோட்டல்களில் மற்ற டிபன் வகைகளைப்போல சேவை கிடைப்பதில்லை....
ரொம்ப நச்சு வேலை வாங்கும் பதார்த்தம் என்று யாரும் அதை தினசரி செய்வதில்லையோ ?
சில மெஸ்களில் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்...தெரியவில்லை!
சில கடைகளில் அலுமினியம் பாயில் டப்பாக்களில் சேவை விற்கப்படுகிறது...ஆனால் அது சைடு டிஷ் இல்லாமல் விற்கப்படுவதால் அவ்வளவு சுவாரசியப்படுவதில்லை...
கோவையில் எல்லா ஹோடேல்களிலும் சேவை கிடைக்கும்...
அதிலும் அன்னபூர்ணா ஹோட்டல் சேவை-
சட்னி ,சாம்பாருடன் அருமையோ அருமையாக இருக்கும்....
இடியாப்பம் சேவை போல இருந்தாலும் சேவை சேவை தான்...அதற்க்கு இணை அதுவே தான்!
கொங்குநாட்டில் சேவைக்கு" சந்தகை "என்று பெயர்...
வெல்லம் சேர்த்த தேங்காய்ப்பாலுடன்
சந்தகயை சாப்பிடுவது அந்தப்பக்கத்து வழக்கம்...
ஆனால் ஹோட்டல்களில் சட்னி ,சாம்பாரே வழங்கப்படும்...
கர்நாடகாவிலும் சேவை" ஷாவிகே "என்ற பெயரில் பிரபலம்.
சாதா சேவையில்,சிறிது ஆவக்காய் ஊறுகாய்,அல்லது,
நல்லெண்ணெய்,மிளகாய்ப்பொடி கலந்து சாபிட்டுப்பாருங்கள் அதன் ருசியே தனி!
எள்ளு,வெள்ளம் கலந்து இடித்த சிகிளி பொடி சேவை ஒரு தனி ருசி !
மதுரை,நாகர்கோவில்,திருநெல்வேலி பக்கங்களில்
மோர்குழம்பு,வெங்காய வற்றல் குழம்பு போன்றவை காம்பிநேஷன் ....
பாலக்காட்டுப் பக்கம் சேவைக்கு உருளைக்கிழங்கு மசால் சைடு டிஷ் !
சில வீடுகளில் ரசத்தில் ஊற வைத்த சேவை ஸ்பெஷல்!
சில இடங்களில் குருமா சைடு டிஷ்ஷாக தரப்படும்...
அது ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை...
சாப்பாட்டுப் பிரியர்கள் சேவைக்கு பல காம்பிநேஷன்கள் கண்டுபிடித்து ரசித்து சாப்பிடுவதில் டாக்டரேட் பெற்றவர்கள் !
என் தோழி ,
தன் பாட்டி வீட்டில் சேவை செய்யப்படும் கதையை சொன்னாள் ...
"இன்று சேவை செய்வோமா?"
என்று பாட்டியோ ,வேறு யாரோ ஆரம்பிப்பார்கள்...
உடனே அந்த செய்தி காற்று வாக்கில் அக்கம்பக்கம் எல்லாம் பரவும்...
எதிர் வீட்டு மாமி,பக்கத்துக்கு வீட்டு அக்கா ,அடுத்த வீட்டுப்பாட்டி என்று ஒரு சின்ன டீம் வீட்டில் சேரும் ...
வாசலில் திண்ணையில் ஆண்கள் குழு சேருவார்கள்...
"சேவை பண்ணப்போறா...அதனால வெளில போற வேலையை நாளைக்கு ஒத்தி வச்சுட்டேன்!"
ஒரு சில படிகள் புழுங்கல் அரிசி ஊற வைக்கப்படும்...(தாராளமான காலம்!)
ஒரு பெரிய முறத்தில் தேங்காய்கள் துருவப்படும்...
எலுமிச்சைகள் பிழியப்படும்.
வெங்காய சாம்பார் கொதிக்கும்.
ஒன்றிருவர் கைமாற்றி ,மாற்றி அரிசியை
நைஸாக அரைக்க மாவு ரெடியாகும் ...
(grinder இல்லாத காலம்!)
அப்படியே களைப்புத்தெரியாதிருக்க அரட்டையும் களை கட்டும்...
மாவை கிளறி கொழுக்கட்டை பிடித்து வேகவைத்தவுடன் இளவட்டங்கள் உதவிக்கு அழைக்கப்படுவார்கள்...
"நம்ம ராமு மாதிரி உபகாரி உண்டோ ?நம்ம கிட்டு நிமிஷமாய் பிழிஞ்சு தள்ளிடுவானே " என்று ராமுவுக்கும் ,கிட்டுவுக்கும் ஐஸ் வைக்கப்படும்...
சமையலறையை ஒட்டிய தாழ்வாரத்தில் அம்மா,ஆட்டுகல்,உரல்(இன்று இவைகள்
ம்யுசியத்தில் உள்ளன )ஆகியவற்றுடன் ஒரு ராட்ஷச சேவை நாழியும் இருக்கும்.கிட்டத்தட்ட
இடுப்பளவு வரும் அந்த நாழியில் வெந்த உருண்டைகள் போடப்படும்...
கிட்டுவும் ,ராமுவும் தங்கள் புஜ பல பராக்கிரமங்களை காட்ட மாங்கு மாங்கு என்று சேவையை கீழேயுள்ள வாழை இலை அல்லது ,தாம்பாளங்களில் பிழியப்படும்....
இன்னொரு குரூப் அதில் தாளித்துக் கொட்டி தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை,எள்ளு சேவை,பருப்பு சேவை ,புளி சேவை என்று தயார் செய்யவார்கள்....
வாசலில் திண்ணையில் காத்திருக்கும் கும்பல் "ரைட் ராயலாக" சேவை ,சட்னி சாம்பார் எல்லாம் தயார் என்றவுடன் அதை ஒரு தாக்குத் தாக்க வருவார்கள் !!!!
ஆகமொத்தம் ,அந்த தெருவுக்கே சேவை விருந்து தான்...
10 நாட்களுக்குப் பிறகு இன்னொரு வீட்டில் சேவை செய்யப்படும் பொது அங்கேயும் இதே சங்கம் கூடும் !!!!
இன்று இது போன்ற அந்தக்காலத்து அன்னியோன்யம் பழங்கதை ஆகிவிட்டது...
ஆனாலும் கூட சேவை பிழியப்படும் நாட்களில் குடும்பத்தார் உதவி இருந்தால் வசதி தான்!
அட்லீஸ்ட், வீட்டு வேலையாள் பிழிய உதவும் பொது சிரமமின்றி செய்ய முடியும்!
என்னென்னவோ புதிய முறை சேவை மேக்கர் மார்க்கெட்டில் வந்தாலும் அது நம் பாரம்பரிய சேவை நாழி போல இல்லை என்பது நிஜம்!
கூடிய சீக்கிரம் யாராவது ஒரு மஹானுபாவர் ஒரு நல்ல ஆட்டோமாடிக் சேவை மேக்கர் கண்டுபிடித்தால் நல்லது!
இப்பேர்ப்பட்ட சேவை பிரியையான நான் ஒரு எனக்கு நேர்ந்த ஒரு சேவை தமாஷ்ஷை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
ஒரு முறை கோவை சென்று திரும்பும் போது ,அங்கே அம்மா வீட்டில் உள்ள சேவை நாழியை (என்ன இருந்தாலும் பிறந்த வீடுப்ப்ண்டம் ஸ்பெஷல் தானே) பத்திரமாக என் ஏர் பாகில் புடவைகளுக்கு நடுவே பாக் செய்து சென்னை விமானத்தை பிடிக்கக் கிளம்பிவந்தேன்.
செக்யூரிட்டி செக்கிங்கில் என் பை மட்டும் அனாதை போல நிற்கிறது...அதில் உள்ள சேவை நாழியை எக்ஸ் ரே யில் பார்த்த செக்யூரிட்டிகள் படு டென்ஷன் ஆகி பையின் சொந்தக்காரியான என்னை ஒரு டெர்ரரிஸ்ட் ரேஞ்சில் பார்க்க... நான் ஆங்கிலமும் ,தமிழும் புரியாத அந்த சர்தார்ஜியிடம் இது சேவ் மேக்கிங் மிசின் என்று விளக்க அவர் விரோதம் +குழப்பத்துடன் என்னைப்பார்க்க யாரோ ஒரு விமான நிலைய சிப்பந்தி," இது மசின் கன் எல்லாம் இல்லை ,வெறும் பலகாரம் செய்யும் சமாசாரம்"என்று அவருக்குப்புரியும் விதத்தில் விளக்க என் லக்கேஜ் மெல்ல நகர்ந்தது விமானம் நோக்கி சென்றது!...அந்த சர்தாரும் என்னை பார்த்து சிநேகமாக சிரித்தார்!
என்ன தான் பெண்கள் பத்திரிகைகளில் வரும் இலவச இணைப்பில் 30 வகை சேவைகள் ரெசிபிகள் எழுதினாலும் என்றும் "டாப்"பில் இருப்பது காலம் காலமாக செய்யப்படும் சில சேவை வகைகள் தான்...
ஒரு "பப்பே " டின்னரில் பனீர் மட்டர் சேவை செய்து வைத்திருந்தார்கள்.
பார்க்க அழகாக இருந்தது...ஆனால் சாப்பிடதான் முடியவில்லை!
பாக்கெட்டில் வரும் இன்ஸ்டன்ட் சேவையை வெந்நீரில் ஊற வைத்து ,தாளித்து சாப்பிடும் போது ஏதோ பிளாஸ்டிக் ருசி தான் வருகிறது...
ஒரிஜினல் சேவைக்கு பக்கத்தில் கூட அதனால் வர முடிவதில்லை!
அதனால் தானோ இன்றும் கூட கஷ்டப்பட்டு அரைத்து ,கிளறி,பிழிந்து ஆயாசத்துடன் சேவை செய்து சாப்பிடும் போது அதன் ஸ்பெஷல் ருசி நம்மை எங்கோ கொண்டு செல்கிறது!
%%%%%%%%%%%%%%%%%%
~~~~~~~~~~~~~~~~~~~~~
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Enjoyed reading Usha madam! Nice post on "sevai"
ReplyDeleteThank you,Mahi
Deleteஅத்தனையையும் பொறுமையாகப் படித்தேன். படங்கள் எல்லாமே அழகோ அழகு.
ReplyDeleteபதிவே முந்திரி தூவிய எனக்கு மிகவும் பிடித்த தேங்காய்ச் சேவை போல ருசியோ ருசியாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இந்த சேவை, சேவை நாழி பற்றி என்னிடமும் நிறைய அனுபவக்கதைகள் உள்ளன. பேசினால் பேசிக்கொண்டே போகலாம் தான். முடிந்தால் தனிப்பதிவாக பிறகு என்றாவது ஒருநாள் நகைச்சுவை கலந்த சேவையாகப் பகிர்ந்து எழுத்துலகுக்கு என்னால் முடிந்த சேவை செய்கிறேன். ;)))))
மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள கோபு
தங்கள் கருத்துக்கு நன்றி,சார்.கூடிய சீக்கிரம் உங்கள் சேவை கதைகளை எழுதுங்கள்....படிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
Deleteஆஹா! அற்புதமான சேவை. சேவை செய்வதற்கு நிறைய மக்களின் சேவையும் தேவை. ஊர் கூடி தேர் இழுப்பது போல் சேவையும் ஒரு கூட்டு முயற்சிதான்.
ReplyDelete