ஸ்தல வரலாறு :
மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை.
அங்குள்ள `கண்டோபா' என்ற மசூதியில் தான் தங்கியிருந்தார். பாபா நிகழ்த்திய முதல் அற்புதம், நானா சாஹேப் என்பவருக்கு குழந்தை பாக்கியம் அருளியதுதான். அதன் பிறகுதான் அவரது புகழ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இன்று உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.
அதிசய வேம்பு :
பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.
3 முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அற்புத கல் :
பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.
பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள். கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது. நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.
இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதிசய நந்தா தீபம் :
இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.
ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சத்ய நாராயண பூஜை :
இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.
உண்டியல் காணிக்கை :
கோவிலுக்கு வருபவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக் கொடுப்பது போல், இங்கு வரும் பக்தர்களும் பாபாவிற்கு காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். வாரம் தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் இங்குள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் 2 கோடி ரூபாய்க்கும் ரொக்கப் பணம் மட்டும் காணிக்கையாக கிடைக்கிறது.
திருவிழா :
குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.
பாபா கேட்ட வெந்நீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.
எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்... என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.
பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் :
குவியும் பக்தர்கள் :
இன்றும் அற்புதங்கள் நிகழ்த்தும் பாபாவைத் தேடி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அங்கு தினமும் 50 ஆயிரம் பேர் வருகை தருவதாகவும், விசேஷ நாட்களில் (வியாழன், சனி மற்றும் ஞாயிறு) அவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுவதாகவும், விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாகவும் சீரடி திருத்தலம் பற்றிய ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தங்கும் அறைகள் :
இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களது வசதிக்காக குறைந்த வாடகை கட்டணத்துடன் கூடிய 1,500 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
ரெயில் டிக்கெட் முன்பதிவு :
வெளியூர் பயணிகளின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே ரெயிலுக்கு முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுண்டர்களும் இந்திய ரெயில்வே சார்பில் திறக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய உணவுக்கூடம் :
திரண்டு வரும் பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக இடவசதி கொண்ட உணவுக் கூடமும் இக்கோவிலில் செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவுக்கூடமான இங்கு ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் சாப்பிடலாம். இங்கு உணவருந்த வரும் பக்தர்களுக்கு 10 ருபாய் கட்டணத்தில் பருப்புக்குழம்பு, சாதம், சப் பாத்தி, பூரி 2 வகை கூட்டு மற்றும் இனிப்புடன் தரமான சாப்பாடு வழங்கப்படுகிறது.
அரிய பெரிய பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDeleteஓய் சாய் ராம்!
ஜெய் சாய் ராம்!