badge

Followers

Wednesday, 2 May 2018

மன அழுத்தம் வராமல் சமாளிக்க சில டிப்ஸ்



மன அழுத்தம் வராமல் சமாளிக்க சில டிப்ஸ் ...

மன அழுத்தம் ஏற்பட்டபின் தீர்வு தேடுவதை விட வருமுன் காப்பதுதான் ஆகச்சிறந்த வழி. அதற்கான 100 வழிமுறைகளைப் பார்க்கலாம்.

1.அதிகாலை எழும்போதே புன்னகையுடன் எழலாம். முடிந்தவரை புன்னகையுடன் அன்றைய பொழுதைக் கழிக்கலாம். புன்னகையே மன அழுத்தத்துக்கு முதல் மருந்து.

2. எழுந்த உடன் படுக்கையில் அமைதியாக கண்திறந்து 10 நிமிடம் அமரலாம். மூச்சை நன்றாக இழுத்து சுவாசிக்கலாம்.

3. எழுந்து அமர்ந்தபடியே, நாம் மகிழ்ச்சியுடன் வாழ வாய்ப்பளித்து நம் விருப்பங்களை அடைய உதவிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லலாம். நமக்கு உதவும் நண்பர்களுக்கும் மனதளவில் நன்றி சொல்லலாம். நன்றி சொல்வது மன அழுத்தம் வராமல் வைத்திருக்கும்.

4. எழுந்ததுமே செல்போன் ஒளித்திரையைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். குறிப்பாகத் தலைமாட்டில் செல்போன் வைப்பதைத் தவிருங்கள்.

5. காலை எழுந்து ரெஃப்ரெஷ் ஆனதும் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்து ‘ஹாய்’ சொல்லலாம். அழகான, மகிழ்ச்சியான ஆள் நீங்கள்தான் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

6. வீட்டில் உள்ள எல்லோருக்கும் இயந்திரத் தனமாக இல்லாமல் மனப்பூர்வமாக இதயத்தில் இருந்து ‘குட் மார்னிங்’ சொல்லலாம்.

7. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருந்தால், நல்ல செய்திகளை முதலில் தேடிப்படிக்கலாம். நம்மை முதலில் டென்ஷன் ஆக்குவது பொதுவான செய்திகள்தான் என்கிறது ஓர் ஆய்வு! பஸ் கட்டண உயர்வு என்றதும் மனம் கோபப்படுகிறது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற ஆதங்கம் இயலாமையாக மாறி அழுத்தம் ஏற்படுகிறது.

8.காலை சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடம் நிற்கலாம் அல்லது நடக்கலாம். புதிய சிந்தனைகள் தோன்றும்.

9. காபி அல்லது டீ குடிக்கும்போது ரசித்துக் குடிக்கலாம். எந்த வேலையாக இருந்தாலும் ரசித்துச் செய்தால் அது சுமையாகத் தெரியாது.

10. நிற்கும்போதும் நடக்கும்போதும் அன்று செய்ய வேண்டிய வேலைகளை மனதில் வரிசையாகப் பட்டியலிடலாம். மறதியால் ஏற்படும் டென்ஷனைத் தவிர்க்க இது உதவும்.

11. யோசித்த செயல்களை, வேலைகளை உடனடியாக ஒரு நோட்டில் அல்லது டைரியில் எழுதலாம். செய்ய வேண்டிய வேலைகளை எழுதுபவர்கள், மன அழுத்தத்தில் இருந்து தன்னைக் காத்துக்கொள்கின்றனர்.

12. தூங்கி எழுந்து, காலைக்கடன்கள் முடித்து 30 நிமிடத்துக்குப் பின்னர் செல்போனைத் தொடுங்கள். அதுவும், முதல் நாள் இரவில் இருந்து நமக்கு வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகளைப் பார்த்தால் போதும்.

13.வாட்ஸ்அப் குரூப்களுக்குள் அதிகாலை போய் ‘குட்மார்னிங்’ போட்டே ஆகவேண்டும் என்று இல்லை.

14.யோகா அல்லது மூச்சுப்பயிற்சி செய்யும் வழக்கம் இருந்தால், காலையில் 20 நிமிடம் ஒதுக்கலாம். வழக்கம் இல்லாதவர்கள் உடனே யோகா கற்றுக் கொண்டு செய்யத் தொடங்குங்கள்.

15.காலை மிதமான சுடுநீரில் நிதானமாகக் குளிக்கலாம். அப்போது பரபரப்பு வேண்டாம்.

16.குளிக்கும்போது பிடித்த பாடலை, சத்தமாகப் பாடலாம் அல்லது ‘ஹம்’ செய்யலாம்.

17.அதிகாலையில், வார்த்தைகளில்லாத இசை கேட்கலாம். ஏதாவது ஓர் இசைக்கருவியின் ஒலி, நம்மை உற்சாகப்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளை தடுக்கும்.

18.பக்திப்பாடல்கள் அல்லது இதம் தரும் உரைகள் கேட்கும் வழக்கமிருந்தால், அதுவும் பலன் தரும். நல்ல சிந்தனைகள் ஏற்பட வழிவகுக்கும்.

19.சில பாடல்களைக் கேட்டால் சட்டென மனம் உற்சாகம் கொள்ளும். அப்படி நல்ல நினைவுகளை உருவாக்கும் 10 பாடல்களைத் தேர்வுசெய்து அவற்றை தினமும் கேட்கலாம்.

20.காலை 11 மணிவரை ஃபேஸ்புக்குக்குள் போகாமல் இருக்கலாம். இதனால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

21.பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் நம் உணர்வுகளைப் பதிவிடுவதில் தவறில்லை. அவை எதிர்வினை ஏற்படுத்தாதவையாக இருத்தல் நலம். மேலும் லைக்கோ, கைதட்டலோ வரவில்லை என்று அதனையே திரும்பத் திரும்பப் பார்ப்பது ஸ்ட்ரெஸ் உருவாக்கும்.

22. சமூக வலைத்தளங்களில் நாம் பதிவிடும் கருத்துகள் வேறு யாரையாவது எதிர்வினை செய்யத் தூண்டுமாறு இருந்தால், அந்த நட்பை இழக்காமல் எப்படி பதில் சொல்வது என்பதற்குத் தயாராக வேண்டும்.

23. நம்மைச் சுற்றியோ, நம் நட்பு வட்டத்திலோ எப்போதும் எதிர்மறையாகப் பேசிக் கொண்டு எதிர்வினையாற்றும் நபர்கள் இருந்தால், அவர்களிடமிருந்து உடனடியாக ஒதுங்கிவிடலாம்.

24. சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது, சமூக வலைத்தளத்தில் உலவுவதைத் தவிர்த்து ரசித்துச் சாப்பிடலாம். உங்கள் உணவில் போதுமான சத்துகள் இருக்கட்டும். உடலுக்குப் போதுமான எனர்ஜி கிடைப்பதும் தேவையற்ற டென்ஷனைத் தவிர்க்கும்.

25. உங்கள் உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

26. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது செரிமானப் பிரச்னையை உருவாக்கும். அதனால், தேவையற்ற டென்ஷன். சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள்.

27. வீட்டிலிருந்து கிளம்பும்போது அலுவலகத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய பொருள்களை எடுத்திருக்கிறீர்களா என்பதைச் செக் செய்துவிட்டு கிளம்புங்கள். எதையேனும் மறந்துவிட்டால் தேவையற்ற டென்ஷன் ஏற்படும். உங்களது வாகனத்தில் போதுமான எரிபொருள் உள்ளதா என்பதையும் கவனிப்பது அவசியம்.

28. சாலையில் வேகமெடுக்கிறீர்கள். வாகன நெரிசலைக் கண்டவுடன் டென்ஷன் ஆகவேண்டாம். நீங்கள் எரிச்சல் அடைவதால் எதுவும் மாறிவிடாது. வாகன நெரிசலை வேடிக்கைப் பாருங்கள்.

29. ஓர் இடத்துக்குச் செல்ல பயண நேரத்துக்கு 10 நிமிடம் முன்னரே கிளம்புங்கள். இடையில் ஏற்படும் தாமதங்களால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

30.பணியிடத்தில் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவது முக்கியம். இதனால் உடன் இருப்பவர்களால் ஏற்படும் சவால்களைத் தவிர்க்கலாம்.

31.யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். பிறர் பற்றி இன்னொருவர் குறை கூறினாலும் அதற்கு காதுகொடுக்காமல் பேச்சை மடை மாற்றலாம்.

32. அலுவலக அரசியல்களுக்குள் சிக்காமல் இருக்க ஒரே வழி சொன்ன வேலைகளைத் திறம்படச் செய்வது. அதற்கு வரும் விமர்சனங்களை நேர்மறையாக ஏற்றுக்கொண்டு நம்மைக் கூர்தீட்டிக் கொள்ளலாம்.

33. நன்றாக வேலை செய்ததற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அங்கலாய்ப்பதைத் தவிருங்கள். எல்லோரும் நம் வேலையைப் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவசியமற்றது.

34. உழைப்பையும் உற்சாகத்தையும் சரிவிகிதமாகக் கலந்து வேலை பார்த்தால் எல்லா இடங்களில் இருந்தும் பாராட்டுக் குவியும்.

35. செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள். வேலைகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படும் மன அழுத்தம் பெரியது.

36. உடனடியாக முடிக்க வேண்டிய வேலை எதுவோ அதில் கவனம் செலுத்தலாம்.

37. வேலை செய்யும் இடத்தில், அனைவரிடத்திலும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கண்டுபிடித்து உளமாரப் பாராட்டலாம். அது அவர்களிடத்தில் புன்னகையை வரவழைக்கும்.

38. பிடித்த வேலையைச் செய்வதைவிட தேவை யான வேலையைச் செய்யலாம். நமக்குப் பிடித்த வேலையைப் பிறகு செய்துகொள்ளலாம்.

39. நண்பர்கள் வெளியில் செல்ல அழைக்கும்போது வேலை இருந்தால்,
உடனடியாக நோ சொல்லுங்கள். அவர்களைத் திருப்திப்படுத்த நினைப்பது நிச்சயம் மன அழுத்தத்தை உருவாக்கும்.

40. பிறருக்கு இயன்றால் உதவி செய்யலாம். அப்படிச் செய்துவிட்டு சிக்கல் வந்தால் பின் அதனையும் சமாளிக்க முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

41 . ஒருவருக்கு உதவிவிட்டு அவர் நன்றி சொல்லவில்லை, நாம் செய்த உதவியின் வலிமை தெரியவில்லை. நம்மை அவர்கள் மதிக்கவில்லை என்று எண்ணுவது தவறு. உதவியை நிம்மதியாகச் செய்துவிட்டு நகர்தல் நலம்.

42 . நகைச்சுவையாகப் பேசப்பழகுங்கள். காணும் காட்சிகளில், செயல்களில் நகைச்சுவையைக் கண்டறிந்து பேசலாம். அது உங்களை ரிலாக்ஸ் ஆக்கும்.
43 . நல்ல நூல்களைப் படிக்கலாம், படைப்புகளும், கவிதைகளும் மன அழுத்தத்தை நீக்கும்.

44 . உடல் நலத்தில் அக்கறையுடன் இருங்கள். நாக்குக்குப் பிடித்த உணவுகளைக் கட்டுப்பாடின்றி சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் மன அழுத்தம் உருவாகாமல் தடுக்கும்.

45 . மாலை வீட்டுக்கு வந்த உடன் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் சில நிமிடங்கள் உரையாடலாம். அன்றைய நிகழ்வுகளில் சுவாரஸ்யமானவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம்.

46 . மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. அன்பு என்பதே குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுதான். ஆகவே, இல்லத்தில் உள்ளவர்களைக் குறை காணாமல், அன்பாகச் சரிசெய்ய முயலலாம்.

47 . பொருளாதாரத்தில் கொஞ்சம் விழிப்பு உணர்வு தேவை. நம் வருமானத்துக்குள்ளாக செலவுகளை வைத்துக்கொள்வது மாதாந்திர மன அழுத்தத்தைக் குறைக்கும்.

48 . அதிக எதிர்பார்ப்பில்லாத நிதிமேலாண்மை முக்கியம். வேலையில் எவ்வளவு சம்பளம் வரும்; தொழிலில் இவ்வளவு சராசரி வருமானம் வரும் என்று தெரியும். அதற்கு மேல் இவ்வளவு இன்சென்டிவ் வரும் என்று கற்பனையாக நினைப்பதால், அதில் ஒரு ரூபாய் குறைந்தால்கூட அழுத்தத்தைக் கொடுக்கும்.

49 . ஒரு பொருளை வாங்குவதற்கு முன் ஒருமுறைக்கு பத்துமுறை இது நமக்குத் தேவையா என்று யோசித்துப் பார்த்து வாங்கலாம். தேவையில்லாத பொருள்களை அதிகமாக வாங்கினால் பின் தேவையான பொருள்களை விற்க வேண்டிவரும்.

50 . வாங்கும் பொருளின் தரத்தை கவனித்தே வாங்க வேண்டும். விலை குறைவாகக் கிடைக்கிறதென்று தரமில்லாத பொருள்களை வாங்குபவர்கள் கட்டாயம் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்.

51 . அண்டை அயலார், உறவினர்கள், நண்பர்களின் வாழ்க்கைத்தரத்துடன் நமது வாழ்க்கைத்தரத்தை ஒப்பிடுவது மிகப்பெரிய மன அழுத்தக் காரணி. அவர்கள் பின்னணி, நிதிநிலைமை இவற்றை நம்முடன் ஒப்பிட்டால் நமக்கு வரும் மன அழுத்தம் எதையுமே ரசிக்க விடாது.

52 . `நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்’ என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். ‘எப்படி இருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘சூப்பர், செமையா இருக்கேன்’ என்று உற்சாகமான பதிலைச் சொல்லுங்கள். உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

53 . ‘என்னவோ இருக்கேன்’, ‘ஓடிக்கிட்டு இருக்கு’ என்பது போன்ற பதில்களைச் சொல்ல வேண்டாம். அப்படி பதில் சொல்பவர்களிடம் நாம் ஒட்டவும் வேண்டாம். உற்சாகமாகப் பேசுபவர்களிடம் நட்பைத் தொடர்வோம்.

54 . குடும்பத்துக்குள் எதிர்பார்ப்பு களைக் குறைத்துக் கொள்ளலாம். நாம் நினைத்தபடி நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைப்பது, நாம் எதிர்பார்ப்புகளை குடும்பத்தில் உள்ள அனைவரும் பூர்த்தி செய்ய வேண்டும் என நினைப்பது, இரண்டும் நமக்கும் அவர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

55 . வீட்டில் குழந்தைகளுடன் விளையாடலாம். கொஞ்சம் பெரிய குழந்தைகளாக இருப்பின் படிப்பைத் தவிர மற்ற விஷயங்கள் பேசலாம்.

56 . இரவு தூங்கப் போவதற்கு முன் நல்ல இசை, நல்ல நூல், நல்ல தகவல்கள் மனதுக்குள் செல்வது நிம்மதியாகத் தூங்க வைக்கும்.
57. இரவு விரைவாகத் தூங்கச் செல்வது முக்கியம். அதிகபட்சம் இரவு 11 மணிக்கு மேல் விழித்திருக்க வேண்டாம்.

58 . இன்னொருவரின் செயலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடலாம். நிதானமாகச் சிந்தித்து பதிலளிப்பதன் மூலம் மன அழுத்தம் ஒதுங்கி நிற்கும்.

59 . எந்தச் செயலுக்கும் ‘ரியாக்ட்’ செய்வதை விட, ‘ரெஸ்பாண்ட்’ செய்யும்போது நமக்கு மரியாதை அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து செயல்படுத்தும்போது நம்மால் பிறருக்கும் மன அழுத்தம் வராது.

60 . எப்போதும் மன அழுத்தம் வராமல் இருக்க நிதானமாக, நிறுத்தி ஆழமாக சுவாசித்தாலே போதும். எண்ணங்களில் நிதானம் இயல்பாக வந்துவிடும்.

61. அதிகாலை சீக்கிரம் எழுந்து விடுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதிகாலையில் விழிப்பவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை. இது அனைத்து வேலையிலும் பிரதிபலிக்கும். தாமதமாக எழுந்துவிட்டோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஏதோ ஒரு காரணத்துகாக மன அழுத்தம் வந்துவிட்டதென்றால் மனம் அந்த ஒரு விஷயத்தையே நினைத்துக்கொண்டிருக்கும். வேறு எந்த வேலையிலும் ஒட்டாது. அது அடுத்தடுத்த தவறுகளைச் செய்ய வைக்கும். விரக்தி அதிகமாகி தற்கொலை எண்ணம் வரை கொண்டுசெல்லும். இந்தச் சூழலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

62 .இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வந்துவிடுங்கள். இயற்கையை வேடிக்கை பார்க்கலாம். குழந்தைகள் கூடும் இடம், பூங்கா, கடற்கரை, மலை, ரயில்வே ஸ்டேஷன் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அமருங்கள்.

63 .வெதுவெதுப்பான நீரில் நீண்ட நேரம் குளிக்கலாம். எப்போதும் உபயோகிக்கும் சோப்புக்குப் பதில் புதிய வாசனையுள்ள சோப்பைப் பயன்படுத்தலாம். வாசனைக்கு எண்ணங்களை மாற்றும் சக்தி உண்டு.

64 .மன அழுத்தம் இருக்கும் போது அறைக்குள் அடைந்திட வேண்டாம். ஹால், வராண்டா என நன்றாக காற்று வரும் இடங்களில் அமருங்கள். அகர்பத்தி அல்லது ரூம் ஸ்பிரே பயன்படுத்தி இருக்கும் இடத்தை நறுமணம் கமழ வைத்திருங்கள்.

65 .இருப்பதிலேயே புத்தம் புதிய, பிடித்த ஆடையை அணியுங்கள். அந்த ஆடையோடு வெளியில் ரிலாக்ஸ்டாக நடக்கலாம்.

66 .தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்கள் கண்ணில் படும்படி இருந்தால் மனம் லேசாகும்.

67 .நல்ல நண்பர்களுக்கு போன் செய்து பேசலாம். அவர்கள் பிசியாக இருந்தால் வருந்தாமல் யார் ஓய்வாக இருக்கிறார்களோ அவர்களிடம் ஜாலியாகப் பேசுங்கள்.

68 .கிராஃப்ட் வொர்க், பெயின்டிங், சமையல் எனப் பிடித்த பொழுதுபோக்கில் இறங்குங்கள். மனம் லேசாகும்.

69 .எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். உப்பும் சர்க்கரையும் சமமாகக் கலந்திருக்க வேண்டும். வைட்டமின் சி, மன அழுத்தத்தைச் சரி செய்ய உதவும்.
70 .பெட் அனிமலுடன் நேரம் செலவிடலாம்.

71 .உண்மையான அன்பு கொண்டவர்களின் அருகாமையில் இருக்கலாம். அவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம்.

72 . டயரி எழுதலாம். உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்கள், சந்தித்த நல்ல மனிதர்கள் பற்றி எழுதலாம்.

73 . டெடி பேர், தலையணை போன்ற மென்மையான பொருள்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்திருக்கலாம். அதனுடன் பேசலாம். மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்க்கலாம்.

74 . கண்ணாடியில் நம்மைப் பார்த்து ரசிக்கலாம். பெண்கள் மனதுக்குப் பிடித்த வகையில் மேக்கப் செய்து அழகுபடுத்திக் கொள்ளலாம். ஆண்கள் கிளீன் ஷேவ் செய்துகொண்டு ஒரு குளியல் போடலாம்.

75 . பிடித்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். இனிப்பில்லாத சூயிங்கம் மெல்லலாம்.

76 . ஆன்மிக நம்பிக்கை இருந்தால் வழிபாட்டுத்தலங் களுக்குச் செல்லலாம். அங்கு அமைதியாக அமர்ந்திருங்கள். யாராவது யாருக்காவது சொல்லும் நல் வார்த்தைகள் நம்பிக்கையை உருவாக்கும்.

77 . மன அழுத்தத்துக்குக் காரணமானவர்களிடம் இரண்டு நாள்கள் கழித்து சாதாரணமாகப் பேசலாம். அழுத்தத்தில் இருக்கும்போது தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கக் கூடாது.

78 . முதுகை வளைக்காமல், நிமிர்ந்து அமர வேண்டும். கண்களை மூடாமல் சுற்றுப்புறத்தைக் கவனிக்கலாம்.

79 .நல்ல நகைச்சுவைக் காட்சிகள், நிகழ்ச்சிகள், பேச்சுக்களை யூடியூபில் கேட்கலாம். ஜோக்ஸ் படிக்கலாம்.

80 .ஏதாவது இசைக்கருவி வாசிக்கத் தெரிந்தால் அதனை ஈடுபாட்டுடன் வாசிக்கலாம். புதிய டியூன்கள் உருவாக்கலாம். நன்கு தெரிந்த பாடலை மீண்டும் மெருகேற்றி வாசிக்கலாம்.

81 .வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யலாம்.

82 .பிரச்னையை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதலாம். அதற்கு என்ன தீர்வு என்பதையும் படிப்படியாக எழுதலாம்.

83 .அழுத்தத்துக்கு யார் காரணமோ அவர்களுக்கு எழுதுவதுபோல ஒரு நீண்ட கடிதம் எழுதலாம். அதில் நம் உணர்வுகளைக் கொட்டலாம். திட்ட வேண்டுமென்றால் திட்டலாம். எழுதும்போது அவர்களிடம் சொல்லிவிட்ட உணர்வு ஏற்படும். மனம் லேசாகும்.

84 .அடுத்து நாம் செய்ய வேண்டியவை, நமது பொருளாதாரம், குடும்பம், சமூக இலக்குகளை ஒரு பெரிய கார்ட்போர்டில் எழுதலாம். அதைக் கண்படும் இடத்தில் மாட்டி வையுங்கள். பெரிய இலக்குகள் உங்கள் மன அழுத்தங்களைப் போக்கிடும்.

85 .ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் வரையலாம். தெரியாதபட்சத்தில் கன்னாபின்னாவென்று நிறங்களை விரவி, ஓர் உருவமோ மாடர்ன் ஆர்ட்டோ வரைய முயற்சிக்கலாம்.

86 .புதினா சேர்த்துக் கிரீன் டீ தயாரித்துக் குடிக்கலாம். கிரீன் டீ மன அழுத்தத்தைக் குறைக்கும்.

87 .ஐஸ்கிரீம் சாப்பிடலாம். ரசித்து ருசித்துச் சாப்பிட வேண்டும்.

88 .ஏதேனும் முதியோர் இல்லத்துக்கோ, ஆதரவற்றோர் இல்லத்துக்கோ தன்னார்வலராகச் செல்லலாம். முகம் தெரியாதவர்களுக்கு களத்தில் இறங்கி உதவலாம். சாலையோரங்களில் வசிப்போருக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கலாம்.

89 .பேருந்தில் நீண்ட தூரப் பயணம் போகலாம். அதுவும் பகல் பயணமாக இருக்க வேண்டும். வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லலாம்.

90 .யோகா செய்யலாம். ஆசனங்களை முறைப்படி கற்றுக்கொண்டு தினமும் செய்ய வேண்டும்.

91. மூச்சுப் பயிற்சியில் அமர்ந்து சுவாசத்தை கவனிக்கலாம். வயிறு பெரிதாகும் வரை மூச்சை இழுத்துப் படிப்படியாக வெளியில் விடலாம்.

92. இடது நாசியை ஒரு பக்கம் மூடிக்கொண்டு வலது நாசியால் சுவாசிக்க வேண்டும். இதை 12 முறை செய்ய வேண்டும். வலது நாசியை மூடிக் கொண்டு இடது நாசியால் 12 முறை சுவாசிக்க வேண்டும். முழுமையாக ஆக்சிஜன் உடலில் பரவும் போது மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

93. இலகுவான உடைகளை அணிந்துகொண்டு கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு ஒவ்வோர் உறுப்பாகக் கவனித்து ஓய்வெடுக்க வைக்கலாம். இது லேசான உறக்க நிலையை உருவாக்கும்.

94. மிதமான ஏசியில் வெள்ளை விரிப்பில் அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போடலாம்.

95. வீட்டை ஒழுங்குபடுத்தலாம் அல்லது அழகுப்படுத்தலாம். அலுவலக மேசையை ஒழுங்குப்படுத்தலாம்.

96. சமூகப்பிரச்னையால் வந்த மனஅழுத்தம் எனில் அதற்கு நம்மால் ஏதும் செய்ய முடியாது என்னும்பட்சத்தில், அதைக் கடந்து போவது உத்தமம்.

97. மன அழுத்தத்தில் இருந்து விடுபட்ட பின்னர், `நான் மன அழுத்தத்தில் இருந்தேன்’ என்ற நினைப்பு வரக்கூடாது. நாம் ஒரு மகிழ்ச்சிகரமான ஜீவன் என்று நினைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் தரும் விஷயங்களில் இருந்து தள்ளியிருக்க வேண்டும்.

98. இந்த எல்லா வழிமுறைகளாலும் தீர்க்க முடியாத அளவுக்கு மன அழுத்தம் அதிகமிருந்தால் தகுந்த பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர் அல்லது மருத்துவரை அணுகலாம்.

99. எதுவாக இருந்ததாலும், ‘விடுங்கள் பார்க்கலாம்’ என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டால் எதுவும் உங்களைப் பாதிக்காது.

100. மூன்று மந்திர வார்த்தைகளைக் கடைபிடியுங்கள். ‘வாட் நெக்ஸ்ட்’, ‘வாட் பெஸ்ட்’, ‘வாட் எல்ஸ்’. எந்த நெருக்கடியான சூழலிலும் இந்த வார்த்தைகளைப் பொருத்திப் பாருங்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment