badge

Followers

Saturday, 20 December 2014

ஏழுமலையான், குபேரனிடம் பெற்ற கடன் தொகை எவ்வளவு?'




திருப்பதி: திருமலை ஏழுமலையான், பத்மாவதி தாயாரை மணம் புரிய குபேரனிடம் பெற்ற கடன், 21 லட்சம் பொற்காசுகள் என்பது, தற்போது தெரிய வந்துள்ளது.
'ஏழுமலையான், குபேரனிடம் பெற்ற கடன் தொகை எவ்வளவு?' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேவஸ்தானம் சரியான பதில் அளிக்கவில்லை.தற்போது, அது குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. திருமலை ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம், ராமர் உருவம் பொறித்த, 21 லட்சம் பொற்காசுகளை கடனாக பெற்றார். அதற்கு அடையாளமாக, ஒரு செப்பு பட்டயத்தில் கடன் பத்திரம் ஒன்று எழுதப்பட்டது.
'கடன் பெற்றதற்கு சாட்சி, திருமலை, திருக்குளக்கரையில் உள்ள வராகசாமி மற்றும் ஏழுமலையானின் தாயார் வகுளமாதா' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செப்பு கடன் பத்திரம், வராகசாமி கோவிலில் உள்ள, மூலவர் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்தது. வராக சாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, செப்பு கடன் பத்திரத்தை காட்டி, அது குறித்து விளக்கியும் வந்தனர்.சிறிது காலத்திற்கு பின், வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும், செப்பு கடன் பத்திரம் காட்டப்பட்டது. அவர்களில், 2008ல், தேவஸ்தான செயல் அதிகாரியாக பொறுப்பேற்றகிருஷ்ணராவும் ஒருவர். அவர் தற்போதைய ஆந்திர மாநில தலைமை செயலராக உள்ளார்.
'இத்தனை மகத்துவம் பெற்ற ஒரு பொருளை, இவ்வளவு அஜாக்கிரதையாக வைத்துள்ளீர்களே?' என, கிருஷ்ணாராவ் கண்டித்தார். மேலும், செப்பு கடன் பத்திரத்தின் எழுத்துகள் அழியாமல் இருக்க அதை, 'லேமினேட்' செய்து, தேவஸ்தான கருவூலத்தில் பத்திரப்படுத்த கூறினார்.
அவர் உத்தரவின்படி, அந்த செப்பு கடன் பத்திரம் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், அது குறித்து யாருக்கும் தெரியவில்லை. கடந்த, 2011ல், தேவஸ்தான செயல் அதிகாரியாக இருந்த எல்.வி.சுப்ரமணியத்திடம், குறைகேட்பு நாளில், இது குறித்து பக்தர்கள் புகார் அளித்தனர். ஆனால், அதற்கு அவர் தகுந்த பதில் அளிக்கவில்லை.அப்போது அவர் அளித்த விளக்கம் இது தான்: ஏழுமலையான், குபேரனிடம் கடன் பெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அது குறித்து அறிந்தவர் எவருமில்லை.புராணங்களில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களை, வளரும் தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவே, திருமலையில் ஒவ்வொரு உற்சவமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவிர, அது உண்மையாக நிகழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை. இது தான் அவர் அளித்த விளக்கம்.எனவே, கருவூலத்திற்கு சென்ற, முக்கியத்துவம் வாய்ந்த செப்பு கடன் பத்திரம் எங்கு உள்ளது என்பது, தேவஸ்தானத்திற்கே தெரியவில்லை. அதனால் தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டும் அவர்களால், சரியான பதிலை கூற முடியவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

2 comments:

  1. வெங்கடாசலபதிக் கடன் வாங்கினார் என்று தெரியும். எவ்வளவு இன்று உங்கள் பதிவின் வழியாக தெரிகிறது. நன்றி திருமலைவாசனைப் பற்றிய விவரங்களுக்கு.

    ReplyDelete
  2. கடன் தீரும்... ஆனா தீராது...

    ReplyDelete