badge

Followers

Saturday, 12 July 2014

மூன்றாம் பரிசைத் தந்த "தாயுமானவள்"

மீண்டும் ஒரு முறை திரு .வை.கோபாலகிருஷ்ணனின் சிறுகதை விமரிசனப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்றேன்...அந்தத் தாயுமானவளின் அருளால்...

போட்டிக்கான கதை இதோ....



திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச் சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீய்ச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.  



 



ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 



வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள அரசமரப் பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டும், இனிய சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் முதலியன தயாரிக்கப்பட்டும் ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள், கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! 


 



முனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி ஒரே மழலைகள்கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, புடலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம். 


முனியாண்டியின் உள்ளத்தில் ஓர் உவகை.    இன்று எப்படியும் மாரியம்மன் அருளால் முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி. கடந்த மூன்று வருடங்களாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப்போகிறது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.

காலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை முனியாண்டிக்கு. நாக்கு வரண்டு விட்டது.  நீர் மோரை ஒரு குவளையில் வாங்கி ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, பலூன்களை ஊதுவதும், ஊதியவற்றைக் கயிறு போட்டுக்கட்டுவதும், கேட்பவர்களுக்குக் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து வியாபாரம் செய்வதும், காசை வாங்கி ஜோல்னாப்பையில் போடுவதும் என அவனின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.



இத்தகையத்  தேர்திருவிழாக்களில், முனியாண்டியைச் சுற்றி எப்போதும் குழந்தைகளின் கூட்டம்.  ஆனாலும் தனக்கென இதுவரை ஒரு வாரிசு உருவாகவில்லையே என்ற ஏக்கம் உண்டு முனியாண்டிக்கு. திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஏழு ஆண்டுகள் உருண்டோடிப் போய் விட்டன.

மரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகளுக்குப்போய், சம்பாதித்து வரும் அன்பான அனுசரணையான மனைவி தான்.  முனியாண்டியும் மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகளே. கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்துண்டு, கடன் ஏதும் இல்லாமல் காலம் தள்ளிவரும் ஜோடிகளே. காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை.  


திடீரென்று அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும், தங்கள் காதைப்பொத்திக்கொண்டு, பலூன்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்.



போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். முனியாண்டியும் ரோட்டின் ஒரு ஓரத்திற்குத் தள்ளப்படுகிறான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட்பட்டென வெடித்துச் சிதறுகின்றன. 


தேரில் அம்மன் தெருமுனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக்கும்பிட முண்டியடித்து வருகின்றனர். 


அர்ச்சனை சாமான்களுடன் அலைமோதும் பக்தர்கள் முன்னுரிமை எடுத்துக்கொண்டு தேரின் நடுவே நெருங்க, கையில் அதை அப்படியே வாங்கி தேங்காயை மட்டும் தன் கை அரிவாளால் ஒரே போடு போட்டு குருக்கள் அவர்களிடம் எம்பியபடி அனுப்பி வைக்க ஒருசிலர் தேரில் தொங்கிக்கொண்டிருந்தனர். கட்டிக்கட்டியாக சூடம் அம்மனுக்குக் கொளுத்திய வண்ணமாக இருந்தனர். மிக முக்கியமான தெரு முனையானதால் தேர் நகரவே மிகவும் தாமதம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. 


வியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த மாரியம்மனுக்கே வெளிச்சம்.  


வியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த மாரியம்மனுக்கே வெளிச்சம்.  

”பலூன்காரரே! இந்தப்பாப்பாவைக்கொஞ்சம் பார்த்துக்கோ! பத்தே நிமிடத்தில் தேரிலுள்ள அம்மனைச்சற்று அருகில் சென்று கும்பிட்டுவிட்டு ஓடியாறேன்”  என்று மின்னல் வேகத்தில் சொல்லிச்சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப்பதியவில்லை முனியாண்டிக்கு.

குழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.

நல்ல அழுக்கேறிய ஒரு ஆடை [கெளன்] ; கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள்; காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள்; காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்”என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்”என்றது.


”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.

”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே! எப்படி இப்போ வருவாங்க? என்றது அந்தப்பெண்குழந்தை.


அதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.


”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.


”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.


”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.

”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்”என்றது அந்தப்பெண் குழந்தை.


சுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது. 


தேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.


சுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.


சூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.


“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.


முனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது? என்ற கவலையையும் அளித்தது.


அம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.


குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.




தன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி. 

ஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.


ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.


மதியம் மூன்று மணி. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி,  “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்”  நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.


உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.



 
மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.

அங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் தொன்னையில் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன. 


தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.  


குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.  அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். 






  

குழந்தையின் அருகே உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த்துண்டு ஒன்று தெரித்துத் தட்டி எழுப்பியது. அங்கிருந்த குழாய் நீரில் தன் முகத்தைக்கழுவிய முனியாண்டி, குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாராகிய மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாகச் சுற்றி வந்து, அப்போது தான் தேரில் நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கி விட்டு, தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.

தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கெளன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.



சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்துள்ளத் தன் கணவனை, தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ “அ..ய்..ய்..யா.....தோசை ! மம்மி .... மம்மி ....  ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா?”  எனச்சொல்லி வெட்கம் கலந்த ஆசையுடன், தன் பிஞ்சு விரல்களைக் குவித்தபடி தன் கையை நீட்டியது.    

குழந்தையை ஒருவித வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்திக்கொண்ட மரகதம், தோசையை அதற்கு ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச்சொல்ல கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.


ஆசையுடன் தோசை சாப்பிட்டு முடித்த குழந்தையை பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்தபின், மேற்கொண்டு இந்தக்குழந்தையை நாம் என்ன செய்வது என இருவரும் நெடுநேரம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்துப் பேசிக்கொண்டிருந்ததில், நள்ளிரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

காலையில் எழுந்த குழந்தைக்கு உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.

“காஃபி, டீ ... ஏதாவது வாங்கி வரட்டா? உனக்கு என்னடாக் கண்ணு வேணும்? ஏன் குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்.

குழந்தைத்தலைக்கு எண்ணெய் தடவி, படிய தலைவாரி, ரிப்பன் கட்டி, புதுச்சொக்கா போட்டு விட்டாள், மரகதம்.

திருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி,”செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, அந்த டாக்டரம்மா நம்மிடம் கேட்டிருந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்து விட்டது தாயீ!” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்?” என வினவினான்.



”இதோ பாருய்யா, மச்சான்! அந்த வாணப்பட்டரை மகமாயீ, மாரியாத்தாளே இந்தப்பச்சப்புள்ளைய, நமக்கே நமக்குத்தான் சொந்தம்னு இந்தத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இப்போ இன்னொரு குழந்தை எதுக்குய்யா வேணும்?; 

இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.

திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை ஆசையுடன் அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.  


  

  



இந்தக்கதைக்கு 

நான் எழுதிய விமரிசனம்....




முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள




திருமதி  



 உஷா ஸ்ரீகுமார்  



அவர்களின் விமர்சனம் இதோ:

 



ஒருவர் எழுத்தாளராக வேண்டுமென்றால் அவருடைய முதல் தேவை எது ஒன்றையும் கூர்ந்து நோக்கும் திறன் ...

அடுத்தது- பார்த்ததை அப்படியே எழுத்தில் கொண்டு வரும் திறமை...

மேலும்...


பார்த்ததை அப்படியே "ரிப்போர்ட்" போல சுவாரஸ்யமின்றி எழுதாமல் சிறிது கற்பனை, வார்த்தை நகாசு மற்றும் உணர்ச்சிகளைத் தொடும் சொல்  விளையாட்டுக்கலையில் அனாயாச திறமை....


இந்த மூன்று திறமைகளும் சரிவிகிதத்தில் கனக்கச்சிதமாக அமைந்துள்ள திரு வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களின் எழுத்துத் திறமைக்கு  "தாயுமானவள்" சிறுகதையே சாட்சி... இக்கதை ஒரு பிரபல பத்திரிகையில் பரிசு பெற்ற கதை என்பதில் அதிசயமே இல்லை...



வார்த்தைகளாலேயே  நம் கண் முன் திரு. வை. கோபாலகிருஷ்ணன் வாணப்பட்டரை  மாரியம்மன் தேர்த்திருவிழாவை சித்திரமாகத் தீட்டிவிட்டார்... நம்மை அந்த சூழலுக்குள் (atmosphere) முதல் 10 வரிகளிலேயே அழைத்துச்சென்றுவிட்டார்.... இதுவே அவர் கூர்ந்துநோக்கும் திறனுக்கும், பார்த்ததை - சொல் சித்திரமாக வடிக்கும் திறனுக்கும் சான்று!



நம்மை அந்தச் சூழலுக்குள் மேலும் அமிழ்த்த அருமையாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, கதைக்கு அழகாகப் பொருந்தக்கூடிய படங்கள் எழுத்தோவியத்துடன் போட்டி போடுகின்றன... நம் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றன...


கதை மாந்தர் ஒவ்வொருவருக்கும் ... நம்மைப் போலவே ஆளுக்கு ஒரு பிரச்சனை... தேவை...


குழந்தை பாக்கியம் வேண்டி அந்த அம்மனிடம் முறையிடும் கதாநாயகன் தனக்கு குழந்தைப்பேறு அளிக்க மருத்துவர் கேட்ட அந்த சிறிய (அவருக்குப்  பெரிய) தொகைக்காக  வேண்டி நிற்க ....



பெற்றோரை அந்தப் பேரலைக்கு விருந்தாகக் கொடுத்த அந்த சின்னஞ்சிறுமி, என்ன வேண்டுவது என்பதையே அறியாத வயசில் அனாதையாய் நிற்க...



பெற்றோரை இழந்த அச்சிறுமியை ஒரு பிள்ளைக்காக ஏங்கும் பெற்றோருடன் இணைக்கும் அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் லீலையே இந்த மனதை நெகிழ வைக்கும் கதை...


 

இந்த நல்ல ஜோடிக்கு ஒரு அன்பான, அழகான குழந்தையை தருவதற்காகவே அவள் இச்சிறுமியை இந்தத் திருவிழாவுக்கு வரவழைத்தாளோ ? இது எந்த ஜன்ம பந்தம் என்பதை அந்த வேப்பிலைக்காரி  மட்டுமே அறிவாளோ?



வசதியான சூழலில் வளர்ந்த அந்தக்குழந்தைக்கு இந்த பலூன் வியாபாரியும் அவன் மனைவியும் பொருத்தமான பெற்றோர்களாக இருப்பார்களா, என்று சிலர் நினைக்கலாம்... ஆனால் அந்த பலூன் காரரும் அவர் மனைவியும் பணத்தால் எழைகளானாலும் குணத்தால் கோடீஸ்வரர்கள் என்பதை அந்த ஓங்காரி அறிந்து தான் இந்த பந்தத்தை ஏற்படுத்தினாளோ? 


பல லட்சங்கள் செலவழித்து செயற்கையாகக் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க fertility clinic களில் தவமிருக்கும் பல தம்பதிகளுக்கு அந்த லோக மாதா இந்தக் கதை மூலம் சொல்ல விரும்புவது என்ன ....


"ஒரே ஒரு  குழந்தைக்காக தவமாய் தவமிருக்கிறீர்களே .... உங்களைப்போன்ற ஒரு நல்ல பெற்றோருக்காக  எத்தனை குழந்தைகள் தவமாய் தவமிருக்கிறார்கள் தெரியுமா? 



காத்திருக்காமல் உடனே அம்மா, அப்பா ஆகுங்கள் ... அவர்களில் ஒரு குழந்தைக்கு உங்கள் இதயத்திலும், இல்லத்திலும் இடம் தாருங்கள்... இந்த உலகத்தில் அனாதை என்று யாருமில்லை என்ற நிலை உருவாக்குங்கள்....” என்று நம்மிடம் சொல்லாமல் சொல்ல திருத்தேரில் அலங்கார பவனி வந்தாளோ ?



இந்தக் கருத்தை சொல்லும் ஒரு கருவியாக கதாசிரியரை பயன் படுத்தினாளோ ?



அந்தத் "தாயுமானவளே" அறிவாள்!







15 comments:

  1. Respected Madam,

    வணக்கம். கதைப்பகுதியில் சிரிக்கும் குழந்தைப்படம் அதன் கீழ் 3 பலூன்கள் அத்தோடு கதை முடிகிறது. OK. அதன் பிறகு [அழும் குழந்தையுடன்] சில வரிகள் Repeat ஆகி வெளியிட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். அவற்றை நீக்கி விடலாமே !

    மீண்டும் வருவேன். அன்புடன் VGK

    ReplyDelete
  2. போட்டியில் பரிசினை வென்ற தங்களுக்கு, உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் அடியேன் சார்பிலும், என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இதனை இங்கு தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கும் என் நன்றிகள்.

    இதே போட்டியில் தங்களுக்கு மேலும் மேலும் பல வெற்றிகள் கிட்ட பிராப்தமும் சூழ்நிலைகளும் சாதகமாக அமையட்டும்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. .நன்றி.தங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,சார்

      Delete
  3. //இந்த மூன்று திறமைகளும் சரிவிகிதத்தில் கனக்கச்சிதமாக அமைந்துள்ள திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் எழுத்துத் திறமைக்கு "தாயுமானவள்" சிறுகதையே சாட்சி... இக்கதை ஒரு பிரபல பத்திரிகையில் பரிசு பெற்ற கதை என்பதில் அதிசயமே இல்லை...

    வார்த்தைகளாலேயே நம் கண் முன் திரு. வை. கோபாலகிருஷ்ணன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவிழாவை சித்திரமாகத் தீட்டிவிட்டார்... நம்மை அந்த சூழலுக்குள் (atmosphere) முதல் 10 வரிகளிலேயே அழைத்துச்சென்றுவிட்டார்.... இதுவே அவர் கூர்ந்துநோக்கும் திறனுக்கும், பார்த்ததை - சொல் சித்திரமாக வடிக்கும் திறனுக்கும் சான்று!//

    தன்யனானேன். ;))))) மிக்க நன்றி மேடம்.

    >>>>>

    ReplyDelete
  4. //கதை மாந்தர் ஒவ்வொருவருக்கும் ... நம்மைப் போலவே ஆளுக்கு ஒரு பிரச்சனை... தேவை...//

    வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  5. //இந்தக் கருத்தை சொல்லும் ஒரு கருவியாக கதாசிரியரை பயன் படுத்தினாளோ ?
    அந்தத் "தாயுமானவளே" அறிவாள்!//

    அருமையானதொரு கேள்வி பதிலுடன் கூடிய முடிவுரை.

    சொல்ல வந்ததை சுருக்கமாகவும் சுவையாகவும் பொட்டில் அடித்ததுபோல ’நச்’சென்று ஆங்காங்கே விமர்சித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    மிக்க நன்றி, மேடம்.

    என்றும் அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  6. விமர்சனப்போட்டியில் பசுபெற்றதற்கு இனிய வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,ராஜராஜேஸ்வரி

      Delete
  7. பலூன் காரரும் அவர் மனைவியும் பணத்தால் எழைகளானாலும் குணத்தால் கோடீஸ்வரர்கள் என்பதை அந்த ஓங்காரி அறிந்து தான் இந்த பந்தத்தை ஏற்படுத்தினாளோ? //
    ஆம், அருமை.
    பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    விமர்சனம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,கோமதி அரசு மேடம்

      Delete