காய்கறி உணவில் கீரையை விட சத்தும், மருத்துவ குணமும் உள்ள காய்கறிகள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு கீரையிலும் உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் உள்ளன. சில வகை கீரைகளில், நோய்களை தீர்க்கும் அபூர்வமான மருத்துவ குணங்கள் உள்ளன.
குறிப்பாக, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, முருங்கை, அகத்தி போன்ற கீரை வகைகள் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ள கீரையாகும். இந்த வரிசையில் பசலைக்கீரையும், மிக முக்கியமான கீரையாக விளங்குகிறது.
குறிப்பாக, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, முருங்கை, அகத்தி போன்ற கீரை வகைகள் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ள கீரையாகும். இந்த வரிசையில் பசலைக்கீரையும், மிக முக்கியமான கீரையாக விளங்குகிறது.
பசலை ஒரு கொடிவகை தாவரம்.
இந்த கீரையை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கலாம். ஆறு அங்குல நீளமுள்ள இதன் கொடித்தண்டை நறுக்கி, வேலி ஓரத்தில் அல்லது மரங்களின் அருகில் நட்டு வைத்தால், விரைவில் துளிர்விட்டு கொடியாக வளரும். பந்தலிலும் படர விட்டு வளர்க்கலாம்.
கொடிப்பசலைக் கீரையின் இலைகளை, நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக அரிந்து சமைத்து சாப்பிடலாம். இலைகளை அவித்து, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து கடைந்து, சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இதில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரைபோபிளாவின், நியாசின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இக்கீரை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
கோடை காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள், இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், வெப்ப நோய்கள் வராது. இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. நன்கு பசி உண்டாகும். இக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த விருத்தி ஏற்படும்.
இதன் இலைகளை அவித்து, பூண்டு, சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால், குடல் நோய் கோளாறுகள் சீராகும். கொஞ்சம் பசலை இலையோடு, மாதுளம் பிஞ்சை வைத்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம், மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால், சீதபேதி குணமாகும்.
இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அரைத்து, வேக வைத்துச் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மாறும்; குரல் வளம் பெறும். இக்கீரையில் "வைட்டமின் சி' சத்து உள்ளதால் கண்பார்வை அதிகரிக்கும்.
இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் காமம் அதிகரிக்கும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள சாதாரண மலட்டுத் தன்மையை நீக்கும். சளித் தொல்லை உள்ளவர்கள் இக்கீரையை தவிர்க்கவும். இக்கீரையின் மகத்துவம் தெரியாததால், பலர் இக்கீரை வாங்கி சமைப்பதில்லை. அதனால் கீரை வியாபாரிகள் பசலைக்கீரையை வாங்கி விற்பதில்லை. காய்கறி மார்கெட்டில் கூட, இக்கீரை அரிதாகவே கிடைக்கிறது.