badge

Followers

Tuesday, 20 March 2018

இப்படித்தான் யானையை பழக்குகிறார்கள்...



இப்படித்தான் யானையை பழக்குகிறார்கள்...



'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.

ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம்  விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து  எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந் தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசிய தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா. அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.

கட்ட கடைசியா... என்னைக்கு அந்த யானை,  பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங் கால்கள மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்துல 13 பேரை கொன்று, கேரள அரசால் சூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார நியாபக சக்தி கொண்ட யானை,  தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனதான் தேடும். சிக்குனான்... அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.

சின்ன கொசுறு தகவல்:

யானைல ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.

அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானை களையும், இடுங்கிய கண்களை கொண்ட யானை களையும், நெற்றி துருத்திய யானை களையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லை னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும். (இந்த படத்தில் உள்ள வகை)

ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட் கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும் குணமும் உடையது. மனுஷன பார்த்துட்டா, அனல் போல கொதிநிலைக்கு போயிடும். பயங்கர ராட்ஷசன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம்  வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள்.

ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும்,  மனிதர்களுடன் முக்கியமாக குழந்தை களுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.





நன்றி -இணையம்

6 comments:

  1. யானைகளை பழகுகிறேன் என்று கொடுமைப் படுத்துகிறார்கள். படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. யானைகளின் வகைகளை பற்றிச் சொல்லி இருப்பது புதிய தகவல். மிரட்டுகிறது. யானையை எனக்குப் பிடிக்கும். கொடூரக் கவர்ச்சி என்பது இதுதான் போல! என் தளத்தில் இந்தக் கட்டுரைக்கு எங்கள் நாளைய பதிவில் இணைப்பு கொடுக்கிறேன்!

    ReplyDelete
  2. பிரமிப்பான தகவல்கள் சகோ பகிர்வுக்கு நன்றி - கில்லர்ஜி

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    ReplyDelete
  4. யானையைப் பழக்கும் முறையினைப் பற்றி நுணுக்கமாக அறிந்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  5. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete