badge

Followers

Monday, 26 May 2014

இம்முறை இரண்டாம் பரிசு!







தமிழ் பதிவுலகத்தையே  தன்  வசம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் திரு வை.கோபாலகிருஷ்ணனின்  வலைத்தளமான http://gopu1949.blogspot.in இல்
நடக்கும் சிறுகதை விமரிசனப் போட்டியில் இம்முறை இரண்டாம் பரிசு பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுடன் பகிர்ந்துகொள்ள்கிறேன் !

கதை இதோ...





சூ ழ் நி லை



[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

காலை 10 மணி. பிஸினஸ் விஷயமாக சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது.

”குட்மார்னிங்... ஜெயா... சொல்லு”  என்றார் டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம்.

ஜெயாவுக்கு குரல் தடுமாறியது. அவள் அழுது கொண்டே பேசுவது இவருக்குப் புரிந்தது.


“அப்பா... தாத்தா சென்னையில் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டாராம். இப்போது தான் போன் வந்தது. அவரின் உடல் ‘ஜி.ஹெச்’ இல் உள்ளதாம்................



அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங் ஃப்ளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?” என்றாள்.

இதைக்கேட்ட மஹாலிங்கம் சற்று பலமாகச் சிரித்துக் கொண்டே,“அப்படியாம்மா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. நான் அவசியம் போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்” என்றார், சற்றும் தன் முகபாவணையில் வருத்தமோ அதிர்ச்சியோ ஏதும் இல்லாமல் ....... படு குஷியாக.



தன் அப்பாவின் இத்தகைய பேச்சு ஜெயாவுக்கு அதிர்ச்சியை அளித்தது. தன் தாயாரிடம் இந்த டெலிபோன் உரையாடலைப் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.

இதைக் கேள்விப்பட்ட மஹாலிங்கத்தின் மனைவி ஈஸ்வரிக்கு தன் கணவன் மீது கோபம் கோபமாக வந்தது.

“கோடீஸ்வரரான இவருக்கு எப்போதுமே எங்க பிறந்த வீட்டு மனுஷ்யாளைக் கண்டாலே ஒரு வித இளக்காரம் தான். மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு ...... இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன்” என்று தன் மகளிடம் கூறிவிட்டு, விமான டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடுகளைக் கவனிக்கலானாள்.

மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட மஹாலிங்கம், தன் தந்தை இறந்த துக்கத்தில் மூழ்கியிருக்கும் ஈஸ்வரியுடன் அதிகமாக மனம் விட்டு பேச முடியாமல் போனது. 

அகால மரணம் ஒன்று எதிர்பாராமல் நடந்து விட்ட அந்த வீடு இருக்கும் சூழ்நிலையிலும், பெரியவரின் மறைவால் அந்த வீட்டில் குழுமியிருக்கும் மனிதர்களின் துக்கமான மன நிலையிலும், எப்படி அவர்கள் மனம் விட்டு பேச முடியும் ?

ஈஸ்வரி ஒரு மூன்று வாரங்களாவது இங்கேயே (பிறந்த வீட்டிலேயே) இருந்து விட்டு, பிறகு டெல்லிக்கு புறப்பட்டு வரட்டும் என்று தன் மாமியாருக்கும் மனைவிக்கும் பொதுவாக காதில் விழுமாறு சொல்லி விட்டு, தான் மட்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 

பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால் அவரால் எந்த வீட்டிலும், எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாது. 

துக்க வீட்டுக்கு வந்து விட்டு ’போய் விட்டு வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. அதனால் டக்கென்று மஹாலிங்கம் புறப்பட்டு விட்டார். 

அவர் எப்போதுமே இப்படித்தான் என்று தெரிந்த ஈஸ்வரியும், அவர் மேல் இப்போது உள்ள கோபத்தில், அவருடன் முகம் கொடுத்தே பேசவில்லை.

இதற்கிடையில் தன் கணவனை இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி பெருமையாகப் பேசி பூரித்துப் போகும் தன் தாயிடமே கோபமாக வந்தது, ஈஸ்வரிக்கு.

அடுத்த ஒரு மாதமும் கோபத்தில், தன் கணவனுடன் தொலைபேசியில் கூட பேசுவதைத் தவிர்த்து விட்டாள் ஈஸ்வரி ...... அவ்வளவு கோபம் அவர் மீது.

ஒரு மாதம் கழித்து ஒரு வழியாக டெல்லிக்குத் திரும்பினாள் ஈஸ்வரி.

“வா, ஈஸ்வரி” என்று அன்புடன் தான் வரவேற்றார், தற்செயலாக அன்று வீட்டில் இருந்த மஹாலிங்கம். 

அன்புத் தந்தையை இழந்த துக்கத்துடன் திரும்பி வந்துள்ள தன் அம்மாவை ஓடிச்சென்று ஜெயாவும்,  ஆறுதலாக பற்றிக்கொண்டாள்.

தன் வயது வந்த மகள் பக்கத்தில் இருக்கிறாளே என்றும் பாராமல் ஈஸ்வரி கோபமாக தன் கணவனிடம் வாய் சண்டையிட தயாராகி விட்டாள்.

“எங்கப்பா சாலை விபத்திலே செத்துப்போனது உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸந்தோஷமா? இது போல நீங்க ஜெயாவிடம் சொன்னது கொஞ்சமாவது நியாயமா? உங்களிடம் எவ்வளவு தான் பணமிருந்தாலும், எங்க அப்பாவை அந்தப் பணத்தால் திரும்ப வரவழைக்க முடியுமா? ” என சுடும் எண்ணெயில் போட்ட அப்பளமாகப் பொரிந்து தள்ளினாள், ஈஸ்வரி.

“வெரி... வெரி... ஸாரி ஈஸ்வரி, இது தான் உன் கோபத்திற்குக் காரணமா? .........

சென்னைக்குப் போன இடத்தில் என் நண்பர் ஒருவர் மூலம், நம்ம ஜெயாவுக்கு எல்லா விதத்திலும் நல்ல ஒரு பொருத்தமான மாப்பிள்ளை பையன் பார்த்து, ஜாதகமும் பொருந்தி, மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிக்கும் நேரம், நம் ஜெயாவிடமிருந்து, இந்த துக்கமான தகவல் வந்தது ...... 

நான் அங்கிருந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பிள்ளை வீட்டார் ஏதாவது அபசகுனமாக நினைக்காமல் இருக்கவும் தான், அவ்வாறு சொல்லும் படியும், சமாளிக்கும் படியும் ஆகி விட்டது .......

என்னிடம் உள்ள பணத்தாலும், செல்வாக்காலும் அவரின் உயிரைத் திரும்ப கொண்டு வர முடியாவிட்டாலும், அவருடைய உடலையாவது வெகு சீக்கரமாக ”ஜி.ஹெச்” லிருந்து வீட்டுக்குக் கொண்டு வர முடிந்தது .......

மேற்கொண்டு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளின் எல்லாச் செலவுகளுமே என்னுடையதாக இருக்கட்டும் என்று சொல்லி, உன் அம்மாவிடம் நிறைய பணமும் கொடுத்து வர முடிந்தது ......

இந்தப் பணம் கொடுத்த விஷயம் மட்டும் உன்னிடமோ, வேறு யாரிடமுமோ சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன் .......

எனக்கும் என் மாமனாரின் இந்த எதிர்பாராத விபத்திலும் மரணத்திலும் மிகவும் வருத்தம் தான். அவரின் விதி அது போல உள்ளபோது நம்மால் என்ன செய்ய முடியும்? ......

அமரரான உன் அப்பா ஆசீர்வாதத்தால் தான், இந்த ஒரு நல்ல இடம் கை கூடி வந்து, நம் ஜெயாவின் கல்யாணம் நல்லபடியாக ஜாம் ஜாம்ன்னு சீக்கிரம் முடியணும்!” என்று சொல்லி, தன் மனைவியின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார் மஹாலிங்கம்.

தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு, அவர் தக்க நேரத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி.

அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.


தாத்தாவின் திடீர் மரணம், ஒரு விதத்தில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள், மணப்பெண் ஜெயா.

  

oooooOooooo







கதைக்கான என் இரண்டாவது பரிசு பெற்ற விமரிசனம் இதோ...


இனிப்பான இரண்டாம் பரிசினை 


 வென்றுள்ளவர்கள்



மொத்தம் இருவர்.


அதில் ஒருவர் 







திருமதி


 உஷா ஸ்ரீகுமார்  


அவர்கள்



usha-srikumar.blogspot.in

'உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்’


 


இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திருமதி.


 உஷா ஸ்ரீகுமார்  




அவர்களின் விமர்சனம் இதோ:






சூழ்நிலைக்கு தக்கவாறு வளைந்து நெளிந்து வாழ்கையை கொண்டு செலுத்தும் புத்திசாலி மனிதனே வெற்றி பெறுவான்  என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே...

"சூழ்நிலை" நாயகன் மகாலிங்கமோ  இந்தக்கலையை கரைத்துக் குடித்தவர்...

அதனால் தான் ஒரு  வெற்றிகரமான  பிசினஸ்மேனாக கோலோச்ச முடிகிறதோ?

எந்த சூழ்நிலையிலும் பதட்டத்தை , கவலையை...ஏன் ? மனதில் ஓடும் எண்ணங்களையும்  உணர்சசிகளையும்  சமுதாயம் முன் மறைக்கும் கலையில் வல்லவர்...

ஒரு மிகச் சிறந்த ராஜதந்திரிக்கு, நிர்வாகிக்கு தேவையான குணங்களை பெற்றவர்...

தொலை பேசியில் வந்த மாமனாரின்  துர்மரணத்தை பற்றிய 
செய்தியை கூட சுப செய்தி போல வெளிக்காட்டும் அளவுக்கு 
கைதேர்ந்த உணர் ச் சிகளின் கட்டுப்பாட்டாளர் (controller of emotions  )

ஆனாலும்...

எந்த பிரச்சனையும் மனம் விட்டு பேசி தீர்க்கலாம்  என்ற அடிப்படையான விஷயத்தை ஏனோ உதாசீனப்படுத்துபவராக தோன்றுகிறார்...

மனதை விட மூளையால் மட்டுமே எதையும் எதிர்கொள்ளுபவராக கதாசிரியரால் சித்தரிக்கப்படுகிறார் .

விபத்தில் தந்தையை இழந்த மனைவியை சமாதானப்படுத்துவது ஒரு கணவனின் தலையாய கடமைகளில் ஒன்று இல்லையா?

கோடீஸ்வரரான கணவர் தன் பிறந்த வீட்டைமதிப்பதில்லை என்ற எண்ணத்தை ஒரு கணவன் மனைவியின் மனதில் ஒரு சம்பவத்தால் ஏற்படுத்திவிட முடியாது... அவரின் நீண்ட கால நடத்தையில் இந்த  குணம் அடிக்கடி தலை காட்டுவதாலேயே தான்  ஈஸ்வரிக்கு,கணவர்  மாமனார் மறைவு செய்திக்கு காட்டிய reaction கோபத்தை ஏற்படுத்துகிறது...

சாவு வீட்டிலும் சூழ்நிலையை காரணமாக காட்டி மனைவியிடம் தனியே பேசியோ வேறு ஏதாவது வழியிலோ அவள் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் போக்க மகாலிங்கம் முயலாதது அவரை ஒரு ஆணாதிக்க பிரதிநிதியாகவே சித்தரிக்கிறது... மனைவி ஒரு மாதம் வரை சரியாக போனில் பேசாதது கூட அவரை பாதிக்கவில்லையோ? இல்லை பிசினெஸ்   மற்றும் பல லௌகீக விஷயங்களில் அதை பற்றி அக்கறை கொள்ளவில்லையோ அல்லது "என்ன பெரிசாக அவள் செய்து விடுவாள்... இன்னும் 10 நாட்கள் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டிருப்பா அவ்வளவு தானே,,," ...என்ற எண்ணமா ? 

புரியவில்லை...

கதையை  படிக்கும் போது - இக்கதை  லேன்ட் லைன் காலத்தில் நடந்தது ... அப்போது  கை பேசி வராத காலம் என்று புரிகிறது...

இருந்தாலும்...

இவ்வளவு பெரிய நிர்வாகி, ஏதோ ஒரு உபாயம் செய்து   மனைவி உடன் ஒரு சில நிமிடங்கள் மனம் விட்டுப்பேசியிருந்தால்  இந்த மன ஆதங்கம் ஈஸ்வரிக்கு  இருந்திருக்காது...

தன் செல்வாக்கை உபயோகித்து மாமனாரின் உடலை உடனே வீட்டுக்கு கொண்டு வருவதிலும் , காரியத்துக்கு அடுத்தவருக்கு தெரியாமல் பண உதவி செய்வதிலும் அவர்   காட்டிய அக்கறையில் 5 சதவிகிதம்  காட்டி "ஈஸ்வரி, அப்போ சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ம்மா ... அதனால் தான் மகளிடம் அப்படி பேசினேன்... ஊருக்கு வந்த பின் விளக்கமா சொல்லறேன்..." என்று  ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் / அல்லது 
ஒரு துண்டு சீட்டில் எழுதி அனுப்பி இருந்தால் எந்த மன வருத்தமும் 
வந்து இருக்காதே...

அப்பா, மருமகன், தொழிலதிபர் ஆகிய role களை செய்வதில் காட்டும் அக்கறையை அவர் கணவர் role லில் காட்ட முயலாதது ஏனோ ?

சம்பந்தத்தை சாதுரியமாக பேசி முடித்த அவர் ஏன் மனைவி / மகள் ஆகியோருக்கு  இப்படி ஒரு துர்மரண  செய்தி வரும் நேரத்தில் வந்த சம்பந்தம் அபசகுனமாகப் படுமே என்று ஏன் யோசிக்கவில்லை? தன் முடிவுக்கு வீட்டில் மாற்று கருத்து கிடையாது என்பதாலா ?

சிறிய கதை...சம்பவங்களின் கோர்வைகள் விறு விறுப்புகுறையாமல் ஆசிரியர் நகர்த்திசென்று இருக்கிறார்...

கதாநாயகனை ஒரு முழுமையான நாயகனாக இன்றைய மகளிரின் பார்வையில் ஏற்றுக்கொள்ளவது கடினம்... ஆனால்,  இன்றும்  பல இல்லங்களில் மகாலிங்கங்களையும் ஈஸ்வரிகளையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்...

"என் மனநிலையில் நீங்கள் இருந்தால-  நான் சூழ்நிலை கருதி இப்படி பேசிவிட்டு உங்களுக்கு பல நாட்கள் விளக்கம் தராவி ட்டால் உங்கள் மனம் எப்படி பாடு படும்?" என்று கேட்கதெரியாத  / கேட்க தோன்றாத  /கேட்க முடியாத ஈஸ்வரிகளை நினைக்கும் போது மனம் ஏனோ கனக்கிறது...




 



4 comments:

  1. மாறுபட்ட முறையில் தாங்கள் தங்கள் விமர்சனத்தில் சொல்லியிருந்த கருத்துக்களை மிகவும் ரஸித்துப் படித்து மகிழ்ந்தேன்.

    உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் தாங்கள் பரிசு பெற்றதற்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தனிப்பதிவாக இதனை இங்கு தங்கள் தளத்தில் வெளியிட்டுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    மேலும் இதே போட்டிகளில், அவ்வப்போது தங்களுக்கு செளகர்யப்படும் போதெல்லாம் கலந்துகொண்டு, மேலும் பல பரிசுகள் பெற வேண்டும் என்பது என் விருப்பம்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மேன்மையான கருத்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி,V G K சார்

      Delete
  2. iஇனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி,ராஜராஜேஸ்வரி

      Delete