badge

Followers

Saturday 22 November 2014

இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார்...





முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
உரையாடலின் நடுவே நினைவுகூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார்.
‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர்.
‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார்.
‘நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.
‘விடமாட்டேன்னுதீகளே...’ என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் ‘ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...’ என்று நிறுத்தச் சொல்கிறார்.
அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.
காமராசர் களைபறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் ‘ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...’ என்று கூவியிருக்கிறார்.
புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் ‘ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...’ என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.
நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !
அவர்தான் நம் அய்யா காமராசர்!

2 comments:

  1. 66 கோடியாம், 176 லட்சம் கோடியாம் !
    நம்பமுடியலையே! இப்படியுமா?

    ReplyDelete
  2. அது அந்த காலம். யோகன் பாரீஸ் அய்யா மேலே சொல்லி உள்ளாரே அதுதானே இந்த காலம் ஆகிவிட்டது.

    ReplyDelete