badge

பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 7 மார்ச், 2014

சவுக்கு மரங்கள் அழுவதில்லை...

நம்மை இன்று வரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் நகைச்சுவை மகா நடிகர் அமரர் நாகேஷின் பேட்டியை படித்தேன்...

எத்தனை ஆழமான உண்மை...

யோசித்து பார்த்தால்  நாம் எத்தனை முறைகள் சவுக்கு மரமாகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறோம்...

வீட்டில்...

வேலை பார்க்கும் இடத்தில...

என்று பலமுறை இதை அனுபவித்திருப்போம்...

அப்போது நினைத்துக்கொள்வோம்...நாகேஷின்  இந்த ஆழமான சவுக்கு மரக் கதையை...

நாமும் தயாராவோம் அடுத்த பணிக்கு...

ஒரு வானொலி பேட்டியில் நாகேஷ்:

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

7 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நிஜம் தான்...உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி...

   நீக்கு
 2. எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பு நடிகர் நாகேஷ் இதை மிக அருமையான தோர் உதாரணத்துடன் விளக்கிச் சொல்லியுள்ளார்.

  சிந்திக்க வைக்கும் சிறப்பானதோர் நிகழ்வு.

  தாங்கள் இன்று இங்கு இதை பகிர்ந்துகொண்டது அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி,சார்

   நீக்கு
 3. என்னதான் இந்த மாதிரி சமாதான கதைகள் சொல்லப்பட்டாலும் உழைப்பின் பலனை இழப்பது என்பது பெற்ற குழந்தையை இழப்பது போலத்தான். திறமைசாலிகள் செய்கிறார்கள், சாமர்த்தியசாலிகள் பலனை அனுபவிக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம் தான்,தானைத்தலைவி .ஆனால் இது போல தவிர்க்க முடியாத நிகழ்வுகள் அனைவர் வாழ்விலும் நடக்கிறது...

   இது போன்ற சமயங்களில் நாமும் சவுக்கை நினைத்து நம்மை தேற்றிக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர வேண்டியது அவசியமாகிறது.

   சிலர் நமக்கு இனிய நினைவுகள் தருகிறார்கள்...சிலர் பாடங்கள் கற்றுத் தருகிறார்கள்...

   நீக்கு
 4. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

  http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_11.html

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  பதிலளிநீக்கு