நேரமும் ,அவகாசமும் கிடைக்கும் போதெல்லாம் நான் ஆவலுடன் கலந்துகொள்ளும் இப்போட்டியில் ஒரு சில முறை பரிசுகள் வென்று இருந்தாலும் இம்முறை "வடிகால்" சிறுகதைக்கு பலபல நெருக்கடிகளுக்கு இடையே நான் அவசரத்தில் எழுதிய விமரிசனம் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது மகிழ்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அருமையான இக்கதைக்கு விமரிசனம் எழுத வாய்ப்பு அளித்த திரு v .g .k . அவர்களுக்கும் ,என் விமரிசனம் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
போட்டிக்கான கதை இதோ....
வ டி கா ல்
[சிறுகதைத்தொடர்]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
அன்றும் அப்படித்தான். இரவு 11 மணிக்கு மேல் இருக்கும். நான் என் கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தேன். கதவின் வெளிப்புறம் யாரோ நிற்பதுபோல மூடியிருந்த ஜன்னல் கண்ணாடிகளில் நிழல் தெரிந்தது. பிறகு அழைப்பு மணியும் ஒலித்தது. கதவைத்திறந்தேன்.
அதே மனிதர். நல்ல உயரம். சிவந்த நிறம். வயது ஒரு 80க்கு மேல் இருக்கலாம். முகத்தில் பல்வேறு அனுபவச்சுருக்கங்கள். வெள்ளை வேட்டி, வெள்ளையில் முழுக்கை கதர் சட்டை. கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
அதே மனிதர். நல்ல உயரம். சிவந்த நிறம். வயது ஒரு 80க்கு மேல் இருக்கலாம். முகத்தில் பல்வேறு அனுபவச்சுருக்கங்கள். வெள்ளை வேட்டி, வெள்ளையில் முழுக்கை கதர் சட்டை. கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
“வாங்கோ சார்” அமர இருக்கை அளித்தேன். குடிக்க ஃப்ளாஸ்கிலிருந்து மிதமான சூட்டில் சுடுதண்ணீர் அளித்தேன். நன்றியுடன் கூடிய ஒருவித அசட்டுச்சிரிப்புடன் வாங்கிக் குடித்தார்.
“கம்ப்யூட்டரில் பிஸியாக ஏதோ வேலை பார்க்கிறீர்கள் போலிருக்கு; தொந்தரவு செய்கிறேனா?” என்றார்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை; சொல்லுங்கோ சார்” என்றேன்.
“உங்கள் சிறுகதைத்தொகுப்பு நூல்களைப்படித்தேன். நன்றாக இருந்தன. அதுதான் நேரில் பார்த்து சொல்லிவிட்டுப்போகலாம் என்று வந்தேன்”என்றார்.
“நான் எழுதிய கதைகளையா? எங்கு படித்தீர்கள்?”
“சிறுகதைத் தொகுப்புகளாக நீங்கள் வெளியிட்ட இரண்டு புத்தகங்கள் என் மாப்பிள்ளையிடம் கொடுத்திருந்தீர்களே!” என்றார்.
இவர் யார் என்றோ, இவர் மாப்பிள்ளை யார் என்றோ எனக்கு ஒன்றுமே புரியவில்லை. புரியாதபடி அவரை ஒரு மாதிரியாகப்பார்த்தேன்.
“கனரா பேங்க் கணபதியோட மாமனார் சார், நான்; சிண்டிகேட் பேங்க் சிங்காரி என்னோட பொண்ணு தான்” என்றார்.
அந்தக்கனரா பேங்க் கணபதியும், சிண்டிகேட் பேங்க் சிங்காரியும் யாராக இருக்கும்? என்று தொடர்ந்து குழம்பினேன் நான்.
என்னைப் பரிதாபமாகப் பார்த்த அவர் ”3C - மூன்றாவது மாடி, மூன்றாவது வீடு” என்றார்.
“ஓஹோ, அப்படியா, ரொம்ப சந்தோஷம்” என்றேன் நான் ஏதோ மிகவும் தெரிந்தது போல.
எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பில் மொத்தம் 4 மாடிகள். ஒவ்வொரு தளத்துக்கு 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள். எனக்கு என் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன், மனைவி, 2 குழந்தைகள் என, நான்கு பேர்களின் முகங்கள் என் மனதிற்குப்பதியவே நான்கு வருடங்கள் ஆனது.
இன்றும் அவர்களில் யாருடைய பெயர்களும் எனக்குத்தெரியாது.
ஒருமுறை அந்தப்பக்கத்து வீட்டுக்கு வந்த தபால் தவறுதலாக எங்கள் வீட்டில் போடப்பட்டிருந்தது. அதில் வெங்கடேசனோ, வெங்கடராமனோ, வெங்கடரமணியோ, வெங்கடசுப்ரமனியனோ, வெங்கட்ராகவனோ ஏதோ ஒன்று போட்டிருந்ததாக ஞாபகம்.
எங்களுடைய சொந்தக்காரர்களின் பெயர்களே எனக்கு அடிக்கடி குழம்பிப்போகும். என்னுடைய மனைவியை அவள் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பலவித செல்லப்பெயர்களில் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக அழைக்கின்றனர்.
ஸ்கூல் சர்டிபிகேட்டில் முற்றிலும் வேறு ஒரு பெயர் அவளுக்கு. அக்கம்பக்கத்தவர் அழைப்பது “ராமு அம்மா” என்ற பெயரில். என் வீட்டுப்பால்காரர் அழைப்பது “கோடி வீட்டு அம்மா” என்ற பெயரில். [கோடீஸ்வரி அம்மா இல்லை, என் வீடு அமைந்திருப்பது அடுக்குமாடி 2 வது தளத்தில் ஒரு கடைசி வீடு, அதனால் கோடி வீடு].
நான் அவளை ஆசையாக அழைப்பது ஒரு தனி செல்லமான பெயரில்; கோபம் வரும்போது ஒரு கோணலான பெயரில்; அதெல்லாம் எதற்காக அனாவசியமாக வெளியே சொல்ல வேண்டும்? விட்டு விடலாம்.
இவர் சொல்லும் கணபதியோ அல்லது சிங்காரியோ என் வீட்டுக்காரிக்கோ அல்லது என் பையன்களுக்கோ ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவர்கள் எல்லோரும் தற்சமயம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். அவர்களில் யாரையாவது எழுப்பி அவர்களையும் குழப்ப எனக்கு மனம் இடம் தரவில்லை. அவர்களில் யாராவது ஒருவர் தான், நான் எழுதி சமீபத்தில் வெளியிட்ட அந்தக்கதை புத்தகங்களை மூணாவது மாடி மூணாவது வீட்டுக்கு படிப்பதற்காகக் கொடுத்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
மூன்றாவது மாடியில் ஒரு கணவன் மனைவி இருவரும் ஏதோ பேங்கில் வேலை பார்ப்பதாக யாரோ சொன்னது போல எனக்குள்ளும் ஒரு சொப்பன ஞாபகம் இப்போது வருகிறது. அவர்களைத்தேடி வந்த வெளிநபர்கள் யாராவது கூட, என்னிடம் அதுபோல ஒரு வேளை, என்றைக்காவது விசாரித்திருக்கலாம். நான் வழக்கம் போல, ”எனக்குத் தெரியவில்லை; வேறு யாரிடமாவது, வேறு எந்த வீட்டிலாவது விசாரித்துப்பாருங்கள்” என்று கூட சொல்லியிருக்கலாம்.
என்னைப்பொறுத்தவரை இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பதே மதியம் என் ஞாபகத்திற்கு வருவது இல்லை. எனக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத விஷயங்கள் எல்லாவற்றிலும், நான் இப்படித்தான்.
ஆனால் என் நண்பர்களில் சிலர், நான் லைட் நீலக்கலர் ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டை, டார்க் ப்ரெளன் கலர் பேண்டில் டக் செய்துகொண்டு, பூட்ஸ் காலுடன், மஞ்சள்கலர் ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டியபடி, ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்கு, ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் 27B பஸ்ஸில் ஓடிவந்து ஏறியதாக, செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணிக்கு, ஆபீஸில் எங்கேயாவது என்னைச் சந்திக்கும்போது கரெக்டாகச் சொல்லி விசாரிப்பார்கள்.
எனக்கே எங்கே போனேன், எதற்குப்போனேன், என்றைக்குப்போனேன், என்ன டிரஸ்ஸில் போனேன் என்பது சுத்தமாக மறந்திருக்கும்.
சரி...சரி, அதையெல்லாம் விட்டுவிட்டு, இப்போது இந்தப்பெரியவரின் கதைக்குப் போவோமா?
பகுதி-2
”சரி சார், இந்த இரவு நேரத்தில் என்ன விஷயமாக என்னைப்பார்க்க வந்தீர்கள்?” என்றேன்.
“சும்மாத்தான். உங்கள் கதைப் புத்தகங்களைப்படித்த நான் உங்களை நேரில் சந்திக்கணும் என்று பல நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்றும் எனக்குத்தூக்கம் வரவில்லை. உங்கள் வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது. உங்களையும் பார்த்து அறிமுகம் செய்துகொண்டு, உங்கள் கதைப்புத்தகங்களைப் பார்த்த விஷயத்தையும் கூறிவிட்டு, என்னைப்பற்றியும் (என் கதையையும்) சுருக்கமாகச் சொல்லி விட்டுப்போகலாமோ என்று தான் வந்தேன்”என்றார்.
அவருக்கு ஏழு பெண்கள், நான்கு பையன்களாம். இது தவிர நாலைந்து குழந்தைகள் பிறந்து அற்ப ஆயுளுடன் போய்ச்சேர்ந்து விட்டதாம். வயது எண்பது முடிந்து விட்டதாம். ஒரு பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்று இருபது ஆண்டுகள் ஆகிறதாம். குழந்தைகள் பதினோறு பேர்களுக்கும் திருமணம் ஆகி பேரன் பேத்திகள் பிறந்து பல ஊர்களில் உள்ளனராம்.
இரண்டு பையன்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலையாம். மற்ற இரண்டு பையன்களுக்கும் டெல்லியில் வேலையாம். பையன்கள் எல்லோரும் நல்லபடியாகவே இவரைப் பார்த்துக் கொள்கிறார்களாம். இவருக்கும் பென்ஷன் பணம் வருகிறதாம். பையன்கள் இவரை ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என்பார்களாம். எங்கு போனாலும் விமானத்தில் போய் வாருங்கள் என்பார்களாம்.
டெல்லியில் உள்ள இரு மகன்கள், மேலும் இந்தியாவின் ஏழு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஏழு பெண்கள் வீடுகளுக்கும், மாதாமாதம் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தவாறு சென்று ஒரு மாதம் தங்கி வருவது வழக்கமாம்.
இந்தமுறை சிங்காரி வீட்டுக்கு வந்து 20 நாட்கள் ஆகப்போகிறதாம். இன்னும் ஒரு வாரமோ பத்து நாட்களோ கிளம்பி விடுவாராம். அவரின் மனைவி இறந்து போய் மூன்று வருடங்கள் முடியப்போகிறதாம்.
என்னைப்பற்றியும் ஓரளவு விசாரித்துத் தெரிந்து கொண்டார். என்னை விட அவர் 16 வருடங்கள் சீனியர் என்று கணக்குப்போட்டுக்கொண்டேன். நான் ரிடயர்ட் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. அவர் ரிடயர்ட் ஆகி 20 வருடங்கள் ஆகின்றன.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த பெரியவர் என நினைத்துக்கொண்டேன். இன்று ஓரிரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ, வளர்க்கவோ. ஆளாக்கவோ திண்டாட்டமாக இருக்கும் நிலமையில், இவருக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து, அவர்களில் பதினோறு பேர்களை நன்கு வளர்த்து, படிக்க வைத்து, நல்ல நிலமைக்குக் கொண்டு வந்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, எவ்வளவு ஒரு பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை அவருக்கு இருக்க வேண்டும் என வியந்து போனேன். அவருக்கு கோயில் கட்டிக் கும்பிடவேண்டும் போலத்தோன்றியது எனக்கு.
அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததில், ஒருசில விஷயங்களை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது என்னைப் பொறுத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொறுத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன். ஏனென்றால் பாவம், அவருக்கு இப்போது மனைவி இல்லை.
விருப்பம் உண்டோ இல்லையோ, மனைவி என்று ஒருத்தி இருந்தால், ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.
மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, அதுவும் வயதான காலத்தில் ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அவள் ஒருத்தி இருந்தால் தானே இவனுக்கு, இவனுடைய எண்ணங்களுக்கு, இவனுடைய தேவைகளுக்கு, ஒரு வடிகாலாக இருந்து செயல்பட முடியும். அவள் இல்லாத நிலையில் வடிகால் தேடி இவர் வெளியே பலரிடம் செல்ல வேண்டியுள்ளது.
வீட்டில் இவரின் பையன்களோ, மருமகள்களோ, மாப்பிள்ளைகளோ, இவர் பெற்ற பெண்களோ, பேரன்களோ, பேத்திகளோ பலரும் இருக்கலாம். இவரும் பேசலாம் அல்லது பேச நினைக்கலாம். அவர்கள் நின்று இவர் பேச்சைக்கேட்க வேண்டுமே! அதற்கு அவர்களுக்கு விருப்பமும், பொறுமையும், நேர அவகாசமும் இருக்க வேண்டுமே!
அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச்செல்லும் சூழ்நிலைகள். களைப்புடன் வீட்டுக்கு வந்தால் சமையல், சாப்பாடு, ஷாப்பிங் போவது, டி.வி. நிகழ்ச்சிகள், கம்ப்யூட்டர், செய்தித்தாள், வார மாத இதழ்கள் படிப்பது, மறுநாள் சீக்கரம் எழுந்து ஆபீஸ் செல்ல வேண்டி, சீக்கரமாக படுக்கப்போவது என்று ஒவ்வொரு நாளும் கழியும். யாருக்கும் மற்ற யாரிடமும் எதுவும் பேச நேரமிருக்காது.
குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போவது, ட்யூஷன் போவது, வீட்டுப்பாடம் செய்வது, நடுநடுவே டி.வி. நிகழ்ச்சிகள், கார்டூன் நெட்வொர்க், வீடியோ கேம்ஸ் என்று அவர்களுக்கும் நேரம் சரியாக இருக்கும். தாத்தாவைப் பார்க்கவோ அவருடன் பேசவோ விரும்ப மாட்டார்கள்.
அந்தப்பெரியவருக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லையென்று அவர் புலம்பினாலோ, இருமினாலோ, தும்மினாலோ இவர்களின் எரிச்சலும் கோபமும் அதிகமாகும்.
இத்தகைய சூழ்நிலைகளில் அந்தப்பெரியவர் யாருடன் மனம் விட்டுப்பேச முடியும்? வந்த பெரியவரின் பேச்சுக்களிலிருந்து என்னால் இவற்றையெல்லாம் அனுமானிக்க முடிந்தது. ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ! அவர்மேல் இரக்கம் கொண்டு, அவருடன் மிகவும் கனிவாகவே பேசினேன்.
பகுதி-3
“நீங்கள் எழுதி சமீபத்தில் வெளியிட்டதாகச் சொல்லி என் மாப்பிள்ளை கொடுத்த இரண்டு புத்தகங்களிலேயே, இதுவரை நான் எந்தக்கதையையுமே படிக்கவில்லை” என்றார்.
இதைக்கேட்டதும் சற்றே அதிர்ச்சியடைந்த நான், ”என் கதைப் புத்தகங்களைப் படித்ததாகவும், அதனால் தான் என்னை நேரில் சந்திக்க வந்ததாகவும் சொன்னீர்களே” என்றேன்.
தங்கள் புத்தகங்கள் இரண்டிலும், பின்புற அட்டையில் “ஆசிரியரைப்பற்றி” என்ற குறிப்புகள் இருந்தன. தங்கள் புகைப்படமும், முழு விலாசமும் இருந்தது. அவற்றை மட்டும் தான் படித்தேன்; உடனே உங்களை சந்திக்க ஓடோடி வந்தேன்” என்றார்.
இதைக்கேட்டதும், பொதுவாக ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் எரிச்சலே எனக்கும் ஏற்பட்டது.
அவரைப் பொறுத்தவரை அந்தப்புத்தகத்தின் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களே போதுமானதாகும். அவர் சந்திப்பதற்கும், அளவளாவுவதற்கும். மனம் திறந்து மனக்குமறல்களைக் கொட்டவும் ஒரு வடிகால் வேண்டும், அவருடைய தேவை அவ்வளவுதான்.
புத்தக அட்டையை மட்டும் படித்துவிட்டு இன்று என்னையே வடிகால் ஆக்கிக்கொண்டுள்ளார் என்பது, மெதுவாக எனக்கும் புரிய வந்தது.
“அப்புறம் என்ன சார், எதற்கும் கவலையே படாதீர்கள், ஆண்டவன் இருக்கிறார்” என்றேன் வாயில் வெளிப்பட்ட கொட்டாவியை கை விரல்களால் சொடுக்கியபடியே.
அவரும் புறப்படத் தயாரானார்.
“ஆண்டவனைத்தான் நம்பியுள்ளேன். தினமும் ஒரு ரவுண்ட் இங்கு அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக்கோயில்களுக்கும் போய் வந்து விடுவேன்” என்றவர், “இன்று ராத்திரி ரொம்ப நேரம் ஆகிவிட்டது; நான் மேலும் ஒரு வாரமோ பத்து நாட்களோ தான் இந்த ஊரில் இருப்பேன்; நீங்க ஃப்ரீயாக இருக்கும்போது மறக்காமல் என்னைக்கூப்பிடுங்கோ; இன்று பேச விட்டுப்போன விஷயங்களையெல்லாம் பேசிக்கலாம்”என்றார், தன் காலில் செருப்பை அணிந்தவாறே.
“பார்த்து ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்” என்றேன்.
‘ஓ.கே., சார், குட் நைட், ஸீ... யூ” என்று சொல்லிவிட்டு பிரிந்து செல்லவே மனம் இல்லாதவராக, ஒருவழியாக, விடை பெற்றுச்சென்று விட்டார்.
நேராக மாடிப்படிகளில் ஏறி தன் [மூன்றாவது மாடி மூன்றாவது வீடு] வீட்டுக்குச் செல்லாமல், மாடிப்படிகளில் இறங்கி கீழே போவதை கவனித்தேன்.
விளக்கை அணைத்துவிட்டு, என் வீட்டு பால்கனி வழியாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாயில் பக்கம் நோக்கினேன். இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்த வாட்ச்மேனை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்.
பிறகு அவனையும் அழைத்துக்கொண்டு, அவர் தெருவில் எங்கோ நடந்து செல்வதையும் கவனித்தேன்.
விளக்கை அணைத்துவிட்டு, என் வீட்டு பால்கனி வழியாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாயில் பக்கம் நோக்கினேன். இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்த வாட்ச்மேனை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்.
பிறகு அவனையும் அழைத்துக்கொண்டு, அவர் தெருவில் எங்கோ நடந்து செல்வதையும் கவனித்தேன்.
மறுநாள் காலையில் வாட்ச்மேனிடம் இதுபற்றி விசாரித்தேன்.
“அந்த வயதானவருக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை, சார்; தினமும் நள்ளிரவு 12 மணிக்கு என்னை வந்து எழுப்புவார். தெருக்கோடி டீக்கடைக்கு அழைத்துச்செல்வார். டீ வாங்கித்தருவார். தானும் டீ குடிப்பார். பிறகு என்னுடன் விடியவிடிய பேசிக்கொண்டே இருப்பார். கேட்டால் வாட்ச்மேன் வேலை பார்க்கும் நீ இரவில் இப்படித்தூங்கி வழியலாமா என்பார்” என்றான்.
“அந்தப்பெரியவர் சொல்லுவதும் நியாயம் தானே வாட்ச்மேன், இரவில் நம் வீடுகளைப் பாதுகாக்க வேண்டிய நீ தூங்கலாமா” என்றேன், நானும்.
”பெரும்பாலும் முழிச்சுகிட்டு தான் சார் இருப்பேன், நடு ராத்திரி லேசாக்கண்ணைச் சொக்க ஆரம்பிக்கும், அப்போது தான் சற்றே கீழே சாய்வேன். அப்போ பார்த்து தான் கரெக்டா இந்தப்பெரியவர் வந்து என்னைத் தட்டி எழுப்பிவிடுவார்;
அவருக்கு ஏதேதோ மனவருத்தங்கள் என்று நான் நினைக்கிறேன், சார்; தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும், தான் பேங்கில் வேலை பார்த்தது பற்றியும், தான் சென்று வந்துள்ள பல ஊர்களைப்பற்றியும், விலைவாசிகள் பற்றியும், அரசியல் கட்சிகள் பற்றியும், ஊழல், லஞ்சலாவண்யங்கள் பற்றியும், ஏதேதோ கதைகள் விடியவிடிய சொல்லிக்கொண்டு தானும் தூங்காமல் என்னையும் தூங்க விடாமல் செய்துவிடுவார், சார்” என்றான்.
“பிறகு எப்போது தான் வீட்டுக்குப்போவார்? வீட்டில் உள்ளவர்கள் இவரைத் தேட மாட்டார்களா?” என்றேன்.
”படிச்சவரு, வயசானவரு, ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தங்க வந்துள்ள விருந்தாளி; காத்தாட வெட்ட வெளியிலே படுக்க விரும்புறாரு என்று அவருக்கு மொட்டை மாடியிலே கட்டில் போட்டு; பெட்ஷீட், தலையணி, போர்வை, குடிக்க வெந்நீர் பாத்திரம், டார்ச் லைட்டு எல்லாம் கொடுத்திருக்கிறார், அவருடைய மாப்பிள்ளை;
பாத்ரூம் போகணும் என்றாலும், குளிராக இருக்கு வீட்டுக்குள் வந்து படுக்கணும் என்றாலும் இருக்கட்டும், என்று வீட்டின் டூப்ளிகேட் சாவியையும் ஏற்பாடாகக் கொடுத்திருக்கிறாங்க. அவங்களைப் பொறுத்தவரை இவர் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு தூங்குவதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றவன் தொடர்ந்து பேசினான்.
“விடியற்காலம் பால்காரரோ, நியூஸ் பேப்பர்காரரோ வந்தவுடன், அவர்களுக்கு குட்மார்னிங் சொல்லிக்கொண்டே, அவர்களுடன் ஏதோ பேசிக்கொண்டே கிளம்பி விடுவார்” என்றான்.
“இதைப்பற்றி, இவர் இரவெல்லாம் தூங்குவது இல்லை என்பது பற்றி நீ அவர்கள் வீட்டில் சொல்லக்கூடாதோ” என்றேன்.
“சாமீ, நீங்க அதுபோல ஏதாவது செய்து காரியத்தை கெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அவர் பகலில் தூங்குபவரோ என்னவோ; ஆனால் அவரு ரொம்ப நல்லவரு. கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பவரு. டீ, காஃபி, டிபன் எல்லாம் அப்பப்போ வாங்கித்தருகிறாரு;
அது மட்டுமில்லை. அவர் சொல்லும் கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் போதும். அந்த சந்தோஷத்திலேயே, நூறு இருநூறு செலவுக்கு கைமாத்தாகக் கேட்டாலும் தருகிறாரு. திரும்பிக் கேட்பதே இல்லை;
நானே அவருக்கு இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரணும். ரொம்ப தாராள மனஸு அவருக்கு. நம்ம தலைவரு எம்.ஜி.ஆர். மாதிரி கொடை வள்ளல் அவரு. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!” என்றான்.
அவன் சொல்வதும் எனக்கு நியாயமாகவே பட்டது.
மனைவியை இழந்த அவருக்கு வயதான காலத்தில் பேச்சுத்துணையாக ஒரு வடிகால் தேவைப்படுகிறதே! அந்த வடிகாலாக இருந்து, அவருக்கு இந்த வாட்ச்மேனும் ஏதோ ஒரு விதத்தில் உதவிக்கொண்டு தானே இருந்து வருகிறான்!
இவரைப்போல வசதி படைத்தவர்களும், வடிகால் வேண்டுவோரும், பேசாமல் தற்சமயம், ஆங்காங்கே, டி.வி., கட்டில், தனி அறைகள், ஏ.ஸி. போன்ற அனைத்து வசதிகளும் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்து, மாதாமாதம் பணம் கட்டி, தங்கி விடுவதே நல்லது என்று எனக்குத் தோன்றியது.
முதியோர் இல்லங்களில் சேர்வதால் அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும். பேச்சுத்துணைக்கும் பொழுதுபோக்கிற்கும் இவர்கள் வயதை ஒத்த பெரியோர்கள் இருப்பார்கள். பணம் தருவதால் ஓரளவு பொறுப்பாகவும் கவனித்துக் கொள்வார்கள்.
தினமுமோ அல்லது வாரம் ஒருமுறையோ மருத்துவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருகை தருவதால், உடல்நிலை சரியில்லாவிட்டாலும், உடனுக்குடன் கவனிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, தேவையான சிகிச்சை தரப்பட்டு, அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் வழியுண்டு.
ஊரார் ஆயிரம் சொல்லுவார்கள். பெற்ற குழந்தைகள் பொறுப்பாக கவனிக்கவில்லையென்று. இன்றுள்ள அவசர உலகத்தில், பணம் ஈட்டுவது மட்டுமே ஒரே குறியாக ஆணும் பெண்ணும் அலைந்து திரிய வேண்டிய அவஸ்தைகளுக்கிடையில், யாரும் யாரையும் ஓரளவுக்குமேல் கவனிக்க முடியாத சூழ்நிலையில், இத்தகைய முதியோர் பிரச்சனைகளுக்கும், நடைமுறைக்கு சாத்தியமான, ஒரு நல்ல வடிகால் (தீர்வு) வேண்டுமே!
எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இது போன்ற வயதானவர்கள் தனிமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும், கோளாறுகளையும் ஓரளவுக்கு என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தங்களையும் மதித்து யாராவது பேசமாட்டார்களா, தங்கள் மனவருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி விடுகிறார்கள்.
அவரைப்பற்றி உணர்ந்து கொண்ட எனக்கு ‘வடிகால்’ என்ற தலைப்பில் அவரைப்பற்றியே இந்தக்கதையை எழுதி சமுதாயத்திற்கு, இவர்களின் உளவியல் பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியதே, இந்தக்கதை பிறந்ததன் காரணமாகும்.
ஆனால் ஒன்று; எங்கள் வாட்ச்மேன் அவரைப்பற்றிச் சொல்வதிலிருந்து, அந்த மனிதரிடம் நான் மறுபடியும் மாட்டாமல் தப்பிக்கணும் என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன்.
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````இக்கதைக்கான என் விமரிசனம்...
VGK 22 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’வடிகால்’
கதையின் தலைப்பு
இராக்கோழியாக நீண்ட நேரம் விழித்துக்கொண்டு படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருக்கும் நம் கதாசிரியக்கதை நாயகரைக் காண அகாலத்தில் வரும் ஒரு விருந்தினர் பற்றிய கதை.
வாழ்க்கையின் கடைசி படிகளில் நின்று கொண்டிருக்கும் அந்த முதியவர் போன்ற ஒருவரை நாம் எங்காவது கட்டாயம் சந்தித்திருப்போம்...."அறுவை", "ரம்பம்", "கடி" என்று அவருக்கு மனதுக்குள் நாமகரணம் செய்து கரித்துக்கொட்டியிருப்போம்!
இந்தக்கதாபாத்திரம் மூலம் ஆசிரியர், நம் சமுதாயத்தில் வாழும் பல சாரார்களைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்...
முதியோர் தேவைகள் பல பல...
சிலருக்கு அவசியம் நல்ல கூரை...
சிலரின் தேவை வைத்தியம்...
சிலர் ஏங்குவது வாய்க்கு ருசியான சோற்றுக்கு ...
ஆனால் பலரும் ஏங்குவது தாங்கள் வாய் விட்டுப்பேசுவதை காது கொடுத்துக் கேட்க ஒரு நபரைத்தான்...
நம் கதை நாயகனோ நம்மில் பலரின் பிரதிபிம்பம்...
தான் யார்... என்ன சாப்பிட்டோம்... என்ன பேசினோம்... என்றே நினைவு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவசரவாழ்க்கை வாழ்பவர்...
அக்கம் பக்கத்தினர் அவருக்கு பெயரில்லாத வெறும் முகங்கள்...
தன் அவசர வாழ்கையில் மனைவி குழந்தைகள் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளவே கஷ்டப்படும் ஒரு பிஸியான ஜீவன்...
இந்த எழுத்தாளர், இரவு பதினோரு மணிக்கு கதவைத்தட்டி உள்ளே வந்து, அவர் பொறுமையை சோதித்து பொழுதை அபகரித்தாலும், அதை அவர் பொறுமையாக சகித்துக்கொண்டு அவர் க்ஷேம தாபங்களைக் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு காரணம், அந்தப் பெரியவர் இவர் எழுதிய இரண்டு புத்தகங்களைப் பார்த்துவிட்டு இவரைப் பார்க்க வந்தவர் என்பது தான்...(எழுத்தாளருக்கே உரிய குணம்!)
அந்தப்புத்தகத்தின் முன் / பின் அட்டைகளை மட்டுமே படித்தவர் என்று தெரியும் பொழுது எழுத்தாளருக்கு வரும் ஊமைக்கோபம் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது...
பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்ந்து, பெற்றதில் சிலவற்றையும், மனைவியையும் பறிகொடுத்து விட்டு, மீதமுள்ள குழந்தைகளிடம் (வீட்டுக்கு சில நாட்கள்) கழிக்கும் இந்த முதியவருக்குத் தேவை... மனதில் உள்ளதெல்லாம் பேசித்தீர்க்க ஒருவர்... அந்த வடிகாலுக்காக அவர் பழக்கம் இல்லாதவரையும் பேசப்பிடித்துக்கொள்வது அந்த வயசுக்கே உள்ள நிதர்சன குணம்...
வாழ்க்கையில் புதிய குறிக்கோள் இல்லை, தானே நின்று நடத்த வேண்டிய கடமைகள் இல்லை, சுமந்த பாரங்களை இறக்கிவைத்தாயிற்று... வண்டிக்காக காத்துக்கொண்டிருக்கும் மீதி நாட்களில் அவருக்கு (ஆரோக்கியமாக இருக்கும் வரை) தேவை "அசை போடுதல்" வாயாரப்பேசுதல்... அதை இவரை உதாசீனப்படுத்தாமல் கேட்க ஒரு ஆத்மா...
அது அந்த குடியிருப்புக்காவலாளியாக இருந்தால் என்ன, அங்கே குடியிருக்கும் எழுத்தாளராக இருந்தால் என்ன... காவலாளி இவர் பேச்சை கேட்கும் சகா... கேட்பதற்குடிப்ஸ்சாக அவர்களுக்கு டீயும், காசும் தந்து ஒரு வடிகால் தேடிக்கொள்ளுகிறார்....
இவரைப்போன்ற பல முதியவர்களை - தூக்கம் மறந்த மனிதர்களை - நாம் அனுதினமும் பார்க்கிறோம்...
இவர்களுக்குத்தேவை நம் கதை நாயகர் நினைப்பது போல ஒத்த வயதானவைகளுடன் வாழ ஒரு முதியவர் இல்லமா?
இல்லை, தங்கள் பலபல அன்றாட அலுவல்களுடன் அவருடன் அரட்டை அடிப்பதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கக்கற்றுக்கொள்ளும் குடும்பமா?
வீட்டில் ஒரு சின்னக்குழந்தை இருந்தால், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நாம் அத்துடன் அவ்வப்போது அதன் வயதுக்கு இறங்கிவந்து விளையாட நேரம் ஒதுக்குகிறோமே...
இதையெல்லாம் தன் குழந்தைகளுக்கு இவரும் செய்து இருப்பாரே.... இரண்டாவது குழந்தைப்பருவத்தில் இருக்கும் இவரோடு பேச / பேசுவதை கேட்க கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் என்ன... இவர் என்ன இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விடப்போகிறார்?
அந்தக்காலத்தில், இவர்களுக்காகத் தான் கிராமங்களில் வாசலில் திண்ணை கட்டினார்களோ?
இளையவர்கள் அவரவர் வேலையே பார்த்துக்கொண்டிருந்தாலும், தி ண்ணையில் அமர்ந்த படி, அடுத்த வீட்டுப் பெரிசுடன் பழைய கதைகள் பேசியபடி ஆனந்தமாக இருந்தார்களே....
பல வீட்டு "பெருசுகளின்" மனநிலையையும், இளையவர்களின் யதார்த்தப் பிரச்சனைகளையும், எளியவர்களின் (காவலாளி) நிதர்சன நிலையையும் கண் முன் சித்தரித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
//இதைப்பற்றி, இவர் இரவெல்லாம் தூங்குவது இல்லை என்பது பற்றி நீ அவர்கள் வீட்டில் சொல்லக்கூடாதோ” என்றேன்.
“சாமீ, நீங்க அதுபோல ஏதாவது செய்து காரியத்தை கெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அவர் பகலில் தூங்குபவரோ என்னவோ; ஆனால் அவரு ரொம்ப நல்லவரு. கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பவரு. டீ, காஃபி, டிபன் எல்லாம் அப்பப்போ வாங்கித்தருகிறாரு;
அது மட்டுமில்லை. அவர் சொல்லும் கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் போதும். அந்த சந்தோஷத்திலேயே, நூறு இருநூறு செலவுக்கு கைமாத்தாகக் கேட்டாலும் தருகிறாரு. திரும்பிக் கேட்பதே இல்லை;
நானே அவருக்கு இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரணும். ரொம்ப தாராள மனஸு அவருக்கு. நம்ம தலைவரு எம்.ஜி.ஆர். மாதிரி கொடை வள்ளல் அவரு. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!” என்றான். //
"அட, இவரைப்போலவே ஒரு பெரியவரை எனக்குத் தெரியும்ப்பா" என்று கதை படிக்கும் ஒவ்வொருவரையும் சொல்ல வைக்கும் இந்தக்கதை, ஆசிரியரின் கதைகளில் ஒரு ரத்தினம் ....
இந்த முதியவரிடம் ஒரு லேப்டாப் கொடுத்து அவருக்கு, முகநூல், சமுதாய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி வைத்தால் அவர் அவற்றை சிறந்த வடிகாலாகப் பயன்படுத்திக்கொள்ளலா ம்.!