badge

Followers

Showing posts with label parisu. Show all posts
Showing posts with label parisu. Show all posts

Saturday, 26 July 2014

மூன்றாம் பரிசுவென்றேன் -"பல்லெல்லாம் பஞ்சாமி பல்லாகுமா ..."





"பல்லெல்லாம் பஞ்சாமி பல்லாகுமா ..."

வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ப்ளாகில் நடைபெறும் சிறுகதை விமரிசனப் போட்டியில் இம்முறை மூன்றாம் பரிசுக்கு உரிய விமரிசனமாக என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவிதுக்கொள்கிறேன் ....

போட்டிக்கான கதைக்கான லிங்க் ....http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html





பல்லெல்லாம் 
பஞ்சாமியின் 
பல்லாகுமா?

நகைச்சுவை சிறுகதைத்தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். நமக்குப் பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும், அதன் கஷ்டம்?

பற்களினால் படாதபாடுபட்ட பஞ்சாமியை உங்களுக்குத் தெரியுமா? தெரியா விட்டாலும் பரவாயில்லை. இந்தக்கதையைப் படித்து முடிக்கும் போது ஓரளவுக்குக்காவது தெரிந்து கொண்டு விடுவீர்கள். இதைப்படிக்கும் உங்களில் எவ்வளவோ பஞ்சாமிகள் பஞ்சமின்றி இருக்கக்கூடும். உங்களைப் பற்றிய உண்மைக் கதையை எழுதிவிட்டதாக யாரும் கோபப்பட வேண்டாம்.

பஞ்சாமிக்கு ஆஜானுபாகுவான உடம்பு. நல்ல உயரம், தடிமனான உடல்வாகு, அதற்கேற்றபடி, கைகள், கால்கள், முகம், வாய் மட்டுமல்ல, நல்ல எடுப்பான பற்களும் கூட. அவர் வாயைத் திறக்காமலேயே கூட நாம் அவரின் பற்களை தரிஸிக்க முடியும். பற்களின் வளர்ச்சியில் அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம். 

அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்.

அவருடைய மிகப்பெரிய பற்கள் சில துணி துவைக்கும் பாறாங்கற்களை நினைவு படுத்தும். ஒன்றில் துணியைக் கசக்கிப்பிழிந்து வைக்கலாம். மற்றொன்றில் துணியையே அடித்துத் துவைக்கலாம் போல அருமையாகவும், சொறசொறப்பாகவும் இருக்கும். 

ஆலங்குச்சி, வேலம் குச்சி, அடுப்புச் சாம்பல் முதலியவற்றில் ஆரம்பித்து பயோரியா, நஞ்சன்கூடு, கருவேலப்பட்டை, ’பாடாவதி பல்பொடி’ என்றும் ஒன்று உண்டு - அது வரையிலும் அனைத்தையும் உபயோகித்து, பிறகு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய எல்லா நாட்டு மக்களும் தேய்ப்பதாக பிரபலபமாக விளம்பரப்படுத்திய அந்தத் தித்தித்து வழியும் ரோஸ் கலர் பற்பொடி வரை உபயோகித்து ஓய்ந்தவர் தான் நம் பஞ்சாமி.  

ஒரு காலக்கட்டத்தில் நெல் உமியுடன் உப்பு, கிராம்பு, கற்பூரம் முதலியன போட்டு வறுத்து அரைத்து உமிக்கரிப் பல்பொடி என்ற தன் சொந்தத் தயாரிப்பிலும் தேய்த்துப் பார்த்தவர்.

வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் ஆசாமியானதால் பற்கள் யாவும் பழுப்பேறி ஒரு வித ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிக்கும். 

டி.வி. விளம்பரங்களில் வரும் அந்த முத்துப்பல்லழகி போல ஆக வேண்டும் என்று விரும்பி பஞ்சாமியும் இதுவரை தேய்த்துப் பார்க்காத பற்பசைகளே இல்லையெனச் சொல்லலாம். 



சொட்டுத்தண்ணி விட்டால் சட்டிச்சாந்து வழிக்கலாம் போல அட்டைக் கருப்பாக இருக்கும் நானே, அந்தக் காலத்தில் டி.வி. விளம்பரத்தைப் பார்த்து, இண்டர் நேஷனல் லக்ஸ் தேய்த்துப் பார்த்தவன் தான், சினிமா நடிகை ஸ்ரீதேவி போல அழகாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில்.

விளம்பரத்தில் வருவதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதைப் புரிந்து கொள்வதற்குள் நானே நூற்றுக்கணக்கான சோப்புகள் வாங்கி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவ்வாறு ஆலங்குச்சியில் ஆரம்பித்து, நவ நாகரீகப் பற்பசைகள் வரை அனைத்தையும் உபயோகித்துப் பார்த்து விட்ட பஞ்சாமியின் முப்பத்திரண்டு பற்களும் நேற்று வரை ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் ஒரேயடியாக பாசம் பிடித்து ஒன்றுடன் ஒன்று மிகவும் ஒட்டுறவாகத் தான் இருந்து வந்தன.

அவருடன் நெருக்கமாகப் பழகிய ஒரு சிலர் அவர் வாயிலிருந்து ஒரு வித துர்நாற்றம் அடிப்பதாகச் சொன்னதும் அவரால் அதை நம்பவே முடியவில்லை. (சாக்கடை நாற்றம் அந்த சாக்கடைக்குத் தெரியாது என்பது போல). 

பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே அவர் வாயில் அடித்த நாற்றத்தில், ஒரு நாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து, பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கண்டிப்புடன் சொல்லி விட்டாள்: “இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”.

"பல்லு போய் தாத்தாவான பிறகு உன் பக்கத்தில் வந்து தான் என்ன லாபம், வராமல் இருந்து தான் என்ன நஷ்டம்" எனக் கேட்க வேண்டும் போலத் தொன்றியது பஞ்சாமிக்கு. 

இருந்தும் வாயை மூடி மெளனமாக இருந்து விட்டார். பிரச்சனைக்குரிய வாய் துர்நாற்றம் மேலும் பரவாமல் இருக்கவோ என்னவோ!



 


[ 2 ]

முடிவாக தன் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, பல் டாக்டர் ஒருவரை சந்தித்து பற்களை முழுமையாக க்ளீன் செய்து வந்து விடுவது என்ற முடிவுடன் கிளம்பினார்.

ஆஸிட்டுக்கு பை-பை என்ற விளம்பரத்தில் வரும் டாய்லெட் போல தன் பற்களும் பளிச்சென்று படு சுத்தமாகி விடும் என்ற இன்பக் கனவில் மூழ்கியவாறு நீண்ட க்யூவில் டாக்டரைப் பார்க்க அமர்ந்திருந்தார்.

தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. ’யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும்’ என்ற நல்லெண்ணம்.

வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நாற்றமோ, துர்நாற்றமோ, மெஜாரிட்டி இருந்தாலே ஒரு வித நிம்மதி தானே!

டாக்டரின் அழைப்பின் பேரில் உள்ளே நுழைந்ததும் அழகான சுழலும் நாற்காலியில் அமர்த்தப்பட்டார் நம் பஞ்சாமி. யாருக்குமே நாற்காலியைப் பிடித்து விட்டால் போதும், இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்து விட்டதாக ஒரு நினைப்பு வந்து விடுவது இயற்கையே.

இடிக்கி, குரடு, நோஸ்ப்ளேயர் போன்ற ஒரு சில உபகரணங்களுடனும், கை நிறைய பஞ்சுடனும், டாக்டர் அவர்கள் பஞ்சாமியின் பல் இடுக்குகளில் புகுந்து விளையாட ஆரம்பித்தார். 



இதுவரை ஒட்டி உறவாடிய பற்களுக்கு இடையே பெரிய இடைவெளிகளை ஏற்படுத்தத் தொடங்கினார். நெடுநாளைய காரைகள் பாறைகள் போல பெயர்த்து எடுக்கப்பட்டன. 

ஒவ்வொரு முறை குத்திக்குத்தி சுரண்டும் போதும் ஈறுகளிலும், எகிறிலும் ரத்தம் பீரிட்டு வந்து வலி எடுத்து வாய் பூராவும் ரத்தத்தால் உப்புக்கரித்தது. பஞ்சினால் ரத்தம் ஒத்தி ஒத்தி எடுக்கப்பட்டு பிறகு, தூக்கி எறியப்பட்டு வந்தது. பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே நல்ல சிவப்பாகிப் போனது. 

விடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும் காரைகளும் அடக்கி ஒடுக்கி அகற்றப்பட்டதால், தங்கள் ‘சொத்தை’ இழந்த அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒரு வித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல ஒரு வித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின.

எவ்வளவு கஷ்டப்பட்டாலும், கடைசியில் முத்துப்பற்களைப் பெற்றே தீரப் போகிறோம் என்ற முழு நம்பிக்கையில், பஞ்சாமியும் வலியைப் பொறுத்துக்கொண்டு, டாக்டருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். 

இடையிடையே அங்குள்ள வாஷ்பேசினில் வாய்க்கொப்பளித்தபடி, துர்நாற்றமில்லாத தன் வருங்கால இல் (பல்) வாழ்க்கையை எண்ணி மகிழ்ந்தார்.

டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. 



கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லி வீட்டுக்குப் புறப்படலானார்.



  


[ 3 ]

இரண்டு நாட்களுக்கு சூடாக எதுவும் சாப்பிட வேண்டாம். பால், கஞ்சி, ஐஸ்கிரீம் போன்ற ஏதாவது திரவ உணவாக சூடு இல்லாமல் ஜில்லென்று மட்டும் சாப்பிடச் சொல்லி டாக்டர் கூறியிருந்ததால், இவை மூன்றில் தனக்கு மிகவும் இஷ்டமான ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் டப்பாக்களாக நிறைய வாங்கி வந்து, தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து டாக்டரிடம் திரும்பி வந்த பஞ்சாமிக்கு, முன் வரிசையில் அழகாக ஆறு பொய்ப் பற்கள் கட்டி விடப்பட்டன. கண்ணாடி முன் நின்று பல்லைக்காட்டிய பஞ்சாமிக்குத் தன் முகமே மாறி விட்டது போன்ற ப்ரமை ஏற்பட்டது.

குத்துச்சண்டை வீரரிடம் குத்து வாங்கியது போல முகத்திலும், தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது.   


கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.

முன்புற செயற்கைப்பற்கள் ஆறுக்கும் ஆதரவாக, மிகப்பெரிய செதில் போன்ற பொருள் மேல் தாடையின் உள் ஓட்டுப் பகுதியில் சொருகப்பட்டிருந்தது. அது பஞ்சாமியின் வாயில் ஏதோ வேண்டாத ஒரு பொருள் ஈஷிக்கொண்டிருப்பது போல அருவருப்பை அளித்தது.

மேலும் அந்தப் பொய் பற்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க இரு புற நிஜப்பற்களிலும் இரண்டு கம்பிகள் க்ளிப் போல வளைத்து மாட்டப் பட்டிருந்ததால், விண் விண்ணென்று அந்தப்பற்களிலும், ஒரு வித வலியை ஏற்படுத்தி அவஸ்தை கொடுத்து வந்தது.

எதையாவது சாப்பிடும்போது, பொய்ப் பற்களும் விழுங்கப்பட்டுவிடுமோ என்ற ஒரு வித பயத்தில், பஞ்சாமியால், நிம்மதியாக எதுவும் ருசித்து, ரசித்துச் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தையாக இருந்தது.

சுமார் ஒருமாத காலமாக இது போன்ற பல வித கஷ்டங்களை அனுபவித்து வந்த பஞ்சாமிக்கு, அவருடைய வயதான மாமனாரின் வருகை, ஒரு வித திருப்பு முனையாக அமைந்தது. 

சதாபிஷேகம் முடிந்து, எண்பது வயதைத்தாண்டி எட்டு மாதங்கள் ஆன அவரால், கரகரப்பான மிக்ஸர், காராச்சேவ், முள்ளு முறுக்கு, கடலை மிட்டாய் என எல்லாமே நன்றாகக் கடித்து சாப்பிட்டு வர முடிகிறது. சுத்தமாக எல்லாப் பற்களும் விழுந்து, கம்ப்ளீட் ஆக பல் செட் கட்டியிருப்பவர்.

பஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி, "மீதியுள்ள எல்லாப் பற்களையும் சப்ஜாடா தட்டி விட்டு விட்டு, புதியதாக முழுமையான கட்டடம் கட்டினால் தான் சரிப்பட்டு வரும்" என்று எடுத்துரைத்தார்.


பஞ்சாமிக்கு இதைக்கேட்டதுமே பல்லைப் பிடுங்கியது போல ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல், மாமனார் எவ்வழியோ மாப்பிள்ளையும் அவ்வழியே என தினமும் பல் டாக்டரிடம் படையெடுத்து, வாரம் இரண்டு மூன்று பற்கள் வீதம் பிடுங்கிய வண்ணம் இருந்தார். ஒரு வழியாக, கொஞ்சம் கொஞ்சமாக, அனைத்துப் பற்களையுமே புடுங்கியெறிய நான்கு மாத காலம் ஆகி விட்டது. 

அனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. 

கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது. 



புதுப் பல்செட் கட்டும் வேலை, வாய்ப்புண்கள் ஆற வேண்டி, டாக்டரால் மேலும் ஒரு மாததிற்கு ஒத்தி வைக்கப் பட்டது.



    


[ 4 ]

இந்த ஒரு மாதமும், பஞ்சாமி வாயைக் கட்ட, வயிற்றைக் கட்ட படாதபாடு பட்டு விட்டார். சாப்பாட்டில் கடுகு போன்ற மிகச்சிறிய கடிக்க வேண்டிய சமாசாரங்களைக் கூட கடிக்க முடியாமல் கடுப்பு வந்தது அவருக்கு.

அவருக்கு மிகவும் பிடித்தமான கரமுரா அயிட்டங்களான பக்கோடா, மிக்சர், காராச்சேவ், கடலை, நேத்திரங்காய் சிப்ஸ், வறுத்த முந்திரி முதலியவற்றை அவர் கண்ணெதிரிலேயே பிறர் கரமுரா எனக் கடித்துச் சாப்பிடுவதைக் கண்டு கண்ணீர் விடலானார்.

மேற்படி அனைத்து அயிட்டங்களையும் தனித்தனியே மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடிப் பொடியாக்கி பொக்கை வாயில் போட்டு வந்தும் திருப்தியாகவில்லை பஞ்சாமிக்கு. 

கடிக்க வேண்டியதை கடிக்கணும், சப்ப வேண்டியதைச் சப்பணும், அப்போது தான் முழுத்திருப்தி ஏற்படும், என்ற உண்மை அவருக்கு விளங்கியது.

நன்றாக மென்று தின்று வெற்றிலை பாக்குப் போட்டு, புகையிலைச்சாறை விழுங்கி வந்த பஞ்சாமிக்கு, இப்போது வாழ்க்கையே வெறுத்துப் போனது போலத் தோன்றியது. 


”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி.

வறுத்த முந்திரி போட்ட பால் பாயஸம், சற்றே கெட்டியான ஆமவடை, சதைப்பத்தான முருங்கைக்காய் சாம்பார், கட்டை வடாம், மொறுமொறுப்பான அடை என அவரவர் இஷ்டத்துக்கு வெட்டும்போது, மோர்க்களி, குழைந்த மோர்சாதம், கரைத்த ரஸம் சாதம், மோர்க்கஞ்சியெனப் பத்திய சமையல்கள் பரிமாறப்பட்டன, பஞ்சாமிக்கு மட்டும் தனியாக.

ஆசையில் அன்றொரு நாள் பால் பாயஸத்தைப் பாய்ந்து ஒரு டம்ளர் எடுத்துக் குடித்த அவர், வாயில் மிதந்த முந்திரிப் பருப்புகளை கடிக்க வழியில்லாமல், சாப்பாடுத் தட்டைச் சுற்றி தூ...தூ என்று துப்பியதைப் பார்க்க எனக்கே மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.

பல்லில்லாத பஞ்சாமிக்கு வெளியில் போகவோ, யாரையும் சந்திக்கவோ மிகவும் வெட்கமாக இருந்தது. பல்வலி இருப்பது போல ஒரு சிறிய டவலால், வாயை எப்போதும் மறைத்துக் கொண்டு, வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

ஒரு மாதம் முடிந்து வாய்ப்புண் ஆறியதும் பல் டாக்டரை சந்திக்கச் சென்றார். ரெடிமேட் பேண்ட் சட்டை வாங்கி உடனடியாக அணிந்து கொள்வது போல, உடனே இன்று தனக்கு பல் செட் கட்டப்பட்டு, அனைத்தையும் கடித்து சாப்பிட்டு விடலாம் என எண்ணிச் சென்ற அவருக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது.

இவரின் வாயைப் பிளக்கச் சொல்லி ஆராய்ந்த டாக்டர் எகிறுப் பகுதியில் நிறைய மேடு பள்ளங்கள் இருப்பதாகவும், அவற்றை சமன் படுத்தி ஒரு லெவலுக்குக் கொண்டுவர ஆங்காங்கே ராவு ராவு என்று ராவி மீண்டும் புண்ணாக்கி, ஒரு வாரம் கழித்து, புண் நன்றாக ஆறிய பிறகு வந்து பார்க்கச் சொல்லி அனுப்பி விட்டார். புண் சீக்கரமாக ஆற மாசிக்காயை வாங்கி தண்ணீர்விட்டு குழைத்து சந்தனம் போல ஆக்கி தடவச்சொன்னார்.





[ 5 ]

ஒரு வார காலம் ஓடிப்போனது. வாய்ப் புண்கள் நன்கு ஆறி விட்டது. இன்று எப்படியும் காரியம் நல்ல படியாக முடிந்து விடும் என்று நினைத்துச் சென்ற அவரை, சுழல் நாற்காலியில் அமரச் செய்தார் அந்த டாக்டர்.

களிமண்ணில் பிள்ளையார் பிடிக்க இரண்டு அச்சுகள் வைத்திருப்பார்களே, அது போல கைப்பிடியுடன் கூடிய ஏதோ இரண்டு கோப்பைகள் வடிவிலான (சலூனில் சம்மர் கட் வெட்ட உபயோகிக்கும் அந்தக்கால மிஷின் போல) ஒரு உபகரணத்தை, வாயைத் திறக்கச் சொல்லி, வாயினுள் நுழைத்து மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஒரு ஆட்டு ஆட்டி இடைவெளி ஏதும் உள்ளதா என சோதனை செய்து பார்த்தார், அந்த டாக்டர்.



எச்சில் கூட விழுங்க முடியாமல் தவித்த பஞ்சாமிக்கு அதனை உடனடியாக வாயிலிருந்து வெளியே எடுத்தால் போதும் என்றாகி விட்டது. அந்த உபகரணத்தை அவர் வாயிலிருந்து வெளியே எடுத்து ஒரு ஓரமாக வைத்தார் டாக்டர்.

பிறகு, ஏதோ ஒரு பாத்திரத்தில், ஏதோ ஒரு பவுடரைத்தூவி, தண்ணீர் விட்டு, ரோஸ் கலரில் சப்பாத்தி மாவு பிசைவது போலப் பிசைய ஆரம்பித்தார். மேற்கொண்டு என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்குமோ, என பஞ்சாமிக்கு கவலை ஏற்பட்டது. 

அங்கு ஏற்கனவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல வகை செயற்கைப் பல் செட்டுகள், இவரைப் பார்த்து பல்லைக்காட்டி, பரிகாசமாகச் சிரிப்பது போலத் தோன்றியது, பஞ்சாமிக்கு.

ரோஸ் கலர் சப்பாத்தி மாவை அந்த அச்சுகளில் நிரப்பி, மீண்டும் வாயைப் பிளக்கச்சொல்லி, உள்ளே இறுக்கமாகச் செலுத்தி, வழிந்த மாவை தன் கை விரல்களால் வழித்தெறிந்தபின், டாக்டர், பஞ்சாமியின் தலையில் ஒரு கையும், முகவாய்க்கட்டையில் ஒரு கையுமாக வைத்து ஒரே அழுத்தாக அழுத்தியதும், அந்தப் பசை மாவில் சிறிதளவு தொண்டைக்குழிக்குள் பாய்வது போல ஒரு அருவருப்பும், குமட்டலும் ஏற்பட்டுத் தவியாய்த் தவித்தார், பஞ்சாமி.

பிறகு வாயைத் திறக்கச் சொன்ன டாக்டர், டக்கென்று அவற்றை வெளியே எடுத்து. ஒரு சில டச்-அப் செய்து விட்டு ஓரம் கட்டினார்.

“வாய்க் கொப்பளித்து விட்டு நீங்கள் புறப்படலாம், இரண்டு நாட்கள் கழித்து வந்தால், உங்கள் பல் செட் ரெடியாகி இருக்கும்” என்றார் டாக்டர்.

பாவம் நம் பஞ்சாமியும் பல் விஷயமாக பல நாட்களாகப் படையெடுத்து வருகிறார்.

அடுத்த முறை டாக்டரிடம் படையெடுத்தபோது, இவரின் பல்செட் ரெடியாகி இவரைப் பார்த்து புன்னகை பூத்து வரவேற்றது.





“என் வாழ்வே இனி உன்னோடு தானடா !
இனி உன் வாயே எந்தன் உலகமடா !
அனைத்தையும் நாம் இனி 
கடிப்போம்,
ருசிப்போம், 
சுவைப்போம் 
ஒன்றாகவே !”

என அந்தப் பல்செட் பாட்டுப் பாடி டூயட் ஆடுவது போலத் தோன்றியது பஞ்சாமிக்கு.


 [ 6 ]


பஞ்சாமியை இருக்கையில் அமரச்செய்து, புதிய பல் செட் இரண்டையும் மேலும் கீழும் பொருத்தி, தன் கை விரல்களால் அழுத்தி இடைவெளியில்லாமல் மேல் ஓட்டிலும், கீழ்த்தாடையிலும் சரியாகப் பொருத்தி விட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கையில் கொடுத்து, “பாருங்கள் - எப்படி உள்ளது” எனக் கேட்டார், அந்த டாக்டர்.

வாயைத்திறந்து பேச பயந்து, தலையை மட்டும் ஆட்டினார் பஞ்சாமி.

காற்றோட்டமாக செருப்புப் போட்டு பழகியவருக்கு திடீரென்று ஷூவும், சாக்ஸூம், அதுவும் டைட்டாகப் போட்டுவிட்டால் ஏதோ ஒரு முதலை, காலைக் கவ்விக் கொண்டிருப்பது போல உணர்வு ஏற்பட்டு கஷ்டப்படுத்தும். அது போல பஞ்சாமிக்கு வாய் முழுவதும் எதையோ வைத்து அடைத்து விட்டது போல ஒரு வித அவதி ஏற்பட்டது.

நாக்கால் தன் புது பல் செட்டைத் துலாவிப் பார்த்த அவருக்குப் பல் நுனிகள் ரம்பம் போல் கூர்மையாக இருப்பது போலத் தோன்றியது. டாக்டரிடம் அதை கைஜாடை மூலம் வெளிப்படுத்தினார். ”அதெல்லாம் கரெக்ட் செய்து விடலாம்” என வாக்களித்த டாக்டர், ஓரிரு முறை பல் செட்டை மெதுவாகத் தானே போட்டு, தானே கழட்டிப் பழகச் சொன்னார். புதியதாக இருந்ததால் கழட்டி மாட்டுவதற்குள் ப்ராணாவஸ்தையாகப் போய் விட்டது பஞ்சாமிக்கு.

புது செருப்பு காலைக் கடிப்பது போல புதுப்பல்செட் கீழ்த்தாடையிலும், மேல் தாடையிலும், ஆங்காங்கே நன்றாகப் பதம் பார்த்து விட்டது.

புண்ணான இடங்களைப் பற்றிய விபரம் அறிந்த டாக்டர் பல்செட்டைத் தனியே எடுத்து தக்ளி போன்ற மிகச்சிறிய சாணைக்கல்லில் ஆங்காங்கே சற்று ராவ ஆரம்பித்தார். உராய்வைக் குறைக்க கிரீஸ் போன்ற போன்ற ஏதோ ஒன்றைத் தடவி மீண்டும் பஞ்சாமியின் வாயில் பொருத்தி, பல்லின் நுனிப்பகுதிகளை சமப்படுத்த, அந்த மிகச்சிறிய சாணைக் கல்லை அவர் வாயருகில் கொண்டு சென்று மீண்டும் ஓடவிட்டு ஃபைனல் டச்-அப் செய்தார்.

சுழலும் சாணைக்கல், வாயில் பொருத்தப்பட்ட, பல் நுனியில் பட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை, சர்வாங்கமும் பஞ்சாமிக்கு மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு வாரம் பழகினால் சரியாக சூட் ஆகி விடும் என்றும், பல்லைப் பத்திரமாகப் பராமரிப்பது எப்படி என்றும், இரவு நேரங்களில் தேவைப்பட்டால் போட்டுக் கொண்டே தூங்கலாம் என்றும், தேவையில்லாது போனால் கழட்டி, அதற்கென தனியாக ஒரு சம்புடத்தில் நீர் ஊற்றி அதில் மிதக்க விடலாம் என்றும், இரண்டு பக்கமும் சமமாக கடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பலவித ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தார், டாக்டர்.



[ 7 ]


தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.

பஞ்சாமியைப் பொருத்தவரை, புதிய பல்செட் அணிந்துள்ளதால் முகம் ஏதோ பார்க்க பங்கரையாய் [கோரமாய்] இல்லாமல் இருப்பதாக மட்டுமே உணர முடிந்தது. 

தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.

முதன் முதலாக நான்கு டைமன் கற்கண்டுகளை வாயில் போட்டுக் கொண்டு மிகவும் ஆசையுடனும், சற்று பயத்துடனும் கடித்துப் பார்த்தார். கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.

பிறகு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராக, பெரு முயற்சி செய்து கொஞ்சம் காராபூந்தியை வாயில் போட்டு மென்று விழுங்கினார். அது ஆங்காங்கே பல்செட் முழுவதும் ஈஷிக்கொண்டு படாத பாடு படுத்தியது.

மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது சாப்பிட்டவுடன் உணவுத் துகள்கள், ஆங்காங்கே பல்லிலும், அதைச்சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள செதில்களின் இடுக்குகளிலும் மாட்டி வருவதாக உணர்ந்த பஞ்சாமி, அதை அடிக்கடி வெளியே எடுப்பதும், சுத்தப்படுத்துவதும், திரும்பவும் கஷ்டப்பட்டு மாட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தார்.

நாளடைவில் இது போல செய்வதற்கு சோம்பல்பட்டு, அடிக்கடி ஏதாவது கடித்து சாப்பிடுவதையே குறைத்துக் கொண்டார். வாயின் இறுக்கத்தைக் குறைக்க, பகல் பொழுதினிலேயே பல்வேறு சமயங்களில், பல்செட்டைக் கழட்டி அதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, வாயை காற்றாட, சுதந்திரமாக இருக்க விட்டு, தனக்குத் தானே உதவி செய்து கொண்டார்.

அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

அன்றொரு நாள் ... பாவம் .. மீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது.

[ 8 ]

பாத் ரூமில் சோப்புப் போட்டுக் குளித்துக்கொண்டிருந்த பஞ்சாமி, சோப்பு நுரை வாயில் சற்று பட்டு விட்டதால், துப்பி விட்டு, தன் பல் செட்டைக் கழட்டி, பல்லையும் துலக்கி விடலாம் என அவசரமாக கழட்டும் போது, அதில் ஒன்று கை நழுவி கீழே விழுந்து இரண்டாக உடைந்து போனது. அது மட்டுமா ! அந்தப் பதட்ட வேளையில் மற்றொன்று கழிவறைப் பாதையில் சோப்பு நுரையுடன் வழுக்கிச் சென்று மறைந்தே போனது. பஞ்சாமி நொந்து நூலாகிப் போனார்.

பல் டாக்டரை நோக்கிய பஞ்சாமியின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஏற்கனவே பல் விஷயமாக பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து விட்ட பஞ்சாமியிடம், டாக்டர் ஆறுதலாகக் கூறியது:

“நவீன பல் சிகிச்சை முறையில், தனித்தனியாக பற்களை எகுறுக் குழிகளில் பதித்து ஸ்க்ரூ செய்துவிடும் மேல் நாட்டு முறை புதியதாக வந்திருப்பதாகவும், அவ்வாறுசெய்து கொண்டு விட்டால், தற்போது ஏற்பட்டது போன்ற விபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், பணம் தான் ஒரு முக்கால் லட்சம் மட்டும் செலவாகும்” என்றார்.





இதைக்கேட்டதும் தன் ’பல்’ஸ் பிரச்சனை இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் ’பல்ஸ்’ வீக்காகி பஞ்சாமி மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.

oooooOooooo


பின் குறிப்பு:

பஞ்சாமி மயங்கி மூர்ச்சையாய் விழுந்த அதே நாள் இரவு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து டி.வி. சேனல்களிலும் கீழ்க்கண்ட ஒரு பரபரப்புச் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது:

”சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்தவரும், பல்லவராயன் என்ற பெயரில் பல்லாண்டுகளாக பல் டாக்டர் ஆக பணியாற்றி வருபவருமான ஒருவர், போலி டாக்டர் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாலும், அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், அவர் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளதாலும், பல்லவன் பஸ்ஸில், பல்பொருள் அங்காடிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே பயணம் செய்யும் போது, போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார்.”


நம் பஞ்சாமிக்கு பல் வைத்தியம் செய்தவர் இதே பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயன் தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன?      நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் தானே !

எனவே நண்பர்களே!

போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். 

பணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா?

பணம் இன்று போகும் !  
நாளை வரும் !!

[ பணம் இன்று போகும் சரி; நாளை எங்கிருந்து வரும்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. அப்படித்தான் எல்லோரும் ரொம்ப வருஷமாகச் சொல்லித் திரிகிறார்கள், அதனால் தான் நானும் சொன்னேன். .........  அப்போ வரட்டுமா ..........  Bye Bye ...... vgk ]


இக்கதைக்கான என் விமரிசனம் இதோ....


முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள




திருமதி  



 உஷா ஸ்ரீகுமார் 



அவர்களின் விமர்சனம் இதோ:
 
நகைச்சுவை எழுத்து  என்பது மிகவும் கனமான ஒரு விஷயம்...அதை எழுதுபவருக்கு!!!

அதனால் தான் , "Humor is serious business!" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...

நான் கொடுக்கப்போவது ஒரு முழு நீள நகைச்சுவை விருந்து...

நீங்கள் சிரித்து, சிரித்து  உங்கள் பல் சுளுக்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல  என்று வார்னிங் கொடுக்காத குறையாக கதைத்தலைப்பிலிருந்தே நம்மை மூச்சுக்கு மூன்று முதல் முந்நூறு தடவை சிரிக்க வைப்பதையே இலட்சியமாகக்  கொண்டு இந்த முழு நீள  நகைச்சுவைக் கதையை எழுதிய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்...

"கல் எல்லாம் மாணிக்கக் கல்  ஆகுமா..." என்ற பாடலைத்  தழுவி ஆசிரியர்  திரு.வை.கோ. அவர்கள்  சிரிப்புத்  தேன்   தடவிய "பல்லெல்லாம்  பஞ்சாமியின்  பல்லாகுமா..." என்ற தலைப்புடன் ஆரம்பிக்கிறார்,  இந்தசிறப்பான  சிரிப்பு விருந்தை!

இந்த விருந்தில் சுவையை அதிகரிக்க அவர் பயன் படுத்தும்   யுக்திகள்....

#சிரிப்பை வரவழைக்கும் உபமான உபமேயங்களின் தாராள உபயோகங்கள்...

#கடுகு போன்ற விஷயத்தை இமாலயப்பிரச்சனையாக விஸ்வரூபமெடுக்க வைத்து உற்சாகப்பட்டாசு கொளுத்திப்போடுதல் !

#நுணுக்கமான குபீர் சிரிப்பு உத்தரவாதம் தரும் வர்ணனைகள்...

#அட்டகாசமான ஆண்டி கிளைமாக்ஸ் ....


ஆதிகாலத்திலிருந்து இன்று வரை மனிதன் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம்...
"அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் ஒரு சேரப் பொருந்திய ஒரு ஆணோ பெண்ணோ இன்னும் பிறக்கவில்லை!" என்பதே...

ஒருவர் பார்க்க ராஜா மாதிரி இருந்தால் அவர் குட்டை!
ஒருத்தி நல்ல நிறம் என்றால் அவள் கூந்தல்  எலிவால்!
ஒருவன் ஆறடி என்றால் அவன் குரல் "கீச்..கீச் .." என்று இருக்கும்!
ஒருவன் முகத்தில் அவ்வளவு தேஜஸ்... கண்களை நன்றாகப் பார்த்தால் ஒன்று கிழக்கே பார்த்தால் ஒன்று மேற்குப்பக்கம் பார்க்கும் !

என்ன செய்வது !

பிரம்மன் கார்ட்டூன் வரையும் மூடில் இருக்கும் போது  நம்மில் சிலரைப் படைத்துவிடுகிறான்!

அதிலும் இந்தப் பற்கள் விஷயத்தில் பிரம்மன் அவ்வப்போது ரொம்பவுமே விளையாடிவிடுவான்....

ஒருவேளை பல் மருத்துவர்கள் ஒரு குழுவாக பிரம்மனை சந்தித்து தனியே சம்திங் கொடுத்து கவனித்துக்கொண்டார்களோ? அதனால் தான் அவன் இந்தப் பல்லு மேட்டரில் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாகவே கார்ட்டூன் போட்டு விடுகிறாரோ?

நம் ஹீரோ பஞ்சாமி கேஸ்ஸில்  நடந்த மாதிரி?

சிலருக்கு தெத்துப்பல்லு... சிலருக்கு துருவிப்பல்லு... சிலருக்குக் காவிப்பல்லு சிலருக்குக்கோணல் பல்லு.... சிலருக்கு சொத்தைப்பல்லு... சிலருக்கு சிங்கப்பல்லு...ஆகக்கூடி கே .ஆர் .விஜயா போல முத்துப்பல் அழகு மிக சிலருக்குதான் வாய்க்கிறது!

நம்ம ஹீரோ சாருக்கு இதெல்லாம் விட ஒரு படி மேல்! துருவி + காரை + வாய் நாற்றம்!

நம்ம ஊருப் பெண்ணானதால் அவள்  பஞ்சாமியின்  வாய் நாற்றத்தை காரணம் காட்டி விவாகரத்துக் கேட்கவில்லை!

இத்தனை பிரச்சனைகளையும் வாய்க்குள் வைத்த  நம் ஹீரோ போவது ஒரு பல் வைத்தியரிடம்!

சாதாரணமாகவே பலருக்கும் பல் வைத்தியரின் கிளினிக்குக்கு  போவது என்றால் ஈரல் கொலை நடுங்கும்!

(எனக்கு  அது யமலோகத்து சித்திரவதைக்கூடத்தை நினைவு படுத்தும்...)

அதுவும் அவர் நாற்காலிகள், கிரைண்டர் சத்தம், கொறடு, ஊசி, சுத்தியல், சுரண்டும் கருவிகள்... எல்லாமே அச்சத்தை உண்டாக்கும்!

பல் டாக்டரிடம் ஒரே ஒரு நாளில் வைத்தியம் முடிந்ததாக சரித்திரமே இல்லை!

நம்ம ஹீரோவும் காறை எடுக்கப் போய் மொத்தப் பற்களையும் சாப்ஜாடாகத்தட்டி எடுத்து முடித்து மங்களம் பாடி முடித்து புது பல்செட் வைத்துக்கொண்டு திரும்பும் நிலையில் பரிதாபமாக நிற்க நமக்கு பரிதாபமும், சிரிப்பும் மாறி மாறி வருகிறது!

பொய்ப் பல் வைத்துக்கொண்டவர்கள் பலர் படும் அவஸ்தைகளையும், உணர்வுகளும் அழகாக வர்ணிக்கும் ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்!

கடைசியில் வந்த ஆண்டி கிளைமாக்ஸ் அருமை....

அப்படியே ..

போலி டாக்டர்களை அடையாளம் காண்பது எப்படி என்று ஆசிரியர் சிரிக்க, சிரிக்க சொல்லிக்கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்!

எப்படியோ.... புதுப்பல் வைத்துக்கொண்ட பஞ்சாமியின் வாழ்வில் வசந்தம் மலர்ந்தால் சரி...





மூன்றாம் பரிசுக்கு உரிய விமரிசனமாக என் விமரிசனத்தை தேர்ந்தெடுத்த நடுவருக்கும் ,வாய்ப்பளித்த கதாசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...


Saturday, 28 June 2014

"வடிகாலில்" மூன்றாம் பரிசை வென்றேன் ....




திரு வை.கோபாலகிருஷ்ணனின்  ப்ளாக்கில் நடைபெறும் சிறுகதை விமரிசனப்போட்டி பற்றி அறியாத தமிழ்ப்  பதிவர்களே  இருக்க முடியாது...

நேரமும் ,அவகாசமும் கிடைக்கும் போதெல்லாம் நான் ஆவலுடன் கலந்துகொள்ளும் இப்போட்டியில் ஒரு சில முறை பரிசுகள் வென்று இருந்தாலும் இம்முறை "வடிகால்"   சிறுகதைக்கு பலபல நெருக்கடிகளுக்கு இடையே நான் அவசரத்தில் எழுதிய விமரிசனம் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது  மகிழ்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அருமையான இக்கதைக்கு விமரிசனம் எழுத வாய்ப்பு  அளித்த திரு v .g .k . அவர்களுக்கும் ,என் விமரிசனம் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...


போட்டிக்கான கதை இதோ....







வ டி கா ல்

[சிறுகதைத்தொடர்]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


அந்த மனிதருடன் எனக்கு அதிகமாகப் பழக்கமோ அறிமுகமோ இல்லை. ஆனால் நான் அவரை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். எழுத்தாளனாகிய நான் இரவு வெகு நேரம் விழித்திருந்து அமைதியாக எதையாவது பற்றி சிந்தித்து, மனதில் தோன்றுவதை கணினியில் பதிவு செய்துகொண்டோ அல்லது ஏதாவது நூல்களைப் படித்துக்கொண்டோ இருப்பது என் வழக்கம். 



அன்றும் அப்படித்தான். இரவு 11 மணிக்கு மேல் இருக்கும். நான் என் கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தேன்.  கதவின் வெளிப்புறம் யாரோ நிற்பதுபோல மூடியிருந்த ஜன்னல் கண்ணாடிகளில் நிழல் தெரிந்தது. பிறகு அழைப்பு மணியும் ஒலித்தது. கதவைத்திறந்தேன். 

அதே மனிதர். நல்ல உயரம். சிவந்த நிறம். வயது ஒரு 80க்கு மேல் இருக்கலாம். முகத்தில் பல்வேறு அனுபவச்சுருக்கங்கள். வெள்ளை வேட்டி, வெள்ளையில் முழுக்கை கதர் சட்டை. கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

“வாங்கோ சார்” அமர இருக்கை அளித்தேன். குடிக்க ஃப்ளாஸ்கிலிருந்து மிதமான சூட்டில் சுடுதண்ணீர் அளித்தேன். நன்றியுடன் கூடிய ஒருவித அசட்டுச்சிரிப்புடன் வாங்கிக் குடித்தார்.

“கம்ப்யூட்டரில் பிஸியாக ஏதோ வேலை பார்க்கிறீர்கள் போலிருக்கு; தொந்தரவு செய்கிறேனா?” என்றார்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை; சொல்லுங்கோ சார்” என்றேன்.

“உங்கள் சிறுகதைத்தொகுப்பு நூல்களைப்படித்தேன். நன்றாக இருந்தன. அதுதான் நேரில் பார்த்து சொல்லிவிட்டுப்போகலாம் என்று வந்தேன்”என்றார்.

“நான் எழுதிய கதைகளையா? எங்கு படித்தீர்கள்?”

“சிறுகதைத் தொகுப்புகளாக நீங்கள் வெளியிட்ட இரண்டு புத்தகங்கள் என் மாப்பிள்ளையிடம் கொடுத்திருந்தீர்களே!” என்றார். 

இவர் யார் என்றோ, இவர் மாப்பிள்ளை யார் என்றோ எனக்கு ஒன்றுமே புரியவில்லை. புரியாதபடி அவரை ஒரு மாதிரியாகப்பார்த்தேன்.

“கனரா பேங்க் கணபதியோட மாமனார் சார், நான்; சிண்டிகேட் பேங்க் சிங்காரி என்னோட பொண்ணு தான்” என்றார்.

அந்தக்கனரா பேங்க் கணபதியும், சிண்டிகேட் பேங்க் சிங்காரியும் யாராக இருக்கும்? என்று தொடர்ந்து குழம்பினேன் நான்.

என்னைப் பரிதாபமாகப் பார்த்த அவர் ”3C - மூன்றாவது மாடி, மூன்றாவது வீடு” என்றார்.

“ஓஹோ, அப்படியா, ரொம்ப சந்தோஷம்” என்றேன் நான் ஏதோ மிகவும் தெரிந்தது போல.

எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பில் மொத்தம் 4 மாடிகள். ஒவ்வொரு தளத்துக்கு 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள்.  எனக்கு என் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன், மனைவி, 2 குழந்தைகள் என, நான்கு பேர்களின் முகங்கள் என் மனதிற்குப்பதியவே நான்கு வருடங்கள் ஆனது. 

இன்றும் அவர்களில் யாருடைய பெயர்களும் எனக்குத்தெரியாது. 

ஒருமுறை அந்தப்பக்கத்து வீட்டுக்கு வந்த தபால் தவறுதலாக எங்கள் வீட்டில் போடப்பட்டிருந்தது. அதில் வெங்கடேசனோ, வெங்கடராமனோ, வெங்கடரமணியோ, வெங்கடசுப்ரமனியனோ, வெங்கட்ராகவனோ ஏதோ ஒன்று போட்டிருந்ததாக ஞாபகம். 

எங்களுடைய சொந்தக்காரர்களின் பெயர்களே எனக்கு அடிக்கடி குழம்பிப்போகும். என்னுடைய மனைவியை அவள் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பலவித செல்லப்பெயர்களில் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக அழைக்கின்றனர். 

ஸ்கூல் சர்டிபிகேட்டில் முற்றிலும் வேறு ஒரு பெயர் அவளுக்கு. அக்கம்பக்கத்தவர் அழைப்பது “ராமு அம்மா” என்ற பெயரில். என் வீட்டுப்பால்காரர் அழைப்பது “கோடி வீட்டு அம்மா” என்ற பெயரில். [கோடீஸ்வரி அம்மா இல்லை, என் வீடு அமைந்திருப்பது அடுக்குமாடி 2 வது தளத்தில் ஒரு கடைசி வீடு, அதனால் கோடி வீடு]. 

நான் அவளை ஆசையாக அழைப்பது ஒரு தனி செல்லமான பெயரில்; கோபம் வரும்போது ஒரு கோணலான பெயரில்; அதெல்லாம் எதற்காக அனாவசியமாக வெளியே சொல்ல வேண்டும்? விட்டு விடலாம்.

இவர் சொல்லும் கணபதியோ அல்லது சிங்காரியோ என் வீட்டுக்காரிக்கோ அல்லது என் பையன்களுக்கோ ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவர்கள் எல்லோரும் தற்சமயம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். அவர்களில் யாரையாவது எழுப்பி அவர்களையும் குழப்ப எனக்கு மனம் இடம் தரவில்லை. அவர்களில் யாராவது ஒருவர் தான், நான் எழுதி சமீபத்தில் வெளியிட்ட அந்தக்கதை புத்தகங்களை மூணாவது மாடி மூணாவது வீட்டுக்கு படிப்பதற்காகக் கொடுத்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மூன்றாவது மாடியில் ஒரு கணவன் மனைவி இருவரும் ஏதோ பேங்கில் வேலை பார்ப்பதாக யாரோ சொன்னது போல எனக்குள்ளும் ஒரு சொப்பன ஞாபகம் இப்போது வருகிறது. அவர்களைத்தேடி வந்த வெளிநபர்கள் யாராவது கூட, என்னிடம் அதுபோல ஒரு வேளை, என்றைக்காவது விசாரித்திருக்கலாம். நான் வழக்கம் போல, ”எனக்குத் தெரியவில்லை; வேறு யாரிடமாவது, வேறு எந்த வீட்டிலாவது விசாரித்துப்பாருங்கள்” என்று கூட சொல்லியிருக்கலாம். 

என்னைப்பொறுத்தவரை இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பதே மதியம் என் ஞாபகத்திற்கு வருவது இல்லை. எனக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத விஷயங்கள் எல்லாவற்றிலும், நான் இப்படித்தான். 

ஆனால் என் நண்பர்களில் சிலர், நான் லைட் நீலக்கலர் ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டை, டார்க் ப்ரெளன் கலர் பேண்டில் டக் செய்துகொண்டு, பூட்ஸ் காலுடன், மஞ்சள்கலர் ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டியபடி, ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்கு, ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் 27B பஸ்ஸில் ஓடிவந்து ஏறியதாக, செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணிக்கு, ஆபீஸில் எங்கேயாவது என்னைச் சந்திக்கும்போது கரெக்டாகச் சொல்லி விசாரிப்பார்கள்.

எனக்கே எங்கே போனேன், எதற்குப்போனேன், என்றைக்குப்போனேன், என்ன டிரஸ்ஸில் போனேன் என்பது சுத்தமாக மறந்திருக்கும்.

சரி...சரி, அதையெல்லாம் விட்டுவிட்டு, இப்போது இந்தப்பெரியவரின் கதைக்குப் போவோமா?




பகுதி-2


”சரி சார், இந்த இரவு நேரத்தில் என்ன விஷயமாக என்னைப்பார்க்க வந்தீர்கள்?” என்றேன்.



“சும்மாத்தான். உங்கள் கதைப் புத்தகங்களைப்படித்த நான் உங்களை நேரில் சந்திக்கணும் என்று பல நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்றும் எனக்குத்தூக்கம் வரவில்லை. உங்கள் வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது. உங்களையும் பார்த்து அறிமுகம் செய்துகொண்டு, உங்கள் கதைப்புத்தகங்களைப் பார்த்த விஷயத்தையும் கூறிவிட்டு, என்னைப்பற்றியும் (என் கதையையும்) சுருக்கமாகச் சொல்லி விட்டுப்போகலாமோ என்று தான் வந்தேன்”என்றார்.


அவருக்கு ஏழு பெண்கள், நான்கு பையன்களாம். இது தவிர நாலைந்து குழந்தைகள் பிறந்து அற்ப ஆயுளுடன் போய்ச்சேர்ந்து விட்டதாம். வயது எண்பது முடிந்து விட்டதாம். ஒரு பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்று இருபது ஆண்டுகள் ஆகிறதாம். குழந்தைகள் பதினோறு பேர்களுக்கும் திருமணம் ஆகி பேரன் பேத்திகள் பிறந்து பல ஊர்களில் உள்ளனராம்.  

இரண்டு பையன்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலையாம். மற்ற இரண்டு பையன்களுக்கும் டெல்லியில் வேலையாம். பையன்கள் எல்லோரும் நல்லபடியாகவே இவரைப் பார்த்துக் கொள்கிறார்களாம். இவருக்கும் பென்ஷன் பணம் வருகிறதாம். பையன்கள் இவரை ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என்பார்களாம். எங்கு போனாலும் விமானத்தில் போய் வாருங்கள் என்பார்களாம். 

டெல்லியில் உள்ள இரு மகன்கள், மேலும் இந்தியாவின் ஏழு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஏழு பெண்கள் வீடுகளுக்கும், மாதாமாதம் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தவாறு சென்று ஒரு மாதம் தங்கி வருவது வழக்கமாம். 

இந்தமுறை சிங்காரி வீட்டுக்கு வந்து 20 நாட்கள் ஆகப்போகிறதாம். இன்னும் ஒரு வாரமோ பத்து நாட்களோ கிளம்பி விடுவாராம். அவரின் மனைவி இறந்து போய் மூன்று வருடங்கள் முடியப்போகிறதாம். 

என்னைப்பற்றியும் ஓரளவு விசாரித்துத் தெரிந்து கொண்டார். என்னை விட அவர் 16 வருடங்கள் சீனியர் என்று கணக்குப்போட்டுக்கொண்டேன். நான் ரிடயர்ட் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. அவர் ரிடயர்ட் ஆகி 20 வருடங்கள் ஆகின்றன.  

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த பெரியவர் என நினைத்துக்கொண்டேன். இன்று ஓரிரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ, வளர்க்கவோ. ஆளாக்கவோ திண்டாட்டமாக இருக்கும் நிலமையில், இவருக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து, அவர்களில் பதினோறு பேர்களை நன்கு வளர்த்து,  படிக்க வைத்து, நல்ல நிலமைக்குக் கொண்டு வந்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, எவ்வளவு ஒரு பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை அவருக்கு இருக்க வேண்டும் என வியந்து போனேன். அவருக்கு கோயில் கட்டிக் கும்பிடவேண்டும் போலத்தோன்றியது எனக்கு. 

அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததில், ஒருசில விஷயங்களை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது என்னைப் பொறுத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொறுத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன். ஏனென்றால் பாவம், அவருக்கு இப்போது மனைவி இல்லை. 

விருப்பம் உண்டோ இல்லையோ, மனைவி என்று ஒருத்தி இருந்தால், ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.

மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, அதுவும் வயதான காலத்தில் ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அவள் ஒருத்தி இருந்தால் தானே இவனுக்கு, இவனுடைய எண்ணங்களுக்கு, இவனுடைய தேவைகளுக்கு, ஒரு வடிகாலாக இருந்து செயல்பட முடியும். அவள் இல்லாத நிலையில் வடிகால் தேடி இவர் வெளியே பலரிடம் செல்ல வேண்டியுள்ளது.

வீட்டில் இவரின் பையன்களோ, மருமகள்களோ, மாப்பிள்ளைகளோ, இவர் பெற்ற பெண்களோ, பேரன்களோ, பேத்திகளோ பலரும் இருக்கலாம். இவரும் பேசலாம் அல்லது பேச நினைக்கலாம். அவர்கள் நின்று இவர் பேச்சைக்கேட்க வேண்டுமே! அதற்கு அவர்களுக்கு விருப்பமும், பொறுமையும், நேர அவகாசமும் இருக்க வேண்டுமே!

அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச்செல்லும் சூழ்நிலைகள். களைப்புடன் வீட்டுக்கு வந்தால் சமையல், சாப்பாடு, ஷாப்பிங் போவது, டி.வி. நிகழ்ச்சிகள், கம்ப்யூட்டர், செய்தித்தாள், வார மாத இதழ்கள் படிப்பது, மறுநாள் சீக்கரம் எழுந்து ஆபீஸ் செல்ல வேண்டி, சீக்கரமாக படுக்கப்போவது என்று ஒவ்வொரு நாளும் கழியும். யாருக்கும் மற்ற யாரிடமும் எதுவும் பேச நேரமிருக்காது. 

குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போவது, ட்யூஷன் போவது, வீட்டுப்பாடம் செய்வது, நடுநடுவே டி.வி. நிகழ்ச்சிகள், கார்டூன் நெட்வொர்க், வீடியோ கேம்ஸ் என்று அவர்களுக்கும் நேரம் சரியாக இருக்கும். தாத்தாவைப் பார்க்கவோ அவருடன் பேசவோ விரும்ப மாட்டார்கள்.

அந்தப்பெரியவருக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லையென்று அவர் புலம்பினாலோ, இருமினாலோ, தும்மினாலோ இவர்களின் எரிச்சலும் கோபமும் அதிகமாகும். 

இத்தகைய சூழ்நிலைகளில் அந்தப்பெரியவர் யாருடன் மனம் விட்டுப்பேச முடியும்?  வந்த பெரியவரின் பேச்சுக்களிலிருந்து என்னால் இவற்றையெல்லாம் அனுமானிக்க முடிந்தது.  ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ! அவர்மேல் இரக்கம் கொண்டு, அவருடன் மிகவும் கனிவாகவே பேசினேன்.


பகுதி-3

”தனிமையை இனிமையாகக் கழிக்க புத்தகம் போன்ற ஒரு சிறந்த நண்பன் கிடையாது, சார்; மேலும் ஒருசில நல்ல புத்தகங்கள் தங்களுக்கு பொழுது போக்காக படிப்பதற்கு தரட்டுமா” என்றும் கேட்டேன்.




“நீங்கள் எழுதி சமீபத்தில் வெளியிட்டதாகச் சொல்லி என் மாப்பிள்ளை கொடுத்த இரண்டு புத்தகங்களிலேயே, இதுவரை நான் எந்தக்கதையையுமே படிக்கவில்லை” என்றார்.

இதைக்கேட்டதும் சற்றே அதிர்ச்சியடைந்த நான், ”என் கதைப் புத்தகங்களைப் படித்ததாகவும், அதனால் தான் என்னை நேரில் சந்திக்க வந்ததாகவும் சொன்னீர்களே” என்றேன்.  

தங்கள் புத்தகங்கள் இரண்டிலும், பின்புற அட்டையில் “ஆசிரியரைப்பற்றி” என்ற குறிப்புகள் இருந்தன. தங்கள் புகைப்படமும், முழு விலாசமும் இருந்தது. அவற்றை மட்டும் தான் படித்தேன்; உடனே உங்களை சந்திக்க ஓடோடி வந்தேன்” என்றார்.

இதைக்கேட்டதும், பொதுவாக ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் எரிச்சலே எனக்கும் ஏற்பட்டது.

அவரைப் பொறுத்தவரை அந்தப்புத்தகத்தின் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களே போதுமானதாகும். அவர் சந்திப்பதற்கும், அளவளாவுவதற்கும்.  மனம் திறந்து மனக்குமறல்களைக் கொட்டவும் ஒரு வடிகால் வேண்டும், அவருடைய தேவை அவ்வளவுதான். 

புத்தக அட்டையை மட்டும் படித்துவிட்டு இன்று என்னையே வடிகால் ஆக்கிக்கொண்டுள்ளார் என்பது, மெதுவாக எனக்கும் புரிய வந்தது.

“அப்புறம் என்ன சார், எதற்கும் கவலையே படாதீர்கள், ஆண்டவன் இருக்கிறார்” என்றேன் வாயில் வெளிப்பட்ட கொட்டாவியை கை விரல்களால் சொடுக்கியபடியே.

அவரும் புறப்படத் தயாரானார். 

“ஆண்டவனைத்தான் நம்பியுள்ளேன். தினமும் ஒரு ரவுண்ட் இங்கு அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக்கோயில்களுக்கும் போய் வந்து விடுவேன்” என்றவர், “இன்று ராத்திரி ரொம்ப நேரம் ஆகிவிட்டது; நான் மேலும் ஒரு வாரமோ பத்து நாட்களோ தான் இந்த ஊரில் இருப்பேன்; நீங்க ஃப்ரீயாக இருக்கும்போது மறக்காமல் என்னைக்கூப்பிடுங்கோ; இன்று பேச விட்டுப்போன விஷயங்களையெல்லாம் பேசிக்கலாம்”என்றார், தன் காலில் செருப்பை அணிந்தவாறே.

“பார்த்து ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்” என்றேன்.

‘ஓ.கே., சார், குட் நைட், ஸீ... யூ” என்று சொல்லிவிட்டு பிரிந்து செல்லவே மனம் இல்லாதவராக, ஒருவழியாக, விடை பெற்றுச்சென்று விட்டார்.

நேராக மாடிப்படிகளில் ஏறி தன் [மூன்றாவது மாடி மூன்றாவது வீடு] வீட்டுக்குச் செல்லாமல், மாடிப்படிகளில் இறங்கி கீழே போவதை கவனித்தேன். 




விளக்கை அணைத்துவிட்டு, என் வீட்டு பால்கனி வழியாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாயில் பக்கம் நோக்கினேன். இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்த வாட்ச்மேனை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார். 




பிறகு அவனையும் அழைத்துக்கொண்டு, அவர் தெருவில் எங்கோ நடந்து செல்வதையும் கவனித்தேன்.

மறுநாள் காலையில் வாட்ச்மேனிடம் இதுபற்றி விசாரித்தேன்.

“அந்த வயதானவருக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை, சார்; தினமும் நள்ளிரவு 12 மணிக்கு என்னை வந்து எழுப்புவார். தெருக்கோடி டீக்கடைக்கு அழைத்துச்செல்வார். டீ வாங்கித்தருவார். தானும் டீ குடிப்பார். பிறகு என்னுடன் விடியவிடிய பேசிக்கொண்டே இருப்பார். கேட்டால் வாட்ச்மேன் வேலை பார்க்கும் நீ இரவில் இப்படித்தூங்கி வழியலாமா என்பார்” என்றான்.

“அந்தப்பெரியவர் சொல்லுவதும் நியாயம் தானே வாட்ச்மேன், இரவில் நம் வீடுகளைப் பாதுகாக்க வேண்டிய நீ தூங்கலாமா” என்றேன், நானும்.

”பெரும்பாலும் முழிச்சுகிட்டு தான் சார் இருப்பேன், நடு ராத்திரி லேசாக்கண்ணைச் சொக்க ஆரம்பிக்கும், அப்போது தான் சற்றே கீழே சாய்வேன்.  அப்போ பார்த்து தான் கரெக்டா இந்தப்பெரியவர் வந்து என்னைத் தட்டி எழுப்பிவிடுவார்; 

அவருக்கு ஏதேதோ மனவருத்தங்கள் என்று நான் நினைக்கிறேன், சார்; தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும், தான் பேங்கில் வேலை பார்த்தது பற்றியும், தான் சென்று வந்துள்ள பல ஊர்களைப்பற்றியும், விலைவாசிகள் பற்றியும், அரசியல் கட்சிகள் பற்றியும், ஊழல், லஞ்சலாவண்யங்கள் பற்றியும், ஏதேதோ கதைகள் விடியவிடிய சொல்லிக்கொண்டு தானும் தூங்காமல் என்னையும் தூங்க விடாமல் செய்துவிடுவார், சார்” என்றான்.

“பிறகு எப்போது தான் வீட்டுக்குப்போவார்? வீட்டில் உள்ளவர்கள் இவரைத் தேட மாட்டார்களா?” என்றேன்.


பகுதி-4

”படிச்சவரு, வயசானவரு, ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தங்க வந்துள்ள விருந்தாளி; காத்தாட வெட்ட வெளியிலே படுக்க விரும்புறாரு என்று அவருக்கு மொட்டை மாடியிலே கட்டில் போட்டு; பெட்ஷீட், தலையணி, போர்வை, குடிக்க வெந்நீர் பாத்திரம், டார்ச் லைட்டு எல்லாம் கொடுத்திருக்கிறார், அவருடைய மாப்பிள்ளை;

பாத்ரூம் போகணும் என்றாலும், குளிராக இருக்கு வீட்டுக்குள் வந்து படுக்கணும் என்றாலும் இருக்கட்டும், என்று வீட்டின் டூப்ளிகேட் சாவியையும் ஏற்பாடாகக் கொடுத்திருக்கிறாங்க. அவங்களைப் பொறுத்தவரை இவர் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு தூங்குவதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றவன் தொடர்ந்து பேசினான்.

“விடியற்காலம் பால்காரரோ, நியூஸ் பேப்பர்காரரோ வந்தவுடன், அவர்களுக்கு குட்மார்னிங் சொல்லிக்கொண்டே, அவர்களுடன் ஏதோ பேசிக்கொண்டே கிளம்பி விடுவார்” என்றான்.

“இதைப்பற்றி, இவர் இரவெல்லாம் தூங்குவது இல்லை என்பது பற்றி நீ அவர்கள் வீட்டில் சொல்லக்கூடாதோ” என்றேன்.
“சாமீ, நீங்க அதுபோல ஏதாவது செய்து காரியத்தை கெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அவர் பகலில் தூங்குபவரோ என்னவோ; ஆனால் அவரு ரொம்ப நல்லவரு. கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பவரு.  டீ, காஃபி, டிபன் எல்லாம் அப்பப்போ வாங்கித்தருகிறாரு; 

அது மட்டுமில்லை. அவர் சொல்லும் கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் போதும். அந்த சந்தோஷத்திலேயே, நூறு இருநூறு செலவுக்கு கைமாத்தாகக் கேட்டாலும் தருகிறாரு. திரும்பிக் கேட்பதே இல்லை; 

நானே அவருக்கு இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரணும். ரொம்ப தாராள மனஸு அவருக்கு. நம்ம தலைவரு எம்.ஜி.ஆர். மாதிரி கொடை வள்ளல் அவரு. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!” என்றான்.

அவன் சொல்வதும் எனக்கு நியாயமாகவே பட்டது.

மனைவியை இழந்த அவருக்கு வயதான காலத்தில் பேச்சுத்துணையாக ஒரு வடிகால் தேவைப்படுகிறதே! அந்த வடிகாலாக இருந்து, அவருக்கு இந்த வாட்ச்மேனும் ஏதோ ஒரு விதத்தில் உதவிக்கொண்டு தானே இருந்து வருகிறான்!

இவரைப்போல வசதி படைத்தவர்களும், வடிகால் வேண்டுவோரும், பேசாமல் தற்சமயம், ஆங்காங்கே, டி.வி., கட்டில், தனி அறைகள், ஏ.ஸி. போன்ற அனைத்து வசதிகளும் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்து, மாதாமாதம் பணம் கட்டி, தங்கி விடுவதே நல்லது என்று எனக்குத் தோன்றியது. 

முதியோர் இல்லங்களில் சேர்வதால் அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும். பேச்சுத்துணைக்கும் பொழுதுபோக்கிற்கும் இவர்கள் வயதை ஒத்த பெரியோர்கள் இருப்பார்கள். பணம் தருவதால் ஓரளவு பொறுப்பாகவும் கவனித்துக் கொள்வார்கள். 

தினமுமோ அல்லது வாரம் ஒருமுறையோ மருத்துவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருகை தருவதால், உடல்நிலை சரியில்லாவிட்டாலும், உடனுக்குடன் கவனிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, தேவையான சிகிச்சை தரப்பட்டு, அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் வழியுண்டு.

ஊரார் ஆயிரம் சொல்லுவார்கள். பெற்ற குழந்தைகள் பொறுப்பாக கவனிக்கவில்லையென்று. இன்றுள்ள அவசர உலகத்தில், பணம் ஈட்டுவது மட்டுமே ஒரே குறியாக ஆணும் பெண்ணும் அலைந்து திரிய வேண்டிய அவஸ்தைகளுக்கிடையில், யாரும் யாரையும் ஓரளவுக்குமேல் கவனிக்க முடியாத சூழ்நிலையில், இத்தகைய முதியோர் பிரச்சனைகளுக்கும், நடைமுறைக்கு சாத்தியமான, ஒரு நல்ல வடிகால் (தீர்வு) வேண்டுமே!

எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இது போன்ற வயதானவர்கள் தனிமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும், கோளாறுகளையும் ஓரளவுக்கு என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தங்களையும் மதித்து யாராவது பேசமாட்டார்களா, தங்கள் மனவருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டுவிடுகிறது.

வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி விடுகிறார்கள்.

அவரைப்பற்றி உணர்ந்து கொண்ட எனக்கு ‘வடிகால்’ என்ற தலைப்பில் அவரைப்பற்றியே இந்தக்கதையை எழுதி சமுதாயத்திற்கு, இவர்களின் உளவியல் பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியதே, இந்தக்கதை பிறந்ததன் காரணமாகும்.

ஆனால் ஒன்று; எங்கள் வாட்ச்மேன் அவரைப்பற்றிச் சொல்வதிலிருந்து, அந்த மனிதரிடம் நான் மறுபடியும் மாட்டாமல் தப்பிக்கணும் என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன்.   

``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````இக்கதைக்கான என் விமரிசனம்...





VGK 22 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’வடிகால்’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 

முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள




திருமதி


 உஷா ஸ்ரீகுமார்  


அவர்களின் விமர்சனம் இதோ:




இராக்கோழியாக நீண்ட நேரம் விழித்துக்கொண்டு படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருக்கும் நம் கதாசிரியக்கதை நாயகரைக் காண அகாலத்தில் வரும் ஒரு விருந்தினர் பற்றிய கதை.

வாழ்க்கையின் கடைசி படிகளில் நின்று கொண்டிருக்கும் அந்த முதியவர் போன்ற ஒருவரை நாம் எங்காவது கட்டாயம் சந்தித்திருப்போம்...."அறுவை", "ரம்பம்", "கடி" என்று  அவருக்கு மனதுக்குள் நாமகரணம் செய்து கரித்துக்கொட்டியிருப்போம்!

இந்தக்கதாபாத்திரம்  மூலம் ஆசிரியர், நம் சமுதாயத்தில் வாழும் பல சாரார்களைக்  கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்...

முதியோர்  தேவைகள் பல பல...

சிலருக்கு அவசியம் நல்ல கூரை...

சிலரின் தேவை வைத்தியம்...

சிலர் ஏங்குவது வாய்க்கு ருசியான சோற்றுக்கு ...

ஆனால் பலரும் ஏங்குவது தாங்கள்  வாய் விட்டுப்பேசுவதை  காது கொடுத்துக் கேட்க ஒரு நபரைத்தான்...

நம் கதை நாயகனோ நம்மில் பலரின் பிரதிபிம்பம்...

தான் யார்... என்ன சாப்பிட்டோம்... என்ன பேசினோம்... என்றே நினைவு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவசரவாழ்க்கை வாழ்பவர்...

அக்கம் பக்கத்தினர் அவருக்கு பெயரில்லாத வெறும் முகங்கள்...

தன் அவசர வாழ்கையில் மனைவி குழந்தைகள் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளவே கஷ்டப்படும் ஒரு பிஸியான ஜீவன்...

இந்த எழுத்தாளர்,  இரவு பதினோரு  மணிக்கு கதவைத்தட்டி உள்ளே வந்து,  அவர் பொறுமையை சோதித்து பொழுதை அபகரித்தாலும்,  அதை அவர் பொறுமையாக சகித்துக்கொண்டு அவர் க்ஷேம தாபங்களைக் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு காரணம், அந்தப் பெரியவர் இவர் எழுதிய இரண்டு புத்தகங்களைப் பார்த்துவிட்டு இவரைப் பார்க்க வந்தவர் என்பது தான்...(எழுத்தாளருக்கே உரிய குணம்!)

அந்தப்புத்தகத்தின் முன் / பின் அட்டைகளை மட்டுமே படித்தவர் என்று தெரியும் பொழுது எழுத்தாளருக்கு வரும் ஊமைக்கோபம்  ரசிக்கத்தக்கதாக இருக்கிறது...

பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்ந்து, பெற்றதில் சிலவற்றையும், மனைவியையும் பறிகொடுத்து விட்டு, மீதமுள்ள குழந்தைகளிடம் (வீட்டுக்கு சில நாட்கள்) கழிக்கும் இந்த முதியவருக்குத்  தேவை... மனதில் உள்ளதெல்லாம் பேசித்தீர்க்க ஒருவர்... அந்த வடிகாலுக்காக அவர் பழக்கம் இல்லாதவரையும் பேசப்பிடித்துக்கொள்வது  அந்த வயசுக்கே உள்ள நிதர்சன குணம்...

வாழ்க்கையில் புதிய குறிக்கோள் இல்லை, தானே நின்று நடத்த வேண்டிய கடமைகள் இல்லை, சுமந்த பாரங்களை இறக்கிவைத்தாயிற்று... வண்டிக்காக காத்துக்கொண்டிருக்கும் மீதி நாட்களில் அவருக்கு (ஆரோக்கியமாக இருக்கும் வரை) தேவை "அசை போடுதல்" வாயாரப்பேசுதல்... அதை இவரை உதாசீனப்படுத்தாமல்  கேட்க ஒரு ஆத்மா...

அது அந்த குடியிருப்புக்காவலாளியாக இருந்தால் என்ன, அங்கே குடியிருக்கும் எழுத்தாளராக இருந்தால் என்ன... காவலாளி  இவர் பேச்சை கேட்கும் சகா... கேட்பதற்குடிப்ஸ்சாக அவர்களுக்கு டீயும், காசும் தந்து ஒரு வடிகால் தேடிக்கொள்ளுகிறார்....

இவரைப்போன்ற பல முதியவர்களை - தூக்கம் மறந்த மனிதர்களை - நாம் அனுதினமும் பார்க்கிறோம்...

இவர்களுக்குத்தேவை  நம் கதை நாயகர் நினைப்பது போல ஒத்த வயதானவைகளுடன் வாழ ஒரு முதியவர் இல்லமா?

இல்லை, தங்கள் பலபல அன்றாட அலுவல்களுடன் அவருடன் அரட்டை அடிப்பதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கக்கற்றுக்கொள்ளும் குடும்பமா?

வீட்டில் ஒரு சின்னக்குழந்தை இருந்தால், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நாம் அத்துடன் அவ்வப்போது அதன் வயதுக்கு இறங்கிவந்து விளையாட நேரம் ஒதுக்குகிறோமே...

இதையெல்லாம் தன் குழந்தைகளுக்கு இவரும் செய்து இருப்பாரே.... இரண்டாவது குழந்தைப்பருவத்தில் இருக்கும் இவரோடு பேச / பேசுவதை கேட்க கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் என்ன... இவர் என்ன இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விடப்போகிறார்?

அந்தக்காலத்தில், இவர்களுக்காகத்தான் கிராமங்களில் வாசலில் திண்ணை கட்டினார்களோ?

இளையவர்கள் அவரவர் வேலையே பார்த்துக்கொண்டிருந்தாலும், திண்ணையில் அமர்ந்த படி, அடுத்த வீட்டுப் பெரிசுடன் பழைய கதைகள் பேசியபடி ஆனந்தமாக இருந்தார்களே....

பல வீட்டு  "பெருசுகளின்" மனநிலையையும், இளையவர்களின் யதார்த்தப் பிரச்சனைகளையும், எளியவர்களின் (காவலாளி) நிதர்சன நிலையையும் கண் முன் சித்தரித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


//இதைப்பற்றி, இவர் இரவெல்லாம் தூங்குவது இல்லை என்பது பற்றி நீ அவர்கள் வீட்டில் சொல்லக்கூடாதோ” என்றேன்.

“சாமீ, நீங்க அதுபோல ஏதாவது செய்து காரியத்தை கெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அவர் பகலில் தூங்குபவரோ என்னவோ; ஆனால் அவரு ரொம்ப நல்லவரு. கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பவரு.  டீ, காஃபி, டிபன் எல்லாம் அப்பப்போ வாங்கித்தருகிறாரு; 

அது மட்டுமில்லை. அவர் சொல்லும் கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் போதும். அந்த சந்தோஷத்திலேயே, நூறு இருநூறு செலவுக்கு கைமாத்தாகக் கேட்டாலும் தருகிறாரு. திரும்பிக் கேட்பதே இல்லை; 

நானே அவருக்கு இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரணும். ரொம்ப தாராள மனஸு அவருக்கு. நம்ம தலைவரு எம்.ஜி.ஆர். மாதிரி கொடை வள்ளல் அவரு. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!” என்றான். //

"அட, இவரைப்போலவே ஒரு பெரியவரை எனக்குத் தெரியும்ப்பா" என்று கதை படிக்கும் ஒவ்வொருவரையும் சொல்ல வைக்கும் இந்தக்கதை,  ஆசிரியரின் கதைகளில்  ஒரு ரத்தினம் ....

இந்த முதியவரிடம் ஒரு லேப்டாப் கொடுத்து அவருக்கு, முகநூல், சமுதாய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி வைத்தால்  அவர்  அவற்றை  சிறந்த வடிகாலாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.!