badge

Followers

Wednesday, 24 September 2014

நன்மைகள் தரும் பாதாம் பருப்பு








பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!
இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். ‘அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்... இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.
இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.
பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.
பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.




என்ன இருக்கிறது?
ஆற்றல் 655
புரதம் 20.8 கிராம்
கால்சியம் 230 மி.கி.
இரும்புச் சத்து 58 கிராம்
கொழுப்பு 58.9 கிராம்
பாஸ்பரஸ் 490 மி.கி.
வைட்டமின் பி (நையாசின்) 48 கிராம்.



ஸ்பெஷல் ரெசிபி


பாதாம் சட்னி

என்னென்ன தேவை?
ஊற வைத்து, தோல் உரித்த பாதாம் - 10,
புதினா - 1 கட்டு,
பச்சை மிளகாய் - 3,
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஊறவைத்து, தோலுரித்த பாதாம் பருப்புடன், புதினா, பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம். பிரெட்டின் மேல் தடவியும் சாப்பிடலாம்.



மெமரி ட்ரிங்க்


என்னென்ன தேவை?

பாதாம் - 5,
வால்நட் - 1,
பேரீச்சம் பழம் - 3,
அத்திப்பழம் - 2,
உலர்ந்த திராட்சை - 1 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 1 கைப்பிடி,
பால் - 1 டீஸ்பூன்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாதாம் முதல் திராட்சை வரை எல்லாவற்றையும் ஊற வைத்துக் கொள்ளவும். அவற்றை பால் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பிறகு கேரட் துருவல் சேர்த்து அரைத்து, தேன் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.



ஹெல்த்தி பாதாம் அல்வா



என்னென்ன தேவை?
பால் - 1 கப்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
பாதாம் விழுது - அரை கப்,
நெய் - 1 கப்,
கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 3 கப்,
வறுத்த முந்திரி - சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய்யை சூடாக்கவும். கடலை மாவை வறுத்து, பிறகு பாதாம் விழுது, தேங்காய் துருவல், பால், சர்க்கரை என ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். விருப்பப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்க்கலாம். திரண்டு வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரியால் அலங்கரித்து, ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்

6 comments:

  1. பாதாம் பருப்பு பற்றிய நல்ல பல தகவல்களுடன் கூடிய இந்தப்பதிவு பாதாம் ஹல்வா போல ருசியானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,சார்.

      Delete
  2. நல்ல பாதாம் பருப்பு கிலோ 800 ரூபாய். எல்லோராலும் வாங்கி தினசரி சாப்பிடமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். அதன் நற்பயன்களும் உண்மை தான்.

      Delete
  3. வணக்கம்!
    இன்றைய வலைச்சரம் வலைப் பூவில்
    தங்களது பதிவு சிறந்த பதிவாக தேர்வானமைக்கு
    குழலின்னிசையின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    (உறுப்பினராக தாங்கள் இணைந்து ,"குழலின்னிசையை" தொடர வேண்டுகிறேன்! நன்றி!)

    ReplyDelete