badge

Followers

Sunday 17 January 2016

ஆலய அதிசயங்கள







1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.
3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.
6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.
7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.
8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.
10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.
12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.
13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.
14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.
17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.
18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.
19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.
20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.
22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

7 comments:

  1. மிகவும் அருமையான அதிசயமான தகவல்களாகத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை.//

    திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே ’அன்பில்’ என்ற ஓர் ஊர் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த ‘அன்பில் தர்மலிங்கம்’ என்பவர் முன்பு (1967 க்குப்பின்) தமிழக அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக நீண்ட நாட்கள் இருந்துள்ளார்.

    இந்த அன்பில் என்ற ஊரிலுள்ள ’அன்பில் மஹமாயி’ சமயபுரம் மஹமாயியைவிட உருவத்தில் சற்றே பெரியதாகும். இந்த அம்பாளை சமயபுரம் மஹமாயிக்கு அக்கா என்றும் சொல்லுவார்கள். சமயபுரம் மஹமாயி போன்றே மிகவும் சக்திவாய்ந்த அம்மனாகும்.

    சமயபுரம் கோயில் அளவுக்குக் கூட்டமில்லாமல் இங்கு நாம் அம்பாளை மிகவும் நிம்மதியாக தரிஸித்து மகிழ முடியும்.

    ReplyDelete
  3. அன்பில் மகமாயி பற்றிய அருமையான தகவல் தந்து என் தவறை சுட்டிக் காட்டியதற்கும் ,தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டமளித்து ஊகப்படுத்துவதற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்,Sir...

    ReplyDelete
    Replies
    1. Usha Srikumar 17/1/16, பிற்பகல் 10:34

      //அன்பில் மகமாயி பற்றிய அருமையான தகவல் தந்து என் தவறை சுட்டிக் காட்டியதற்கும், தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டமளித்து ஊகப்படுத்துவதற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்,Sir...//

      இதில் தங்கள் தவறெல்லாம் ஒன்றுமே இல்லை, மேடம். ஸ்ரீ சமயபுரம் மஹமாயீ அளவுக்கு ஸ்ரீ அன்பில் மஹமாயீ பற்றி பலருக்கும் தெரிந்திருக்க நியாயமே இல்லை என்பது எனக்கேகூடத் தெரியும். இரு கோயில்களும் இங்கு திருச்சியிலேயே Some 20 KMs Distance இல் இருப்பதாலும், நான் திருச்சியிலேயே பல்லாண்டுகளாக இருப்பதாலும், இரு கோயில்களுக்குமே நான் நேரில் பலமுறை சென்று வந்திருப்பதாலும், ஜஸ்ட் ஓர் தகவலுக்காக மட்டுமே இங்கு தங்களிடம் இதனை ஓர் உரிமையுடன் எடுத்துச்சொன்னேன். :)

      அன்புடன் VGK

      Delete
  4. //மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.//
    இது ஆய்வு செய்த முடிவா?நம்பிக்கையா? - அல்லது மிகத் தூய்மையாக வைத்திருப்பதற்காக சுத்தமாக்குவதால் பாசிகள் இல்லாமையால் மீனுக்கு உணவு இல்லாததால்,உள்ள குறைபாடா?
    மீனைப் போன்ற மூடாத கண்களுடன் உலகைக் காக்கும் அன்னை மீனாட்சியின் குளத்திலா மீன் வளராது? மிக ஆச்சரியம்.
    அன்னை மீனாட்சி மேல் எனக்கு நம்பிக்கை என்றும் உண்டு.

    ReplyDelete
  5. ஒவ்வொரு தகவலும் வியக்க வைக்கிறது...!

    ReplyDelete
  6. //22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.//

    காஞ்சி ஏகாம்பரநாதன் கோயில் மட்டுமல்ல ..... காஞ்சியில் உள்ள நூற்றுக்கணக்கான சிவன் கோயில்கள் எதிலுமே அம்பாள் சந்நதி கிடையாது.

    ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்குத் தனி கோயில் அங்கு உள்ளது.

    கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்ற முப்பெரும் பிரபல கோயில்களில் முதலில் வருபவள்: காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் என்பது இதன் சிறப்பாகும்.

    ReplyDelete