badge

Followers

Tuesday, 29 July 2014

சுக்கின் மருத்துவப் பயன்கள்...






"சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை...
சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய  தெய்வமும் இல்லை..."
இந்தப் பழமொழியை  நீங்கள் எங்காவது கேட்டிருப்பீர்கள்...

அப்படியென்ன மருத்துவ குணங்கள் சுக்கில் அடங்கி இருக்கின்றன  என்று பார்ப்போமா...

நம் அடுக்களையில் உள்ள இந்த அருமருந்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளவோம்...



1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2.சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4.சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5.சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6.சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7.சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.


8.சுக்கு ,வெந்தயம்,மிளகு ஆகியவற்றை 1:3:1/2 என்ற விகிதத்தில் கலந்து பொடித்து தினமும் மோரில் 1 டீஸ்பூன் கலந்து பருகிவந்தால் செரிமானத் தொல்லைகள் நீங்கும்.

9.சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10.சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11.சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12.சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13.சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14.சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15.சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16.சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.




17.தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18.சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19.சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோர்வை நீங்கும். 


20.சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

(படித்ததில் பிடித்தது)

Saturday, 26 July 2014

கணிணி கவசம்!!!!




கந்த சஷ்டி கவசம் போல இதையும் பாராயணம் செய்யுங்கள் ஐ  டி  துறை மக்களே!!!!

வீட்டில் உள்ள சிஸ்டம் அல்லது லேப்டாப்பில் நாளெல்லாம் ப்ளாக் செய்யும் நட்பு வட்டமும்,
முகநூல் வாசிகளும் கூட பாராயணம் செய்தால் நன்மை தரும்!!!!!




துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!
காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்னல்  மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகாமல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட்ரப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோல்டர்சும்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலட்சிய ஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.
சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க...



(இணையத்தில் படித்ததில் பிடித்தது)

மூன்றாம் பரிசுவென்றேன் -"பல்லெல்லாம் பஞ்சாமி பல்லாகுமா ..."





"பல்லெல்லாம் பஞ்சாமி பல்லாகுமா ..."

வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ப்ளாகில் நடைபெறும் சிறுகதை விமரிசனப் போட்டியில் இம்முறை மூன்றாம் பரிசுக்கு உரிய விமரிசனமாக என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவிதுக்கொள்கிறேன் ....

போட்டிக்கான கதைக்கான லிங்க் ....http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html





பல்லெல்லாம் 
பஞ்சாமியின் 
பல்லாகுமா?

நகைச்சுவை சிறுகதைத்தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். நமக்குப் பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும், அதன் கஷ்டம்?

பற்களினால் படாதபாடுபட்ட பஞ்சாமியை உங்களுக்குத் தெரியுமா? தெரியா விட்டாலும் பரவாயில்லை. இந்தக்கதையைப் படித்து முடிக்கும் போது ஓரளவுக்குக்காவது தெரிந்து கொண்டு விடுவீர்கள். இதைப்படிக்கும் உங்களில் எவ்வளவோ பஞ்சாமிகள் பஞ்சமின்றி இருக்கக்கூடும். உங்களைப் பற்றிய உண்மைக் கதையை எழுதிவிட்டதாக யாரும் கோபப்பட வேண்டாம்.

பஞ்சாமிக்கு ஆஜானுபாகுவான உடம்பு. நல்ல உயரம், தடிமனான உடல்வாகு, அதற்கேற்றபடி, கைகள், கால்கள், முகம், வாய் மட்டுமல்ல, நல்ல எடுப்பான பற்களும் கூட. அவர் வாயைத் திறக்காமலேயே கூட நாம் அவரின் பற்களை தரிஸிக்க முடியும். பற்களின் வளர்ச்சியில் அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம். 

அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்.

அவருடைய மிகப்பெரிய பற்கள் சில துணி துவைக்கும் பாறாங்கற்களை நினைவு படுத்தும். ஒன்றில் துணியைக் கசக்கிப்பிழிந்து வைக்கலாம். மற்றொன்றில் துணியையே அடித்துத் துவைக்கலாம் போல அருமையாகவும், சொறசொறப்பாகவும் இருக்கும். 

ஆலங்குச்சி, வேலம் குச்சி, அடுப்புச் சாம்பல் முதலியவற்றில் ஆரம்பித்து பயோரியா, நஞ்சன்கூடு, கருவேலப்பட்டை, ’பாடாவதி பல்பொடி’ என்றும் ஒன்று உண்டு - அது வரையிலும் அனைத்தையும் உபயோகித்து, பிறகு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய எல்லா நாட்டு மக்களும் தேய்ப்பதாக பிரபலபமாக விளம்பரப்படுத்திய அந்தத் தித்தித்து வழியும் ரோஸ் கலர் பற்பொடி வரை உபயோகித்து ஓய்ந்தவர் தான் நம் பஞ்சாமி.  

ஒரு காலக்கட்டத்தில் நெல் உமியுடன் உப்பு, கிராம்பு, கற்பூரம் முதலியன போட்டு வறுத்து அரைத்து உமிக்கரிப் பல்பொடி என்ற தன் சொந்தத் தயாரிப்பிலும் தேய்த்துப் பார்த்தவர்.

வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் ஆசாமியானதால் பற்கள் யாவும் பழுப்பேறி ஒரு வித ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிக்கும். 

டி.வி. விளம்பரங்களில் வரும் அந்த முத்துப்பல்லழகி போல ஆக வேண்டும் என்று விரும்பி பஞ்சாமியும் இதுவரை தேய்த்துப் பார்க்காத பற்பசைகளே இல்லையெனச் சொல்லலாம். 



சொட்டுத்தண்ணி விட்டால் சட்டிச்சாந்து வழிக்கலாம் போல அட்டைக் கருப்பாக இருக்கும் நானே, அந்தக் காலத்தில் டி.வி. விளம்பரத்தைப் பார்த்து, இண்டர் நேஷனல் லக்ஸ் தேய்த்துப் பார்த்தவன் தான், சினிமா நடிகை ஸ்ரீதேவி போல அழகாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில்.

விளம்பரத்தில் வருவதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதைப் புரிந்து கொள்வதற்குள் நானே நூற்றுக்கணக்கான சோப்புகள் வாங்கி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவ்வாறு ஆலங்குச்சியில் ஆரம்பித்து, நவ நாகரீகப் பற்பசைகள் வரை அனைத்தையும் உபயோகித்துப் பார்த்து விட்ட பஞ்சாமியின் முப்பத்திரண்டு பற்களும் நேற்று வரை ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் ஒரேயடியாக பாசம் பிடித்து ஒன்றுடன் ஒன்று மிகவும் ஒட்டுறவாகத் தான் இருந்து வந்தன.

அவருடன் நெருக்கமாகப் பழகிய ஒரு சிலர் அவர் வாயிலிருந்து ஒரு வித துர்நாற்றம் அடிப்பதாகச் சொன்னதும் அவரால் அதை நம்பவே முடியவில்லை. (சாக்கடை நாற்றம் அந்த சாக்கடைக்குத் தெரியாது என்பது போல). 

பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே அவர் வாயில் அடித்த நாற்றத்தில், ஒரு நாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து, பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கண்டிப்புடன் சொல்லி விட்டாள்: “இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”.

"பல்லு போய் தாத்தாவான பிறகு உன் பக்கத்தில் வந்து தான் என்ன லாபம், வராமல் இருந்து தான் என்ன நஷ்டம்" எனக் கேட்க வேண்டும் போலத் தொன்றியது பஞ்சாமிக்கு. 

இருந்தும் வாயை மூடி மெளனமாக இருந்து விட்டார். பிரச்சனைக்குரிய வாய் துர்நாற்றம் மேலும் பரவாமல் இருக்கவோ என்னவோ!



 


[ 2 ]

முடிவாக தன் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, பல் டாக்டர் ஒருவரை சந்தித்து பற்களை முழுமையாக க்ளீன் செய்து வந்து விடுவது என்ற முடிவுடன் கிளம்பினார்.

ஆஸிட்டுக்கு பை-பை என்ற விளம்பரத்தில் வரும் டாய்லெட் போல தன் பற்களும் பளிச்சென்று படு சுத்தமாகி விடும் என்ற இன்பக் கனவில் மூழ்கியவாறு நீண்ட க்யூவில் டாக்டரைப் பார்க்க அமர்ந்திருந்தார்.

தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. ’யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும்’ என்ற நல்லெண்ணம்.

வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நாற்றமோ, துர்நாற்றமோ, மெஜாரிட்டி இருந்தாலே ஒரு வித நிம்மதி தானே!

டாக்டரின் அழைப்பின் பேரில் உள்ளே நுழைந்ததும் அழகான சுழலும் நாற்காலியில் அமர்த்தப்பட்டார் நம் பஞ்சாமி. யாருக்குமே நாற்காலியைப் பிடித்து விட்டால் போதும், இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்து விட்டதாக ஒரு நினைப்பு வந்து விடுவது இயற்கையே.

இடிக்கி, குரடு, நோஸ்ப்ளேயர் போன்ற ஒரு சில உபகரணங்களுடனும், கை நிறைய பஞ்சுடனும், டாக்டர் அவர்கள் பஞ்சாமியின் பல் இடுக்குகளில் புகுந்து விளையாட ஆரம்பித்தார். 



இதுவரை ஒட்டி உறவாடிய பற்களுக்கு இடையே பெரிய இடைவெளிகளை ஏற்படுத்தத் தொடங்கினார். நெடுநாளைய காரைகள் பாறைகள் போல பெயர்த்து எடுக்கப்பட்டன. 

ஒவ்வொரு முறை குத்திக்குத்தி சுரண்டும் போதும் ஈறுகளிலும், எகிறிலும் ரத்தம் பீரிட்டு வந்து வலி எடுத்து வாய் பூராவும் ரத்தத்தால் உப்புக்கரித்தது. பஞ்சினால் ரத்தம் ஒத்தி ஒத்தி எடுக்கப்பட்டு பிறகு, தூக்கி எறியப்பட்டு வந்தது. பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே நல்ல சிவப்பாகிப் போனது. 

விடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும் காரைகளும் அடக்கி ஒடுக்கி அகற்றப்பட்டதால், தங்கள் ‘சொத்தை’ இழந்த அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒரு வித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல ஒரு வித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின.

எவ்வளவு கஷ்டப்பட்டாலும், கடைசியில் முத்துப்பற்களைப் பெற்றே தீரப் போகிறோம் என்ற முழு நம்பிக்கையில், பஞ்சாமியும் வலியைப் பொறுத்துக்கொண்டு, டாக்டருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். 

இடையிடையே அங்குள்ள வாஷ்பேசினில் வாய்க்கொப்பளித்தபடி, துர்நாற்றமில்லாத தன் வருங்கால இல் (பல்) வாழ்க்கையை எண்ணி மகிழ்ந்தார்.

டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. 



கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லி வீட்டுக்குப் புறப்படலானார்.



  


[ 3 ]

இரண்டு நாட்களுக்கு சூடாக எதுவும் சாப்பிட வேண்டாம். பால், கஞ்சி, ஐஸ்கிரீம் போன்ற ஏதாவது திரவ உணவாக சூடு இல்லாமல் ஜில்லென்று மட்டும் சாப்பிடச் சொல்லி டாக்டர் கூறியிருந்ததால், இவை மூன்றில் தனக்கு மிகவும் இஷ்டமான ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் டப்பாக்களாக நிறைய வாங்கி வந்து, தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து டாக்டரிடம் திரும்பி வந்த பஞ்சாமிக்கு, முன் வரிசையில் அழகாக ஆறு பொய்ப் பற்கள் கட்டி விடப்பட்டன. கண்ணாடி முன் நின்று பல்லைக்காட்டிய பஞ்சாமிக்குத் தன் முகமே மாறி விட்டது போன்ற ப்ரமை ஏற்பட்டது.

குத்துச்சண்டை வீரரிடம் குத்து வாங்கியது போல முகத்திலும், தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது.   


கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.

முன்புற செயற்கைப்பற்கள் ஆறுக்கும் ஆதரவாக, மிகப்பெரிய செதில் போன்ற பொருள் மேல் தாடையின் உள் ஓட்டுப் பகுதியில் சொருகப்பட்டிருந்தது. அது பஞ்சாமியின் வாயில் ஏதோ வேண்டாத ஒரு பொருள் ஈஷிக்கொண்டிருப்பது போல அருவருப்பை அளித்தது.

மேலும் அந்தப் பொய் பற்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க இரு புற நிஜப்பற்களிலும் இரண்டு கம்பிகள் க்ளிப் போல வளைத்து மாட்டப் பட்டிருந்ததால், விண் விண்ணென்று அந்தப்பற்களிலும், ஒரு வித வலியை ஏற்படுத்தி அவஸ்தை கொடுத்து வந்தது.

எதையாவது சாப்பிடும்போது, பொய்ப் பற்களும் விழுங்கப்பட்டுவிடுமோ என்ற ஒரு வித பயத்தில், பஞ்சாமியால், நிம்மதியாக எதுவும் ருசித்து, ரசித்துச் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தையாக இருந்தது.

சுமார் ஒருமாத காலமாக இது போன்ற பல வித கஷ்டங்களை அனுபவித்து வந்த பஞ்சாமிக்கு, அவருடைய வயதான மாமனாரின் வருகை, ஒரு வித திருப்பு முனையாக அமைந்தது. 

சதாபிஷேகம் முடிந்து, எண்பது வயதைத்தாண்டி எட்டு மாதங்கள் ஆன அவரால், கரகரப்பான மிக்ஸர், காராச்சேவ், முள்ளு முறுக்கு, கடலை மிட்டாய் என எல்லாமே நன்றாகக் கடித்து சாப்பிட்டு வர முடிகிறது. சுத்தமாக எல்லாப் பற்களும் விழுந்து, கம்ப்ளீட் ஆக பல் செட் கட்டியிருப்பவர்.

பஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி, "மீதியுள்ள எல்லாப் பற்களையும் சப்ஜாடா தட்டி விட்டு விட்டு, புதியதாக முழுமையான கட்டடம் கட்டினால் தான் சரிப்பட்டு வரும்" என்று எடுத்துரைத்தார்.


பஞ்சாமிக்கு இதைக்கேட்டதுமே பல்லைப் பிடுங்கியது போல ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல், மாமனார் எவ்வழியோ மாப்பிள்ளையும் அவ்வழியே என தினமும் பல் டாக்டரிடம் படையெடுத்து, வாரம் இரண்டு மூன்று பற்கள் வீதம் பிடுங்கிய வண்ணம் இருந்தார். ஒரு வழியாக, கொஞ்சம் கொஞ்சமாக, அனைத்துப் பற்களையுமே புடுங்கியெறிய நான்கு மாத காலம் ஆகி விட்டது. 

அனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. 

கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது. 



புதுப் பல்செட் கட்டும் வேலை, வாய்ப்புண்கள் ஆற வேண்டி, டாக்டரால் மேலும் ஒரு மாததிற்கு ஒத்தி வைக்கப் பட்டது.



    


[ 4 ]

இந்த ஒரு மாதமும், பஞ்சாமி வாயைக் கட்ட, வயிற்றைக் கட்ட படாதபாடு பட்டு விட்டார். சாப்பாட்டில் கடுகு போன்ற மிகச்சிறிய கடிக்க வேண்டிய சமாசாரங்களைக் கூட கடிக்க முடியாமல் கடுப்பு வந்தது அவருக்கு.

அவருக்கு மிகவும் பிடித்தமான கரமுரா அயிட்டங்களான பக்கோடா, மிக்சர், காராச்சேவ், கடலை, நேத்திரங்காய் சிப்ஸ், வறுத்த முந்திரி முதலியவற்றை அவர் கண்ணெதிரிலேயே பிறர் கரமுரா எனக் கடித்துச் சாப்பிடுவதைக் கண்டு கண்ணீர் விடலானார்.

மேற்படி அனைத்து அயிட்டங்களையும் தனித்தனியே மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடிப் பொடியாக்கி பொக்கை வாயில் போட்டு வந்தும் திருப்தியாகவில்லை பஞ்சாமிக்கு. 

கடிக்க வேண்டியதை கடிக்கணும், சப்ப வேண்டியதைச் சப்பணும், அப்போது தான் முழுத்திருப்தி ஏற்படும், என்ற உண்மை அவருக்கு விளங்கியது.

நன்றாக மென்று தின்று வெற்றிலை பாக்குப் போட்டு, புகையிலைச்சாறை விழுங்கி வந்த பஞ்சாமிக்கு, இப்போது வாழ்க்கையே வெறுத்துப் போனது போலத் தோன்றியது. 


”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி.

வறுத்த முந்திரி போட்ட பால் பாயஸம், சற்றே கெட்டியான ஆமவடை, சதைப்பத்தான முருங்கைக்காய் சாம்பார், கட்டை வடாம், மொறுமொறுப்பான அடை என அவரவர் இஷ்டத்துக்கு வெட்டும்போது, மோர்க்களி, குழைந்த மோர்சாதம், கரைத்த ரஸம் சாதம், மோர்க்கஞ்சியெனப் பத்திய சமையல்கள் பரிமாறப்பட்டன, பஞ்சாமிக்கு மட்டும் தனியாக.

ஆசையில் அன்றொரு நாள் பால் பாயஸத்தைப் பாய்ந்து ஒரு டம்ளர் எடுத்துக் குடித்த அவர், வாயில் மிதந்த முந்திரிப் பருப்புகளை கடிக்க வழியில்லாமல், சாப்பாடுத் தட்டைச் சுற்றி தூ...தூ என்று துப்பியதைப் பார்க்க எனக்கே மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.

பல்லில்லாத பஞ்சாமிக்கு வெளியில் போகவோ, யாரையும் சந்திக்கவோ மிகவும் வெட்கமாக இருந்தது. பல்வலி இருப்பது போல ஒரு சிறிய டவலால், வாயை எப்போதும் மறைத்துக் கொண்டு, வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

ஒரு மாதம் முடிந்து வாய்ப்புண் ஆறியதும் பல் டாக்டரை சந்திக்கச் சென்றார். ரெடிமேட் பேண்ட் சட்டை வாங்கி உடனடியாக அணிந்து கொள்வது போல, உடனே இன்று தனக்கு பல் செட் கட்டப்பட்டு, அனைத்தையும் கடித்து சாப்பிட்டு விடலாம் என எண்ணிச் சென்ற அவருக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது.

இவரின் வாயைப் பிளக்கச் சொல்லி ஆராய்ந்த டாக்டர் எகிறுப் பகுதியில் நிறைய மேடு பள்ளங்கள் இருப்பதாகவும், அவற்றை சமன் படுத்தி ஒரு லெவலுக்குக் கொண்டுவர ஆங்காங்கே ராவு ராவு என்று ராவி மீண்டும் புண்ணாக்கி, ஒரு வாரம் கழித்து, புண் நன்றாக ஆறிய பிறகு வந்து பார்க்கச் சொல்லி அனுப்பி விட்டார். புண் சீக்கரமாக ஆற மாசிக்காயை வாங்கி தண்ணீர்விட்டு குழைத்து சந்தனம் போல ஆக்கி தடவச்சொன்னார்.





[ 5 ]

ஒரு வார காலம் ஓடிப்போனது. வாய்ப் புண்கள் நன்கு ஆறி விட்டது. இன்று எப்படியும் காரியம் நல்ல படியாக முடிந்து விடும் என்று நினைத்துச் சென்ற அவரை, சுழல் நாற்காலியில் அமரச் செய்தார் அந்த டாக்டர்.

களிமண்ணில் பிள்ளையார் பிடிக்க இரண்டு அச்சுகள் வைத்திருப்பார்களே, அது போல கைப்பிடியுடன் கூடிய ஏதோ இரண்டு கோப்பைகள் வடிவிலான (சலூனில் சம்மர் கட் வெட்ட உபயோகிக்கும் அந்தக்கால மிஷின் போல) ஒரு உபகரணத்தை, வாயைத் திறக்கச் சொல்லி, வாயினுள் நுழைத்து மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஒரு ஆட்டு ஆட்டி இடைவெளி ஏதும் உள்ளதா என சோதனை செய்து பார்த்தார், அந்த டாக்டர்.



எச்சில் கூட விழுங்க முடியாமல் தவித்த பஞ்சாமிக்கு அதனை உடனடியாக வாயிலிருந்து வெளியே எடுத்தால் போதும் என்றாகி விட்டது. அந்த உபகரணத்தை அவர் வாயிலிருந்து வெளியே எடுத்து ஒரு ஓரமாக வைத்தார் டாக்டர்.

பிறகு, ஏதோ ஒரு பாத்திரத்தில், ஏதோ ஒரு பவுடரைத்தூவி, தண்ணீர் விட்டு, ரோஸ் கலரில் சப்பாத்தி மாவு பிசைவது போலப் பிசைய ஆரம்பித்தார். மேற்கொண்டு என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்குமோ, என பஞ்சாமிக்கு கவலை ஏற்பட்டது. 

அங்கு ஏற்கனவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல வகை செயற்கைப் பல் செட்டுகள், இவரைப் பார்த்து பல்லைக்காட்டி, பரிகாசமாகச் சிரிப்பது போலத் தோன்றியது, பஞ்சாமிக்கு.

ரோஸ் கலர் சப்பாத்தி மாவை அந்த அச்சுகளில் நிரப்பி, மீண்டும் வாயைப் பிளக்கச்சொல்லி, உள்ளே இறுக்கமாகச் செலுத்தி, வழிந்த மாவை தன் கை விரல்களால் வழித்தெறிந்தபின், டாக்டர், பஞ்சாமியின் தலையில் ஒரு கையும், முகவாய்க்கட்டையில் ஒரு கையுமாக வைத்து ஒரே அழுத்தாக அழுத்தியதும், அந்தப் பசை மாவில் சிறிதளவு தொண்டைக்குழிக்குள் பாய்வது போல ஒரு அருவருப்பும், குமட்டலும் ஏற்பட்டுத் தவியாய்த் தவித்தார், பஞ்சாமி.

பிறகு வாயைத் திறக்கச் சொன்ன டாக்டர், டக்கென்று அவற்றை வெளியே எடுத்து. ஒரு சில டச்-அப் செய்து விட்டு ஓரம் கட்டினார்.

“வாய்க் கொப்பளித்து விட்டு நீங்கள் புறப்படலாம், இரண்டு நாட்கள் கழித்து வந்தால், உங்கள் பல் செட் ரெடியாகி இருக்கும்” என்றார் டாக்டர்.

பாவம் நம் பஞ்சாமியும் பல் விஷயமாக பல நாட்களாகப் படையெடுத்து வருகிறார்.

அடுத்த முறை டாக்டரிடம் படையெடுத்தபோது, இவரின் பல்செட் ரெடியாகி இவரைப் பார்த்து புன்னகை பூத்து வரவேற்றது.





“என் வாழ்வே இனி உன்னோடு தானடா !
இனி உன் வாயே எந்தன் உலகமடா !
அனைத்தையும் நாம் இனி 
கடிப்போம்,
ருசிப்போம், 
சுவைப்போம் 
ஒன்றாகவே !”

என அந்தப் பல்செட் பாட்டுப் பாடி டூயட் ஆடுவது போலத் தோன்றியது பஞ்சாமிக்கு.


 [ 6 ]


பஞ்சாமியை இருக்கையில் அமரச்செய்து, புதிய பல் செட் இரண்டையும் மேலும் கீழும் பொருத்தி, தன் கை விரல்களால் அழுத்தி இடைவெளியில்லாமல் மேல் ஓட்டிலும், கீழ்த்தாடையிலும் சரியாகப் பொருத்தி விட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கையில் கொடுத்து, “பாருங்கள் - எப்படி உள்ளது” எனக் கேட்டார், அந்த டாக்டர்.

வாயைத்திறந்து பேச பயந்து, தலையை மட்டும் ஆட்டினார் பஞ்சாமி.

காற்றோட்டமாக செருப்புப் போட்டு பழகியவருக்கு திடீரென்று ஷூவும், சாக்ஸூம், அதுவும் டைட்டாகப் போட்டுவிட்டால் ஏதோ ஒரு முதலை, காலைக் கவ்விக் கொண்டிருப்பது போல உணர்வு ஏற்பட்டு கஷ்டப்படுத்தும். அது போல பஞ்சாமிக்கு வாய் முழுவதும் எதையோ வைத்து அடைத்து விட்டது போல ஒரு வித அவதி ஏற்பட்டது.

நாக்கால் தன் புது பல் செட்டைத் துலாவிப் பார்த்த அவருக்குப் பல் நுனிகள் ரம்பம் போல் கூர்மையாக இருப்பது போலத் தோன்றியது. டாக்டரிடம் அதை கைஜாடை மூலம் வெளிப்படுத்தினார். ”அதெல்லாம் கரெக்ட் செய்து விடலாம்” என வாக்களித்த டாக்டர், ஓரிரு முறை பல் செட்டை மெதுவாகத் தானே போட்டு, தானே கழட்டிப் பழகச் சொன்னார். புதியதாக இருந்ததால் கழட்டி மாட்டுவதற்குள் ப்ராணாவஸ்தையாகப் போய் விட்டது பஞ்சாமிக்கு.

புது செருப்பு காலைக் கடிப்பது போல புதுப்பல்செட் கீழ்த்தாடையிலும், மேல் தாடையிலும், ஆங்காங்கே நன்றாகப் பதம் பார்த்து விட்டது.

புண்ணான இடங்களைப் பற்றிய விபரம் அறிந்த டாக்டர் பல்செட்டைத் தனியே எடுத்து தக்ளி போன்ற மிகச்சிறிய சாணைக்கல்லில் ஆங்காங்கே சற்று ராவ ஆரம்பித்தார். உராய்வைக் குறைக்க கிரீஸ் போன்ற போன்ற ஏதோ ஒன்றைத் தடவி மீண்டும் பஞ்சாமியின் வாயில் பொருத்தி, பல்லின் நுனிப்பகுதிகளை சமப்படுத்த, அந்த மிகச்சிறிய சாணைக் கல்லை அவர் வாயருகில் கொண்டு சென்று மீண்டும் ஓடவிட்டு ஃபைனல் டச்-அப் செய்தார்.

சுழலும் சாணைக்கல், வாயில் பொருத்தப்பட்ட, பல் நுனியில் பட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை, சர்வாங்கமும் பஞ்சாமிக்கு மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு வாரம் பழகினால் சரியாக சூட் ஆகி விடும் என்றும், பல்லைப் பத்திரமாகப் பராமரிப்பது எப்படி என்றும், இரவு நேரங்களில் தேவைப்பட்டால் போட்டுக் கொண்டே தூங்கலாம் என்றும், தேவையில்லாது போனால் கழட்டி, அதற்கென தனியாக ஒரு சம்புடத்தில் நீர் ஊற்றி அதில் மிதக்க விடலாம் என்றும், இரண்டு பக்கமும் சமமாக கடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பலவித ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தார், டாக்டர்.



[ 7 ]


தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.

பஞ்சாமியைப் பொருத்தவரை, புதிய பல்செட் அணிந்துள்ளதால் முகம் ஏதோ பார்க்க பங்கரையாய் [கோரமாய்] இல்லாமல் இருப்பதாக மட்டுமே உணர முடிந்தது. 

தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.

முதன் முதலாக நான்கு டைமன் கற்கண்டுகளை வாயில் போட்டுக் கொண்டு மிகவும் ஆசையுடனும், சற்று பயத்துடனும் கடித்துப் பார்த்தார். கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.

பிறகு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராக, பெரு முயற்சி செய்து கொஞ்சம் காராபூந்தியை வாயில் போட்டு மென்று விழுங்கினார். அது ஆங்காங்கே பல்செட் முழுவதும் ஈஷிக்கொண்டு படாத பாடு படுத்தியது.

மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது சாப்பிட்டவுடன் உணவுத் துகள்கள், ஆங்காங்கே பல்லிலும், அதைச்சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள செதில்களின் இடுக்குகளிலும் மாட்டி வருவதாக உணர்ந்த பஞ்சாமி, அதை அடிக்கடி வெளியே எடுப்பதும், சுத்தப்படுத்துவதும், திரும்பவும் கஷ்டப்பட்டு மாட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தார்.

நாளடைவில் இது போல செய்வதற்கு சோம்பல்பட்டு, அடிக்கடி ஏதாவது கடித்து சாப்பிடுவதையே குறைத்துக் கொண்டார். வாயின் இறுக்கத்தைக் குறைக்க, பகல் பொழுதினிலேயே பல்வேறு சமயங்களில், பல்செட்டைக் கழட்டி அதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, வாயை காற்றாட, சுதந்திரமாக இருக்க விட்டு, தனக்குத் தானே உதவி செய்து கொண்டார்.

அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

அன்றொரு நாள் ... பாவம் .. மீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது.

[ 8 ]

பாத் ரூமில் சோப்புப் போட்டுக் குளித்துக்கொண்டிருந்த பஞ்சாமி, சோப்பு நுரை வாயில் சற்று பட்டு விட்டதால், துப்பி விட்டு, தன் பல் செட்டைக் கழட்டி, பல்லையும் துலக்கி விடலாம் என அவசரமாக கழட்டும் போது, அதில் ஒன்று கை நழுவி கீழே விழுந்து இரண்டாக உடைந்து போனது. அது மட்டுமா ! அந்தப் பதட்ட வேளையில் மற்றொன்று கழிவறைப் பாதையில் சோப்பு நுரையுடன் வழுக்கிச் சென்று மறைந்தே போனது. பஞ்சாமி நொந்து நூலாகிப் போனார்.

பல் டாக்டரை நோக்கிய பஞ்சாமியின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஏற்கனவே பல் விஷயமாக பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து விட்ட பஞ்சாமியிடம், டாக்டர் ஆறுதலாகக் கூறியது:

“நவீன பல் சிகிச்சை முறையில், தனித்தனியாக பற்களை எகுறுக் குழிகளில் பதித்து ஸ்க்ரூ செய்துவிடும் மேல் நாட்டு முறை புதியதாக வந்திருப்பதாகவும், அவ்வாறுசெய்து கொண்டு விட்டால், தற்போது ஏற்பட்டது போன்ற விபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், பணம் தான் ஒரு முக்கால் லட்சம் மட்டும் செலவாகும்” என்றார்.





இதைக்கேட்டதும் தன் ’பல்’ஸ் பிரச்சனை இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் ’பல்ஸ்’ வீக்காகி பஞ்சாமி மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.

oooooOooooo


பின் குறிப்பு:

பஞ்சாமி மயங்கி மூர்ச்சையாய் விழுந்த அதே நாள் இரவு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து டி.வி. சேனல்களிலும் கீழ்க்கண்ட ஒரு பரபரப்புச் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது:

”சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்தவரும், பல்லவராயன் என்ற பெயரில் பல்லாண்டுகளாக பல் டாக்டர் ஆக பணியாற்றி வருபவருமான ஒருவர், போலி டாக்டர் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாலும், அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், அவர் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளதாலும், பல்லவன் பஸ்ஸில், பல்பொருள் அங்காடிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே பயணம் செய்யும் போது, போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார்.”


நம் பஞ்சாமிக்கு பல் வைத்தியம் செய்தவர் இதே பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயன் தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன?      நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் தானே !

எனவே நண்பர்களே!

போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். 

பணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா?

பணம் இன்று போகும் !  
நாளை வரும் !!

[ பணம் இன்று போகும் சரி; நாளை எங்கிருந்து வரும்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. அப்படித்தான் எல்லோரும் ரொம்ப வருஷமாகச் சொல்லித் திரிகிறார்கள், அதனால் தான் நானும் சொன்னேன். .........  அப்போ வரட்டுமா ..........  Bye Bye ...... vgk ]


இக்கதைக்கான என் விமரிசனம் இதோ....


முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள




திருமதி  



 உஷா ஸ்ரீகுமார் 



அவர்களின் விமர்சனம் இதோ:
 
நகைச்சுவை எழுத்து  என்பது மிகவும் கனமான ஒரு விஷயம்...அதை எழுதுபவருக்கு!!!

அதனால் தான் , "Humor is serious business!" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...

நான் கொடுக்கப்போவது ஒரு முழு நீள நகைச்சுவை விருந்து...

நீங்கள் சிரித்து, சிரித்து  உங்கள் பல் சுளுக்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல  என்று வார்னிங் கொடுக்காத குறையாக கதைத்தலைப்பிலிருந்தே நம்மை மூச்சுக்கு மூன்று முதல் முந்நூறு தடவை சிரிக்க வைப்பதையே இலட்சியமாகக்  கொண்டு இந்த முழு நீள  நகைச்சுவைக் கதையை எழுதிய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்...

"கல் எல்லாம் மாணிக்கக் கல்  ஆகுமா..." என்ற பாடலைத்  தழுவி ஆசிரியர்  திரு.வை.கோ. அவர்கள்  சிரிப்புத்  தேன்   தடவிய "பல்லெல்லாம்  பஞ்சாமியின்  பல்லாகுமா..." என்ற தலைப்புடன் ஆரம்பிக்கிறார் இந்தசிறப்பான  சிரிப்பு விருந்தை!

இந்த விருந்தில் சுவையை அதிகரிக்க அவர் பயன் படுத்தும்   யுக்திகள்....

#சிரிப்பை வரவழைக்கும் உபமான உபமேயங்களின் தாராள உபயோகங்கள்...

#கடுகு போன்ற விஷத்தை இமாலயப்பிரச்சனையாக விஸ்வரூபமெடுக்க வைத்து உற்சாகப்பட்டாசு கொளுத்திப்போடுதல் !

#நுணுக்கமான குபீர் சிரிப்பு உத்தரவாதம் தரும் வர்ணனைகள்...

#அட்டகாசமான ஆண்டி கிளைமாக்ஸ் ....


ஆதிகாலத்திலிருந்து இன்று வரை மனிதன் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம்...
"அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் ஒரு சேரப் பொருந்திய ஒரு ஆணோ பெண்ணோ இன்னும் பிறக்கவில்லை!" என்பதே...

ஒருவர் பார்க்க ராஜா மாதிரி இருந்தால் அவர் குட்டை!
ஒருத்தி நல்ல நிறம் என்றால் அவள் கூந்தல்  எலிவால்!
ஒருவன் ஆறடி என்றால் அவன் குரல் "கீச்..கீச் .." என்று இருக்கும்!
ஒருவன் முகத்தில் அவ்வளவு தேஜஸ்... கண்களை நன்றாகப் பார்த்தால் ஒன்று கிழக்கே பார்த்தால் ஒன்று மேற்குப்பக்கம் பார்க்கும் !

என்ன செய்வது !

பிரம்மன் கார்ட்டூன் வரையும் மூடில் இருக்கும் போது  நம்மில் சிலரைப் படைத்துவிடுகிறான்!

அதிலும் இந்தப் பற்கள் விஷயத்தில் பிரம்மன் அவ்வப்போது ரொம்பவுமே விளையாடிவிடுவான்....

ஒருவேளை பல் மருத்துவர்கள் ஒரு குழுவாக பிரம்மனை சந்தித்து தனியே சம்திங் கொடுத்து கவனித்துக்கொண்டார்களோ? அதனால் தான் அவன் இந்தப் பல்லு மேட்டரில் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாகவே கார்ட்டூன் போட்டு விடுகிறாரோ?

நம் ஹீரோ பஞ்சாமி கேஸ்ஸில்  நடந்த மாதிரி?

சிலருக்கு தெத்துப்பல்லு... சிலருக்கு துருவிப்பல்லு... சிலருக்குக் காவிப்பல்லு சிலருக்குக்கோணல் பல்லு.... சிலருக்கு சொத்தைப்பல்லு... சிலருக்கு சிங்கப்பல்லு...ஆகக்கூடி கே .ஆர் .விஜயா போல முத்துப்பல் அழகு மிக சிலருக்குதான் வாய்க்கிறது!

நம்ம ஹீரோ சாருக்கு இதெல்லாம் விட ஒரு படி மேல்! துருவி + காரை + வாய் நாற்றம்!

நம்ம ஊருப் பெண்ணானதால் அவள்  பஞ்சாமியின்  வாய் நாற்றத்தை காரணம் காட்டி விவாகரத்துக் கேட்கவில்லை!

த்தனை பிரச்சனைகளையும் வாய்க்குள் வைத்த  நம் ஹீரோ போவது ஒரு பல் வைத்தியரிடம்!

சாதாரணமாகவே பலருக்கும் பல் வைத்தியரின் கிளினிக்குக்கு  போவது என்றால் ஈரல் கொலை நடுங்கும்!

(எனக்கு  அது யமலோகத்து சித்திரவதைக்கூடத்தை நினைவு படுத்தும்...)

அதுவும் அவர் நாற்காலிகள், கிரைண்டர் சத்தம், கொறடு, ஊசி, சுத்தியல், சுரண்டும் கருவிகள்... எல்லாமே அச்சத்தை உண்டாக்கும்!

பல் டாக்டரிடம் ஒரே ஒரு நாளில் வைத்தியம் முடிந்ததாக சரித்திரமே இல்லை!

நம்ம ஹீரோவும் காறை எடுக்கப் போய் மொத்தப் பற்களையும் சாப்ஜாடாகத்தட்டி எடுத்து முடித்து மங்களம் பாடி முடித்து புது பல்செட் வைத்துக்கொண்டு திரும்பும் நிலையில் பரிதாபமாக நிற்க நமக்கு பரிதாபமும், சிரிப்பும் மாறி மாறி வருகிறது!

பொய்ப் பல் வைத்துக்கொண்டவர்கள் பலர் படும் அவஸ்தைகளையும், உணர்வுகளும் அழகாக வர்ணிக்கும் ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்!

கடைசியில் வந்த ஆண்டி கிளைமாக்ஸ் அருமை....

அப்படியே ..

போலி டாக்டர்களை அடையாளம் காண்பது எப்படி என்று ஆசிரியர் சிரிக்க, சிரிக்க சொல்லிக்கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்!

எப்படியோ.... புதுப்பல் வைத்துக்கொண்ட பஞ்சாமியின் வாழ்வில் வசந்தம் மலர்ந்தால் சரி...





மூன்றாம் பரிசுக்கு உரிய விமரிசனமாக என் விமரிசனத்தை தேர்ந்தெடுத்த நடுவருக்கும் ,வாய்ப்பளித்த கதாசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...


Friday, 25 July 2014

நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...





ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான்.

அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"


"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."


"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"


"உன்னுடைய உடைமைகள்........."


"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"


"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........
அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."


"என்னுடைய நினைவுகளா?............."


"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........


அவை காலத்தின் கோலம்........"


"என்னுடைய திறமைகளா?..........."


"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."


"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"


"மன்னிக்கவும்...குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."


"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"


"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது...
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."


"என் உடல்?..........."


"அதுவும் உன்னுடையது கிடையாது..........
உடலும் குப்பையும் ஒன்று........."


"என் ஆன்மா?"


"இல்லை........அது என்னுடையது.........."


மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப்பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........காலி பெட்டியைக் கண்டு...கண்ணில் நீர் வழிய கடவுளிடம் 


"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?" எனக் கேட்க,


கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன்,நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது
என்று நீ நினைக்காதே........"


- ஒவ்வொரு நொடியும் வாழ்
- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது..................



(இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் )