badge

Followers

Friday, 27 January 2017

சாய் லீலை .. சிறிய ஸ்லைடு ஷோ






"ஓம் நமோ பகவதே சாயி நாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய 
சகல லோக பூஜீதாய


சர்வ தோஷ நிவாரணாயா

ஷீரடி வாசாய

சாயி நாதாயதே நமஹ....."

Thursday, 26 January 2017

பனித்துளி-ஒரு சிறிய ஸ்லைடுஷோ


 பனித்துளி -ஒரு சிறிய ஸ்லைடுஷோ....


வண்ண மலர்களின் மெல்லிதழ் மேல் மின்னும் வைரமாய்....

புல் நுனியில் காலை கதிரொளியில் ஜொலிக்கும் பாதரச மணியாய்....

பச்சை இலையில் தெறித்த மின்னும் முத்துக்களாய் ....

சிலந்தி வலையில் கோர்த்த வைர மாலையாய்....

நீ பட்ட  இடத்திலெல்லாம்  அழகுக்கு அழகு சேர்க்கிறாயே....

விலை மதிப்பில்லா பனித்துளியே......

Monday, 23 January 2017

ஷிர்டி சாயிபாபா அளித்த பதினோரு உபதேச மொழிகள்...ஷீர்டி சாய்...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ





ஷீர்டி சாய் பாபா ....ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....
ஸ்லைடு ஷோவை பார்க்க  படத்தை சொடுக்கவும்....


ஷிர்டி சாயிபாபா அளித்த பதினோரு உபதேச மொழிகள்:


1. ஷிர்டி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சாந்தோஷத்தை அடைவார்கள்,
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாக்க்ஷிக்கிறேன்.
9. நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது....

Thursday, 19 January 2017

நந்தி - 50 தகவல்கள்






​​1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.


3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.


4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.


5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.


6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.


7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.


8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.


9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.


10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.


11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.


13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.


14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.


15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.


17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.


18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.


19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.


20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.


21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.


22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.


23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.


24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.


25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.


26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.


27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்


28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.


29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.


30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.


31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.


32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.


33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.


34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.


35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.


36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.


37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.


38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.


39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.


40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.


41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.


42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.


43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.


44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.


45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.


46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.


47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.


48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.


49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.


50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.
(Courtesy-Net)


Wednesday, 18 January 2017

குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்...



குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்!


பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

“ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.
சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்…

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.



Tuesday, 17 January 2017

சாயியின் அமிர்த வார்த்தைகள் ....



















சாயியின் அமிழ்தம் போன்ற போதனைகள்:  

1. என்னை நேசிப்பவரின் பார்வையில் நான் மட்டுமே தெரிவேன்.
2. அவருடைய வாயில் என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.
3. அவர் என்னையே அகண்டமாகத் தியானம் செய்வார்.
4. நாக்கு என் நாமத்தையே ஜெபம் செய்யும்.
5. என் சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பர்.
6. என்னிடம் சேர்ந்தவரின் கடனை தலையில் ஏற்று அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனை திருப்பிச் செலுத்துகிறேன்.

Sunday, 15 January 2017

மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்




*மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்*


*மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்*.

*1. திருமால் மார்பு*
*திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே*.

*2. பசுவின் பின்புறம்*
*பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்*.

*3. யானையின் மத்தகம்*
*யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. (ஓங்காரம் போன்றது) அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்*.

*4. தாமரை*
*மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்*.

*5. திருவிளக்கு*
*விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு*.

*6. சந்தனம்*
*மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்*.

*7. தாம்பூலம்*
*தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்*.

*8. கோமயம்*
*பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்*

*9. கன்னிப்பெண்கள்*
*தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு*.

*10. உள்ளங்கை*
*உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்*.

*11. பசுமாட்டின் கால்தூசு*
*புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே!*

*12. வேள்விப்புகை*
*வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்*.

*13. சங்கு*
*சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி... பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்*.

*14. வில்வமரம்*
*வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்*.

*15. நெல்லி மரம்*
*நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு*.

*16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்*

*17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்*

*18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்*

*19. தானியக் குவியல்*

*20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்*

*21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்*

*22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்*

*23. நாவடக்கம் உள்ளவர்*

*24. மிதமாக உண்பவர்*

*25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்*

*26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்*.

Saturday, 14 January 2017

ஸ்வாமியே சரணம் ஐயப்பா .....ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....




ஸ்வாமியே சரணம் ஐயப்பா .....ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....

மகர ஜோதி வானில் தெரியும் இவ்வேளையில் 

சபரிமலை ஸ்ரீ ஐயப்பனைப் பற்றி இந்த 
சிறு விடியோவை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

பின்னணியில் உள்ள பாடலை மறக்காமல் ரசியுங்கள்....

மேலும் விடீயோக்களை காண YOUTUBE CHANNELஐ 

பாருங்கள்...விருப்பப்பட்டால் subscribe  செய்யுங்கள்...

Friday, 13 January 2017

வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சிகள்...ஒரு சிறிய வீடியோ




வானவில்லின் வண்ணங்களை குழைத்து 
யார் இந்த அழகுக்கு காவியங்களின் படபடக்கும் 
இறக்கைகளுக்கு  பூசியது?


அழகின் அநித்தியத்தை நமக்குப் 
புரிய வைக்கத்தான் இந்த அழகோவியங்களுக்கு 
இத்தனை  குறைந்த ஆயுள் வைத்தானோ அந்தப் படைத்தவன்......

இல்லை...... அற்பப் புழுவிலிருந்து ,கூட்டுக்குள் அடங்கி,போராட்ட்டதுடன் வெளிவருவது தான்  பேரழகின் கம்பீரம்.....போராடு  சளைக்காதே .... என்று நம்மை சிந்திக்க வைத்து ஊக்கப்படுத்த இவைகள் பிறவி எடுத்தனவோ?

Tuesday, 10 January 2017

ஜூரோங் பறவைகள் பூங்கா -சிங்கப்பூர் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ







ஜூரோங் பறவைகள் பூங்கா -சிங்கப்பூர் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ 


காண கண் கோடி வேண்டும் ....
உலகின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்துள்ள வண்ண வண்ணப் பறவைக்கூட்டங்களை 
சிங்கப்பூர்  ஜரோங் பறவைகள் பூங்காவில் பார்த்து ரசிப்பது ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்...
அந்த அழகு வண்ணப் பறவைகளில் ஒரு சிலவற்றின் அணிவகுப்பு -
இந்த சிறிய ஸ்லைடு ஷோ ....










Monday, 2 January 2017

தோகை மயில்....அழகுக்கு இலக்கணம் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....



தோகை மயில்....அழகுக்கு இலக்கணம் ......

காணக்காண சலிக்காத ஒரு சில விஷயங்களில் 

அழகு மயில்களும் அடங்கும்......



இதோ அழகிய மயில்களின் அணிவகுப்பாய் 

ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....


தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .....

இந்த ஸ்லைடு ஷோவை நீங்கள் ரசித்தால் 

என் யு ட்யூப்  சேனலுக்கு வருகை தர அழைக்கிறேன்....

மறக்காமல் SUBSCRIBE செய்யவும்......


Sunday, 1 January 2017

ஸ்ரீ குருவாயூரப்பன்-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ...




ஸ்ரீ குருவாயூரப்பன்  மற்றும் குருவாயூர் கோவிலின் படங்கள் 
அடங்கிய  ஒரு சிறிய ஸ்லைடு ஷோ...

திரு யேசுதாஸின்  தேன் மதுர கீதத்துடன்...