badge

Followers

Tuesday, 18 February 2014

தீராத விளையாட்டுப் பிள்ளை.....












தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத) 


1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)


2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத) 


3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத) 


4. பின்னலைப் பின்நின்று இழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத) 


5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம். (தீராத) 


6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)


7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென்றால் அதைக் கேளா திழுப்பான்;
இளையாரொடு ஆடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத) 


8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)


9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத) 

6 comments:

  1. அருமையான இனிமையான பாட்டு...

    ReplyDelete
  2. தங்களின் கை வண்ணத்தில் உருவாக்கிய கண்ணனுக்கு ஏற்ற அருமையான பாடல்.

    முன்பே பார்த்த ஞாபகம். மீண்டும் தரிஸித்ததில் மிக்க மகிழ்ச்சியே.

    ReplyDelete
    Replies
    1. .தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ,சார்

      Delete
  3. இந்த கிருஷ்ணன் அலுமியம் ஃபாயில்ல எம்போஸ் பண்ணினதா? ரொம்ப அழகா இருக்கு. அதற்கேற்ற பாரதியாரின் பாடல் வரிகளும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,தானைத்தலைவி...அலுமினியம் தகட்டில் எம்போஸ் செய்த குட்டி கிருஷ்ணர் இவர்...கருத்துக்கு நன்றி...

      Delete